`குழந்தை பிறந்தால் தந்தைக்கும் 15 நாள்கள் விடுப்பு' - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - முழு விவரம்!

Nov 26, 2026 - 19:30
0
`குழந்தை பிறந்தால் தந்தைக்கும் 15 நாள்கள் விடுப்பு' - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - முழு விவரம்!

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, குழந்தை பிறக்கும் காலகட்டத்தில் 15 நாள்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள்ளோ எடுத்துக்கொள்ளலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கும் தனி விடுப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று, குழந்தை பிறக்கும் காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாள்கள் தந்தையர் விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விடுப்புக் காலத்தில் மனைவிக்குத் தேவையான உடல் மற்றும் மனரீதியான ஆதரவை வழங்குவதுடன், குழந்தையின் ஆரம்பகாலப் பராமரிப்பிலும் தந்தை முழுமையாகப் பங்கேற்க முடியும்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

தாய்க்கு ஓராண்டு... தந்தைக்கு 15 நாள்கள்!

தமிழ்நாட்டில் பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 2016-ம் ஆண்டு 180 நாள்களிலிருந்து 270 நாள்களாக உயர்த்தப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு 365 நாள்களாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் குழந்தை பிறந்த பின்னர் தாயின் உடல்நலம் மற்றும் குழந்தையின் பராமரிப்புக்குப் போதுமான கால அவகாசம் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், தந்தைக்கும் தனியாக விடுப்பு வழங்கப்பட்டிருப்பது, குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பையும் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதையும் அங்கீகரிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே நீதிமன்றம் வலியுறுத்திய விஷயம்!

தந்தையர் மகப்பேறுகால விடுப்பு தொடர்பான விவாதம் ஏற்கெனவே நீதிமன்றத்திலும் எழுந்திருக்கிறது. 2023-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, குழந்தை பிறந்த காலத்தில் தந்தையின் பங்களிப்பும் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டி, தந்தையர் விடுப்புக்கான ஏற்பாடுகள் குறித்து வலியுறுத்தியிருந்தது. குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியில் பெற்றோர் இருவரின் உடனிருப்பும் ஆதரவும் அவசியம் என்ற கருத்து இந்த விடுப்பு தொடர்பான விவாதங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.

மத்திய அரசிலும் 15 நாள் விடுப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஏற்கெனவே 15 நாள்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. இதற்கு முழு ஊதியமும் வழங்கப்படுவதுடன், அவர்களின் வழக்கமான விடுப்புக் கணக்கிலிருந்து இந்த நாள்கள் கழிக்கப்படுவதில்லை.

தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, அந்தந்த நிறுவனங்களின் நிர்வாகக் கொள்கைகளுக்கு ஏற்ப சில நாள்கள் முதல் சில வாரங்கள் வரை தந்தையர் விடுப்பு வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களின் குடும்ப நலனையும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பையும் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் இந்த முடிவு, அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User