மகாராஜா: "என்னால் முடியாது" - சச்சனாவின் நடிப்பை வியந்து பாராட்டிய டாம் ஹாங்க்ஸ்!

Nov 26, 2026 - 16:00
0
மகாராஜா: "என்னால் முடியாது" - சச்சனாவின் நடிப்பை வியந்து பாராட்டிய டாம் ஹாங்க்ஸ்!

“அந்தப் பொண்ணை என்னால் மறக்கவே முடியாது!” – மகாராஜாவைப் பார்த்து வியந்த டாம் ஹாங்க்ஸ்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கலை அருங்காட்சியகத்தில் (LACMA) நடைபெற்ற நிகழ்ச்சியில்... ஹாலிவுட்டின் பிரபல நடிகரான டாம் ஹாங்க்ஸ் 'மகாராஜா' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியாகி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா'.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் 2024-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்ராஜ் (நட்டி) மற்றும் அறிமுக நடிகை சச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மகாராஜா
மகாராஜா

குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான திரைக்கதையும், நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் நடித்ததற்காக சச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் 'மகாராஜா' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதில் நடித்த இளம் நடிகை சச்சனா நமிதாஸின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.

டாம் ஹாங்க்ஸை வியக்க வைத்த மகாராஜா!

சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் (International Academy of Television Arts & Sciences) நிர்வாகக் குழு உறுப்பினரான கவிதா குப்தா, இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற LACMA கலை நிகழ்ச்சி ஒன்றில் டாம் ஹாங்க்ஸைச் சந்தித்த கவிதா குப்தாவிடம், இந்தியாவில் இருந்து பார்க்க வேண்டிய மூன்று திரைப்படங்களைப் பரிந்துரைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

அதன்படி, கவிதா குப்தா பரிந்துரைத்த திரைப்படங்களில் 'மகாராஜா'வும் இடம்பெற்றுள்ளது.

சில வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற மற்றொரு LACMA கலை மற்றும் திரைப்பட நிகழ்ச்சியில் டாம் ஹாங்க்ஸை மீண்டும் சந்தித்தபோது, அவர் தானாகவே 'மகாராஜா' திரைப்படம் குறித்துப் பேசியுள்ளார்.

அப்போது, டாம் ஹாங்க்ஸ் கூறியதாக கவிதா குப்தா தெரிவித்ததாவது:

"அந்தப் பெண்ணின் நடிப்பை என்னால் இன்னும் மறக்கவே முடியவில்லை. என்னவொரு அற்புதமான நடிகை! அந்தக் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்கவே முடியாது. நான் அந்த நபரைக் கொன்றிருப்பேன்"

என்று டாம் ஹாங்க்ஸ் கூறியுள்ளார். இந்தக் கருத்து, 'மகாராஜா' திரைப்படத்தில் சச்சனா நமிதாஸ் வெளிப்படுத்திய நடிப்பின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

மகாராஜா

ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்த விஜய் சேதுபதி

இதற்கிடையில், 'மகாராஜா' திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, ஹாலிவுட் ரீமேக்கில் தனக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியுடன் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ஏற்கெனவே 'மகாராஜா 2' திரைப்படத்தின் கதையைத் தன்னிடம் கூறியுள்ளதாகவும், அந்தக் கதை மிகவும் அழகாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் ரீமேக்கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மேத்யூ மெக்கானகேவின் பெயர் பரிசீலனையில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை படக்குழுவினர் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User