சோட்டானிக்கரை அற்புதங்கள்-2: யட்சினியிடம் இருந்து காத்த அம்பிகை... பிரச்னைகள் தீர்க்கும் பஜனம்!

Nov 23, 2026 - 10:00
0
சோட்டானிக்கரை அற்புதங்கள்-2: யட்சினியிடம் இருந்து காத்த அம்பிகை... பிரச்னைகள் தீர்க்கும் பஜனம்!

அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது, 'அதி சௌம்ய அதி ரௌத்ர' என்பார்கள். அம்பாள் மிகவும் சாந்தமானவளாகவும் இருப்பாள். மிகவும் ரௌத்ரமாகவும் விளங்குவாள். சோட்டானிக்கரை பகவதி தினமும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்னும் மூன்று திருக்கோலங்களிலும் அருள்பவள் என்பதை ஏற்கெனவே கண்டோம்.

அவளை நாடி வருபவர்களின் துயர் தீர்ப்பவள். இத்தலத்தில் நிகழ்ந்திருக்கும் அற்புதங்கள் அநேகம். அவற்றில் முக்கியமானது குப்தன் நம்பூதிரிக்கு அருளியது.

குப்தன் நம்பூதிரி என்பவர் அம்பிகையின் தீவிர பக்தர். அம்பிகையை உபாசனை செய்து வந்த அவர், கதகளி கலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எங்கு கதகளி நடைபெற்றாலும் அங்கு சென்று பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருமுறை இரவு நேரத்தில் கதகளி நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் தன்னுடைய குருநாதரின் வீடு இருந்ததால், அங்கே தங்கிவிட்டு மறுநாள் காலையில் புறப்படலாம் என்று நினைத்தார்.

அப்போது வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவள் தானும் கதகளி பார்க்க வந்ததாகவும், இரவு நேரத்தில் தனியாகச் செல்லப் பயமாக இருப்பதால் அவருடன் துணைக்கு வருமாறும் கேட்டுக்கொண்டாள். குப்தன் நம்பூதிரியும் அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவளுடன் நடக்கத் தொடங்கினார்.

சிறிது தூரம் சென்றதும் குருநாதரின் வீடு வந்தது. அந்தப் பெண்ணைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, குருநாதரிடம் கொடுப்பதற்காகத் தன்னிடம் இருந்த ஓலைச்சுவடிகளைக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

நள்ளிரவில் கதவைத் தட்டிய குப்தன் நம்பூதிரியைப் பார்த்த குருநாதர் ஆச்சரியமடைந்தார். இரவு நேரத்தில் ஏன் வந்திருக்கிறாய் என்று விசாரித்தார். குப்தன் நம்பூதிரி நடந்தவற்றைக் கூறிவிட்டு, வெளியே ஒரு பெண் தனக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்ட குருநாதருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. வெளியே வந்து பார்த்த அவர், தன்னுடைய மந்திர சக்தியால் வந்திருப்பது சாதாரணப் பெண் அல்ல; யட்சி என்பதை உணர்ந்தார்.

அந்த யட்சி, குப்தன் நம்பூதிரியை உணவாக்கிக்கொள்ளும் நோக்கத்துடன் வந்திருப்பதாகவும், ஊரின் எல்லையைக் கடந்ததும் அவரைக் கொன்றுவிடத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். குப்தன் நம்பூதிரி இதை நம்ப மறுத்தார். 'இவ்வளவு நேரம் அந்தப் பெண்ணுடன் ஒன்றாகத்தானே நடந்து வந்தேன், அப்படியிருக்க அவள் ஏன் என்னைக் கொல்லவில்லை' என்று கேட்டார்.

அதற்கு குருநாதர், அவருடைய கையில் இருந்த தேவி மகாத்மிய ஓலைச்சுவடியே அவரைக் காப்பாற்றியதாக விளக்கினார். அம்பிகையின் சக்தி நிறைந்த அந்த ஓலைச்சுவடி கையில் இருந்ததால் யட்சியால் அவரை நெருங்க முடியவில்லை. அதைத் தன்னிடம் கொடுத்துவிட்டு வருமாறு அவள் கூறியதற்கும் அதுவே காரணம் என்றார்.

பின்னர் குருநாதர் மந்திரித்து ஒரு துணியைக் கொடுத்து, அதை உடலில் சுற்றிக்கொண்டு நேராகச் சோட்டானிக்கரை ஆலயத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆலயத்துக்குள் நுழைந்ததும் அந்தத் துணியை வெளியே வீசிவிட வேண்டும் என்றும் கூறினார். குப்தன் நம்பூதிரி அவ்வாறே செய்யத் தொடங்கினார்.

வழியில் அந்த யட்சி பலவிதமாகப் பேசி அவரைத் திசைதிருப்ப முயன்றது. அவர் எதற்கும் மசியாமல் ஆலயத்தை நோக்கி விரைந்தார். ஆலயத்தை அடைந்து உள்ளே காலடி வைத்ததும், குருநாதர் கூறியபடி துணியை வெளியே வீசினார். அப்போது அவருடைய ஒரு கால் மட்டும் வெளியே இருந்தது. அந்த யட்சி அந்தக் காலை இறுகப் பிடித்துக்கொண்டது.

உடனே குப்தன் நம்பூதிரி அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தித்தார். அப்போது அம்பிகை உக்கிரமான காளி சொரூபம் எடுத்து அந்த யட்சியைச் சம்ஹாரம் செய்ததாக ஐதிகம். ஆனால், அம்பிகை அந்த யட்சியை அழித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவளுக்கும் அருள் வழங்கினாள்.

அம்பிகையால் சம்ஹாரம் செய்யப்பட்ட அந்த யட்சிக்கும் ஆலயத்தில் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. அந்தச் சந்நிதி 'யட்சியம்மன்' என்று அழைக்கப்படுகிறது.

பஜனம் இருந்து வழிபடும் பக்தர்கள்

சோட்டானிக்கரை ஆலயத்தின் மற்றொரு சிறப்பு பஜனம் என்ற வழிபாட்டு முறையாகும். ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை முன்வைத்து, பக்தர்கள் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு நாள்கள் எனத் தங்களால் இயன்ற கால அளவுக்கு ஆலயத்திலேயே தங்கி வழிபடுவார்கள். அந்த நாள்களில் மூன்று வேளைகளிலும் அம்பிகையைத் தரிசிப்பது, கோயில் பிரசாதத்தை உண்பது, நமஸ்காரம் செய்வது, பிரதட்சணம் செய்வது போன்ற ஆலயம் தொடர்பான கைங்கர்யங்களிலேயே ஈடுபடுவார்கள்.

பிற விஷயங்களில் கவனம் செலுத்தாமல், தங்களுடைய பிரார்த்தனையை மட்டுமே மனத்தில் கொண்டு வழிபடுவார்கள். இதுவே பஜனம் எனப்படுகிறது. பஜனம் இருந்து வழிபட்டால் சகலவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வுகிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அம்பிகை இரவு நேரத்தில் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று, பஜனம் இருக்கும் பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்து அருள்புரிவதாக நம்பப்படுகிறது. குப்தன் நம்பூதிரியை யட்சியிடமிருந்து காப்பாற்றிய சம்பவமும் அம்பிகை இரவு நேரத்தில் ஆலயத்தை வலம் வருவதாகக் கூறப்படும் ஐதிகமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

அம்பிகை அந்த யட்சியைச் சம்ஹாரம் செய்த இடத்தில் தீர்த்தக்குளம் அமைந்துள்ளதாகவும், அங்கு அம்பிகை காளி சொரூபத்தில் எழுந்தருளியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரவு வேளையில் கோயில் வளாகத்தில் தங்குபவர்கள் அங்கே அம்மன் காவலுக்கு வரும் வேளையில் அம்மையின் கொலுசுச் சத்தத்தை இன்றும் கேட்பதாகவும் சொல்வார்கள். இந்த ஆலயத்தின் சிறப்பு குருதி பூஜை. வாருங்கள் குருதி பூஜை குறித்து மேலும் அறிந்துகொள்வோம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User