`பாவம் பார்த்து கைத்தறிப் பொருளை வாங்காதீங்க; எங்க உழைப்பை மதிங்க போதும்!'- ஐடி ஊழியரின் நெசவு பயணம்
பெங்களூருவில் மாதம் எழுபதாயிரம் முதல் லட்சம் வரை சம்பளம்... கையில் நல்ல வேலை... நகர வாழ்க்கை... இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் சம்பளம் கூடும் நிலை, வசதிகள் பெருகும் என்ற சொகுசான பாதை அவருக்கு முன்பே இருந்தது. ஆனால், அந்தப் பாதையில் நடந்து கொண்டிருந்தபோதே ஒரு கேள்வி மட்டும் அவரை விடாமல் துரத்தியது.
தறியின் சத்தம்... தடக்... தடக்... தடக்... அந்தச் சத்தத்துக்கு நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு நெசவாளரின் வாழ்க்கை. ஒரு சேலை முடிய ஒன்றரை நாள் உழைப்பு. ஆயிரக்கணக்கான முறை அசையும் கை, கால்கள். அதற்குப் பின்னால் இன்னும் பலரின் உழைப்பு. ஒரு துணிக்குள் மறைந்திருக்கும் எண்ணற்ற உழைப்பைத் தேடிச் சென்ற ஒரு மனிதரின் கதை.
பணம் மட்டும்தான் வாழ்க்கையா..?
``நம்முடைய வாழ்க்கை வசதியாக மாறிக்கொண்டிருக்கும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் ஒரு தொழிலும்... அத்தோடு சேர்ந்து ஒரு தலைமுறையின் வாழ்க்கையும் அழிந்துகொண்டிருந்தால், நாம் அதை அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?"

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடித்தான் சென்னிமலையைச் சேர்ந்த சி. சிவகுருநாதனின் பயணம் தொடங்கியது. இப்படி சம்பாதிச்சுட்டே இருக்கிற வாழ்க்கை மட்டும் போதுமா...? ஒரு புத்தகம், சில சந்திப்புகள், பல பயணங்கள் எனக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கேள்விக்கான பதில் அவருக்குப் புரியத் தொடங்கியது.
விவசாயம், கிராம வாழ்க்கை, காந்திய சிந்தனைகள் எனப் பயணித்த அவரது தேடல்கள், இறுதியில் தன்னுடைய ஐ.டி வேலையை விட்டுவிட்டு திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் கைத்தறி கிராமங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்க வைத்தன. இன்று, சென்னிமலைப் பகுதியில் பாரம்பர்ய கைத்தறி நெசவாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
"நான் யாருக்கும் உதவி செய்யணும்னு மட்டும் இதுக்குள்ள வரல. முதல்ல இந்தத் தொழிலைப் புரிஞ்சுக்கணும்னு வந்தேன். நெசவு எப்படிப் பிறக்குது, ஒரு துணிக்குப் பின்னாடி எத்தனை பேருடைய உழைப்பு இருக்கு, அந்த உழைப்புக்கு ஏன் சரியான மதிப்பு கிடைக்கல... இதையெல்லாம் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்” என்கிறார் அவர்.

இறுதியில், அவரது பயணம் சென்னிமலையின் கைத்தறித் தறிகளுக்குள் வந்து நின்றது. பத்து ஆண்டுகள் ஐ.டி துறையில் வேலை பார்த்தவர். ஆனால், இன்று அந்த வேலையை விட்டுவிட்டு கைத்தறி நெசவாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். ஒரு சட்டை அல்லது சேலை கடைக்குள் வருவதற்கு முன், அதற்குப் பின்னால் எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்து வருகிறார், கைத்தறி நெசவாளர் சி.சிவகுருநாதன்.
“கைத்தறியைப் பாவம் பார்த்து வாங்காதீங்க... அதன் உண்மையான மதிப்பைப் புரிஞ்சு வாங்குங்க” என்பதுதான் அவருடைய குரலில் இருக்கும் அழுத்தமான வேண்டுகோள்.
எழுபதாயிரம் சம்பளத்தைவிட வாசிப்பும் அதன் தேடலும் முக்கியம்!
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷனில் டிப்ளமோ, பிறகு BCA Technology Management-ல் இளங்கலை மற்றும் MBA எனப் படித்தவர். வங்கித் துறையில் ஹார்ட்வேர், சாஃப்ட்வேர் எனச் சுமார் பத்து ஆண்டுகள் ஐ.டி. பணியில் இருந்திருக்கிறார். பெங்களூருவில் மாதம் ₹70 ஆயிரம் வரை சம்பாதித்துக்கொண்டிருந்தவர்.
ஆனால், வாசிப்பு அவருடைய வாழ்க்கையின் திசையை மாற்றியது. ‘மண்புழு’ உள்ளிட்ட சிற்றிதழ்கள், நம்மாழ்வார் போன்றவர்களின் சந்திப்பு, காந்திய சிந்தனைகள் எனப் பல அனுபவங்கள் அவருக்குள் புதிய தேடலை உருவாக்கின.

அவரது தேடலின் காரணமாக கர்நாடகா, ஆந்திரா, குஜராத், தென் தமிழகத்தின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்து பாரம்பர்யத் தொழில்களையும் கைவினைகளையும் பார்த்தவர், இறுதியில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை நெருக்கமாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். 2016-ல் திருச்செங்கோடு அருகே சென்னிமலையில் தனது கைத்தறிப் பயணத்தைத் தொடங்கினார்.
ஒரு சேலைக்குப் பின்னால் இருக்கும் பல பேரின் உழைப்பு!
கடையில் ஒரு கைத்தறிச் சேலையைப் பார்க்கும்போது, அது ஒரு துணியாக மட்டுமே தெரியும். ஆனால், அந்தத் துணி நம் கைகளுக்கு வருவதற்கு பல நாள்கள் உழைப்பு தேவைப்படுகிறது.
நூலைத் தயாரிப்பது, பாவு–ஊடை எனப் பிரிப்பது, கஞ்சியிடுவது, நூலைச் சீரமைப்பது, தறியைத் தயார் செய்வது என நெசவுக்கு முன்பே பல கட்டங்கள் இருக்கின்றன.
ஒரு சேலையை நெய்யவே சுமார் ஒன்றரை நாள் முழுமையான உழைப்பு தேவைப்படுகிறது. நெசவாளரின் கை, கால் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும்.

ஒரு சேலையை உருவாக்கும்போது நெசவாளரின் கை, கால்கள் 15 ஆயிரம் தடவைக்கும் மேலாக அசையும். மொத்தத்தில் ஒரு கைத்தறிப் பொருளுக்குப் பின்னால் குறைந்தது 30 பேருடைய உழைப்பு இருக்கும் என்கிறார். அந்த உழைப்பை அறியாமல், கடையில் விலையை மட்டும் பார்த்து நாம் பேரம் பேசுகிறோம்.
ஒரு நெசவாளரின் ஒரு நாள் உழைப்புக்கான மதிப்பு இதுதானா?
கைத்தறித் தொழிலின் மிகப்பெரிய சிக்கல் அதன் தயாரிப்பு முறையில் இல்லை. அதைச் செய்யும் மனிதர்களின் வாழ்க்கையில்தான் இருக்கிறது. ஆம் அவர் குறிப்பிடும் ஆய்வின்படி, ஒரு கைத்தறித் தொழிலாளியின் சராசரி தினக்கூலி சுமார் ₹270 மட்டுமே உள்ளது. அதிலும் நெசவுக்கு முன்பான பல பணிகளின் அதீத உழைப்பும் அடங்கிவிடுகிறது.
பல தலைமுறைகளாக நெசவு செய்த குடும்பங்களில்கூட இப்போது அடுத்த தலைமுறையில் உள்ளவர்கள் இந்தத் தொழிலுக்குள் வரத் தயங்குகிறார்கள். ஏனென்றால், தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களின் சராசரி வயது 55 முதல் 60 வயது வரை இருப்பதாக அவர் கூறுகிறார்.
மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு நெசவாளரால்கூட ஆயிரம் ரூபாய் தினசரி சம்பாதிக்க முடியாத நிலை இருக்கிறது. ``இதனால்தான் எந்தவொரு அனுபவமும் இல்லாத இளைஞர்கள், ஏன் இந்தத் தொழிலுக்கு வர வேண்டும் என்று யோசிக்கிறார்கள்" என்கிறார் சிவகுருநாதன்.
கைத்தறித் துணிகளை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்?
கைத்தறித் துணிகளைப் பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, நெசவாளருக்கு உதவ வேண்டும் என்ற பார்வையைத் தாண்டி, அதன் உண்மையான மதிப்பைச் சொல்லலாம்.
1.உடலுக்கு வசதியானது
தூய பருத்திக் கைத்தறித் துணிகள் காற்றோட்டமாக இருப்பதால், வெப்பமான காலநிலையிலும் உடலுக்கு இதமாக இருக்கும்.
2.இயற்கையான நாருக்கு முக்கியத்துவம்
கைத்தறியில் தூய பருத்தி போன்ற இயற்கை நார்கள் பயன்படுத்தப்படுவதால், செயற்கை நார்களை அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும்.
3.சுற்றுச்சூழலுக்கு ஏற்றது
கைத்தறி உற்பத்தியில் இயந்திரமயமான பெருமளவு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மின்சாரப் பயன்பாடு குறைவாக இருக்கும். அதனால், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வாழ்க்கை முறைக்கு இது உதவுகிறது.
4.ஒரு தொழிலாளியின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கிறது
நாம் வாங்கும் ஒவ்வொரு உண்மையான கைத்தறிப் பொருளுக்கும் பின்னால் நெசவாளர் மட்டுமல்லாமல், நூல் தயாரிப்பு, பாவு தயாரித்தல், கஞ்சியிடுதல் உள்ளிட்ட பல கட்டங்களில் பணியாற்றும் பலரின் உழைப்பு இருக்கிறது.

5.பாரம்பர்யத் தொழிலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும்
கைத்தறிப் பொருள்களுக்கு தொடர்ந்து சந்தை இருந்தால்தான் இளம் தலைமுறையும் இந்தத் தொழிலில் ஆர்வத்துடன் வர முடியும். இல்லையென்றால், தலைமுறைகளாக வந்த ஒரு திறமை மெதுவாக மறைந்துவிடும்.
6.நீண்ட காலப் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம்
தரமான கைத்தறித் துணிகளை முறையாகப் பராமரித்தால் நீண்ட காலம் பயன்படுத்த முடியும். அதிகமாக வாங்குவது என்பதற்குப் பதிலாக, தரமானதை வாங்கி நீண்ட காலம் பயன்படுத்துவது என்ற நுகர்வு முறையை இது ஊக்குவிக்கிறது.
7.வெயில் அதிகமாக இருக்கும் நம் தமிழகச் சூழலுக்கு, தூய பருத்திக் கைத்தறி ஆடைகள் உடலுக்கு காற்றோட்டத்தையும் இயல்பான இதத்தையும் தருகின்றன.
முக்கியமாக, கைத்தறித் துணியை நெசவாளருக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரக்கத்துடன் வாங்க வேண்டிய பொருளாகப் பார்க்கக் கூடாது. அது பல தலைமுறைகளின் திறமை, நேரம், உழைப்பு ஆகியவற்றால் உருவாகும் ஒரு தரமான பொருள். அதற்கான நியாயமான விலையைக் கொடுத்து வாங்குவதுதான் அந்த உழைப்புக்கு நாம் கொடுக்கும் உண்மையான மரியாதை என்கிறார்.
கைத்தறி என்ற பெயரில் நடக்கும் மோசடிகள்!
உண்மையான கைத்தறியைப் பாதுகாப்பது இன்னொரு காரணத்துக்காகவும் அவசியமாகிறது. சந்தையில் “கைத்தறி” என்ற பெயரைப் பயன்படுத்தி வேறு இடங்களில் தயாரிக்கப்படும் துணிகளை அதிக விலைக்கு விற்கும் நடைமுறையும் இருப்பதாக அவர் கூறுகிறார்.
அவரும் ஆரம்பத்தில் இது போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறார். கலப்பட நூல், பாலியஸ்டர் கலந்த நூல், முன்பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் போனவர்கள் எனத் தொழிலை நடத்துவதற்கே பல தடைகள்.

உண்மையான கைத்தறித் துணியினை அடையாளம் காண்பதற்கும் சில வழிகள் இருக்கின்றன.
கைத்தறி என்று சொன்னாலே அது கைத்தறிதானா?
சந்தையில் உண்மையான கைத்தறிப் பொருள்களுடன், Powerloom-ல் தயாரிக்கப்பட்ட துணிகளும் “Handloom” என்ற பெயரில் விற்கப்படுவதாக பல்வேறு செய்திகளும் அரசின் பதிவுகளும் காட்டுகின்றன. இதனால் வாடிக்கையாளர் ஏமாறுவதோடு, உண்மையாகத் தறியில் உழைக்கும் நெசவாளர்களும் விலைப் போட்டியில் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால்தான் அரசு Handloom Mark, QR Code உள்ளிட்ட அங்கீகார முறைகளைக் கொண்டு வந்திருக்கிறது. துணியில் காணப்படும் இயற்கையான சிறு ஏற்றத்தாழ்வுகள், ஓரங்களில் இருக்கும் பாரம்பர்ய அடையாளங்கள் போன்றவற்றையும் கவனிக்கலாம்.
நெசவாளருக்கு உதவி பண்றோம்னு நினைக்காதீங்க!
கைத்தறியைப் பாதுகாக்க வேண்டுமென்றால், முதலில் நுகர்வோரின் மனநிலை மாற வேண்டும் என்கிறார். ``கைத்தறித் துணியை வாங்குவது என்பது தொண்டு கிடையாது. அது அந்தப் பொருளுக்கான நியாயமான விலையை நாம் கொடுக்கிறோம் என்பதுதான்" என்பது அவரது கருத்தாக உள்ளது. தூய பருத்தித் துணிகள் உடலுக்கு காற்றோட்டத்தை வழங்குவதோடு, செயற்கை நார்களைக் காட்டிலும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கிறது. ஆனால், சுற்றுச்சூழல் நன்மைகளைப் பேசுவதைக் காட்டிலும் முக்கியமானது, அந்தத் துணியை உருவாக்கும் மனிதனின் வாழ்க்கையைப் பாதுகாப்பது.

கைத்தறிக்கு எதிர்காலம் வேண்டுமென்றால்...
ஒரு தொழில் அழிவதற்குக் காரணம், அந்தத் தொழிலைச் செய்யும் மனிதர்களின் அடுத்த தலைமுறை அதிலிருந்து விலகுவதுதான். அதனால், நெசவாளர்களுக்கு வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஊதியம், மருத்துவக் காப்பீடு, மழைக்கால வருமான இழப்புக்கான உதவி, தனியான கைத்தறி நிதி உள்ளிட்ட ஆதரவுகள் தேவை என்கிறார்.
``ஒரு நெசவாளர் தன்னுடைய குடும்பத்தை நிம்மதியாக நடத்துற அளவுக்கு மாதம் ₹25 ஆயிரம் முதல் ₹40 ஆயிரத்துக்கும் மேல சம்பாதிக்கணும். அப்போதான் அடுத்த தலைமுறை இந்தத் தொழிலுக்குள் வருவாங்க” என்கிறார்.
ஒரு காலத்தில் தனது குடும்பத்தின் அடையாளமாக இருந்த நெசவுத் தொழிலிலிருந்து விலகி ஐ.டி. துறைக்குச் சென்றவர்கள் பலர். ஆனால், இவர் ஐ.டி. துறையிலிருந்து விலகி மீண்டும் அந்தத் தறிக்கே வந்திருக்கிறார்.
இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பாரம்பர்யத் தொழிலான கைத்தறியை அறிமுகப்படுத்துகிறார். நெசவுத் தொழில்நுட்பங்களை ஆவணப்படுத்துகிறார். விவசாயிகள் மட்டும் கடவுள் இல்லை மனிதர்களின் மானத்தை காக்கும் நெசவாளர்களும் கடவுள் தான் என நெசவாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார் கைத்தறி நெசவாளர் சிவகுருநாதன்.
தறியில் ஓடும் ஒவ்வொரு நூலுக்குப் பின்னாலும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நூல் அறுந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நம் கைகளிலும் இருக்கிறது.
தனது கைத்தறிப் பயணத்தைத் நூற்பு என்ற கைத்தறி நெசவு அமைப்பாக தொடங்கி நடத்தி வருகிறார். ``பருத்திகளை திரியா திரிஞ்சு அதை நூலாக மாற்றுவதற்கு பெயர்தான் நூற்பு. இந்த நூற்பு அமைப்பின் நோக்கம் அழிஞ்சு வரும் கைத்தறித் தொழிலை மீட்டு, நெசவாளர்களையும் அவர்கள் தயாரிக்கும் கைத்தறி பொருள்களையும் ஒருங்கிணைப்பு செய்து அவற்றுக்கான உரிய விலையைப் பெற்றுத் தந்து, இந்த தொழில் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்" என்கிறார் சிவகுருநாதன்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)