`3.65 நாட்களில் 100 ஆண்டுகள்' - சீனாவின் பிரமாண்ட CHIEF, இந்தியாவின் சுதர்சன் | ஒரு ஒப்பீடு

Nov 25, 2026 - 16:31
0
`3.65 நாட்களில் 100 ஆண்டுகள்' - சீனாவின் பிரமாண்ட CHIEF, இந்தியாவின் சுதர்சன் | ஒரு ஒப்பீடு

நூறு மீட்டர் உயரமுள்ள அணையின் அடித்தளம் நிலநடுக்கத்தின்போது எப்படித் தாக்குப்பிடிக்கும் என்பதை, ஒரு மீட்டர் அளவுள்ள மாதிரியை வைத்துச் சொல்லிவிட முடியுமா?

நிலத்தடியில் புதைக்கப்படும் நச்சுக் கழிவுகள், பல ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தடி நீரில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள, நிஜ உலகில் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆனால், அதை வெறும் மூன்றரை நாட்களில் ஆய்வகத்தில் பார்த்துவிட முடியும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். சீனா அதைச் செய்து கொண்டிருக்கிறது.

கிழக்கு சீனாவின் ஹாங்சோ நகரில், தரைக்கடியில் சுமார் 15 மீட்டர் ஆழத்தில் ஒரு பிரம்மாண்ட ஆய்வு மையம் அமைந்திருக்கிறது. பெயர் 'CHIEF' (Centrifugal Hypergravity and Interdisciplinary Experiment Facility). தமிழில் சொன்னால், அதீத ஈர்ப்பு விசை ஆய்வு மையம். இது சாதாரணச் சுழல் இயந்திரம் அல்ல. பூமியின் இயற்கையான ஈர்ப்பு விசையைப் பல நூறு மடங்கு அதிகரித்து, மண், பாறை, அணை, நிலச்சரிவு போன்றவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உதவும் தொழில்நுட்பக் கட்டமைப்பு. ஆனால் ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லிவிடலாம். இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது சீனா அல்ல. இதன் பிரம்மாண்டம்தான் இப்போதைய செய்தி.

Centrifugal Hypergravity and Interdisciplinary Experiment Facility

ஒரு பொருளை அதிவேகமாகச் சுழற்றினால் வெளிநோக்கிய விசை உருவாகும். சிறுவயதில் கயிற்றில் கல்லைக் கட்டிச் சுற்றியிருக்கிறீர்களா? அதேதான். மையவிலக்கு இயந்திரம் (Centrifuge), இந்த விசையைப் பயன்படுத்தி, பூமியின் ஈர்ப்பைவிடப் பல மடங்கு அதிக விசையை ஆய்வகத்துக்குள் உருவாக்குகிறது. இதுவே 'Hypergravity'.

இதில் என்ன மாயம்?

மண்ணும் பாறையும் தங்கள் சொந்த எடையால்தான் அழுத்தத்தைச் சுமக்கின்றன. ஒரு மீட்டர் மண் மாதிரியை 100 மடங்கு ஈர்ப்பில் சுழற்றினால், 100 மீட்டர் உயரக் கட்டமைப்பு அனுபவிக்கும் அழுத்தத்தின் சில அம்சங்களை அது உணரும். பெரிய அணையை நேரடியாகச் சோதிக்க முடியாது. ஆனால் அதன் குட்டி மாதிரியைச் சுழற்றிச் சோதிக்கலாம்.

காலமும் இப்படித்தான் 'சுருங்குகிறது'. அதே 100 மடங்கு ஈர்ப்பில், நூறு ஆண்டுகளில் நடக்கக்கூடிய மாசுப் பரவலை சுமார் 3.65 நாட்களில் மாதிரியாக ஆராய முடியும் என்கின்றன இந்த மையம் குறித்த தகவல்கள். அதற்குச் சோதனை, சரியான அளவியல் விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

அப்படியானால் காலத்தையே சுருக்கிவிட்டார்களா?

இல்லை.

காலம் அதன் போக்கில்தான் போகிறது. அதீத ஈர்ப்பும், கவனமாக அளவிடப்பட்ட நிபந்தனைகளும் சேரும்போது, சில மெதுவான செயல்முறைகளை வேகமாகப் பார்க்க முடிகிறது. அவ்வளவே. இயற்கையின் எல்லா நிகழ்வுகளையும் இயந்திரம் வேகப்படுத்திவிடாது.

g·tonne என்றால் என்ன?

CHIEF இயந்திரத்தின் திறனைப் பற்றிப் பேசும்போது, 1,300 g·tonne, 1,500 g·tonne, 1,900 g·tonne போன்ற அளவுகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் புரிந்துகொள்வது அவசியம்.

g·tonne என்பது ஈர்ப்பு முடுக்கத்தையும், இயந்திரத்தில் வைக்கப்படும் சுமையின் எடையையும் இணைத்துக் குறிப்பிடும் அளவீடு. உதாரணமாக, 100G விசையில் ஒரு டன் எடையைச் சுழற்றினால், அதன் அளவு 100 g·tonne. எனவே, 1,900 g·tonne என்பது 1,900 மடங்கு ஈர்ப்பு விசை என்று பொருளல்ல. இயந்திரத்தின் மொத்தச் சுமை தாங்கும் திறனையும் அதன் செயல்திறனையும் இணைத்துக் காட்டும் அளவீடுதான் இது.

CHIEF திட்டத்தில் CHIEF1300, CHIEF1500, CHIEF1900 என மூன்று பிரம்மாண்டமான மையவிலக்கு இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் CHIEF1300, 2025 செப்டம்பர் 29-ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது.

இது 1,300 g·tonne திறன் கொண்டது. அதிகபட்சமாக 300G வரை ஈர்ப்பு முடுக்கத்தை உருவாக்கும் திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சச் சுமை 20 டன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ஆறு பரிசோதனைக் கூடங்கள் உட்பட 18 ஆய்வுக் கருவிகளைப் பொருத்த முடியும்.

CHIEF1500 மற்றும் CHIEF1900 ஆகியவை முறையே 1,500 மற்றும் 1,900 g·tonne திறன் கொண்டவை. குறிப்பாக, CHIEF1900-ன் திறன் உலகின் மிகப்பெரிய ஹைப்பர் கிராவிட்டி ஆய்வு இயந்திரங்களில் ஒன்றாக இதை முன்னிறுத்துகிறது. சமீபத்திய தகவலின்படி, CHIEF1900 நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் முழுமையான செயல்பாடு தொடங்கிவிட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இவ்வளவு பெரிய இயந்திரத்தை ஏன் பூமிக்கடியில் அமைக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதிவேகத்தில் சுழலும் இயந்திரம் மிக அதிகமான அதிர்வுகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் சுற்றியுள்ள கட்டமைப்புகளையும், ஆய்வகத்தில் நடைபெறும் மற்ற பரிசோதனைகளையும் பாதிக்கக்கூடும். பூமிக்கடியில் அமைப்பதன் மூலம் வெளிப்புற அதிர்வுகளைக் கட்டுப்படுத்தவும், இயந்திரத்தின் செயல்பாட்டை நிலையாக வைத்திருக்கவும் முடியும்.

இன்னொரு முக்கியமான சவால் வெப்பம். இவ்வளவு வேகத்தில் ஒரு ராட்சத இயந்திரம் சுழலும்போது, காற்றின் உராய்வு மற்றும் இயந்திரத்தின் உள் பாகங்களில் ஏற்படும் இழப்புகள் காரணமாக அதிக வெப்பம் உருவாகலாம். இந்த வெப்பம் இயந்திரத்தின் செயல்பாட்டைப் பாதிப்பதுடன், ஆய்வின் முடிவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கியமான தேவையாகிறது.


இதற்காக இயந்திரத்தைச் சுற்றி வெற்றிடச் சூழல் உருவாக்கப்படுகிறது. காற்றின் அடர்த்தியைக் குறைப்பதன் மூலம் சுழற்சியின்போது ஏற்படும் காற்று உராய்வைக் குறைக்க முடியும். மேலும், திரவக் குளிரூட்டும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகின்றனர். இத்தகைய ஏற்பாடுகள், அதிவேகச் சுழற்சியின்போது இயந்திரம் பாதுகாப்பாகவும் நிலையாகவும் செயல்பட உதவுகின்றன.

இங்கே என்னென்ன ஆராயப் போகிறார்கள்? அணைகளின் பாதுகாப்பு, நிலநடுக்கத்தில் மண்ணின் நடத்தை, நிலச்சரிவு, மலைச்சரிவு நிலைத்தன்மை, கடலடிப் பொறியியல், ஆழ்நிலத்தடிச் சூழல், புதிய பொருட்கள் எனப் பட்டியல் நீள்கிறது. நிலத்தடிக் கழிவுக் கிடங்குகளிலிருந்து மாசு எப்படி நகரும் என்பதும் ஆய்வுக்குள் வருகிறது.

அணை ஆண்டுக்கணக்கில் நீரின் அழுத்தத்தையும், மண்ணின் தன்மையையும், நில அதிர்வையும் எதிர்கொள்கிறது. நிலநடுக்கப் பகுதிகளில் உள்ள அணையின் அடித்தளம் எவ்வளவு உறுதியானது என்பதை முன்கூட்டியே அறிவது உயிர்காக்கும் விஷயம். அளவு குறைத்த மாதிரியில் அதீத ஈர்ப்பையும் கட்டுப்படுத்தப்பட்ட அதிர்வுகளையும் செலுத்தி, பல சூழல்களை ஆய்வகத்திலேயே உருவாக்கிப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கு இது அந்நியக் கதை அல்ல. அணை என்பது இங்கே கோடிக்கணக்கான மக்களின் குடிநீர், விவசாயம், வாழ்வாதாரம். தமிழ்நாட்டின் மேட்டூர், பவானிசாகர் போன்ற அணைகள் நீர் மேலாண்மையின் முதுகெலும்புகள்.

செம்பரம்பாக்கம் ஏரி

இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசும்போது, 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட விதம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்தன.

தமிழ்நாட்டின் வெள்ள மேலாண்மை தொடர்பாக ஆய்வு செய்த இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG), செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்தை அறிவியல் அடிப்படையில் முன்கூட்டியே கணிக்கும் அமைப்பு இல்லை என்றும், நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு வசதி மற்றும் அவசரகாலச் செயல் திட்டம் இல்லாத குறைபாடுகள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.

இங்கே ஒன்றை நேர்மையாகச் சொல்ல வேண்டும். சுழல் இயந்திரம் ஆராய்வது மண்ணையும் அடித்தளத்தையும். செம்பரம்பாக்கத்தின் சிக்கல் முன்னறிவிப்பும் நிர்வாகமும். எனவே, CHIEF போன்ற இயந்திரம் மட்டுமே வெள்ளப் பாதிப்பைத் தடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், அணைகளின் அடித்தளப் பாதுகாப்பு, மண் மற்றும் பாறைகளின் தன்மை போன்றவற்றை ஆழமாக ஆய்வு செய்வதற்கு இது உதவக்கூடும்.

அதே நேரத்தில், அந்த ஆய்வு முடிவுகள் அணை மேலாண்மை முடிவுகளில் உண்மையாகப் பயன்படுகின்றனவா என்பதும் முக்கியமான கேள்வி.

சீனாவின் சாதனை என்ன?

ஹைப்பர் கிராவிட்டி ஆய்வுத் தொழில்நுட்பத்தைச் சீனா முதன்முதலில் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து எனப் பல நாடுகள் பல ஆண்டுகளாக இத்தகைய ஆய்வுகளைச் செய்து வருகின்றன. அமெரிக்காவின் Vicksburg மையம் 1995-ம் ஆண்டிலேயே செயல்படத் தொடங்கியது.   நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

ஆனால், CHIEF திட்டத்தின் தனிச்சிறப்பு அதன் பிரம்மாண்டமான திறனும், ஒரே வளாகத்தில் பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பும்தான்.

இந்தியாவும் இதில் பின்தங்கிவிடவில்லை. மும்பை ஐஐடியில் 'SUDARSHAN' எனும் தேசிய புவித் தொழில்நுட்ப மையவிலக்கு ஆய்வு மையம் செயல்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறை (DST), பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO), அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் உருவானது இது. இதன் இயந்திரம் 200 மடங்கு ஈர்ப்பு வரை உருவாக்கும்; 100g-ல் 2.5 டன் சுமையைத் தாங்கும்; மொத்தத் திறன் 250 g·tonne. மண் சரிவு, நிலச்சரிவு, வலுவூட்டப்பட்ட மண் கட்டமைப்புகள், நிலத்தடிக் கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்கு இது உதவுகிறது.

எண்களில் CHIEF-உடன் ஒப்பிட முடியாது என்பது உண்மைதான். ஆனால் அடித்தளம் இங்கும் இருக்கிறது என்பதும் உண்மை.

அடுத்து என்ன?

CHIEF போன்ற இயந்திரங்கள் இயற்கைப் பேரிடர்களைத் தடுத்து நிறுத்தும் மந்திரக் கருவிகள் அல்ல. ஆனால், பேரிடர்களுக்கு முன்பே அவற்றின் தாக்கங்களைப் புரிந்துகொள்ளவும், கட்டமைப்புகளின் பலவீனங்களைக் கண்டறியவும் உதவும் அறிவியல் கருவிகள். அணைகள், பாலங்கள், சுரங்கங்கள், கடலோரக் கட்டமைப்புகள் எனப் பெரிய திட்டங்களை உருவாக்கும்போது, அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இதுபோன்ற ஆய்வுகள் முக்கியமானவை.

அதீத ஈர்ப்பு, மேம்பட்ட கணினி மாதிரிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவை இணையும்போது, ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கேள்விகளுக்கு விரைவிலேயே விடை கிடைக்கலாம்.

மிகப் பெரிய அணைகளையும் அடர்ந்த நகரங்களையும் கொண்ட இந்தியா, SUDARSHAN போன்ற மையங்களின் திறனை விரிவுபடுத்த வேண்டாமா? அந்த ஆய்வு முடிவுகள் அணை மேலாண்மை முடிவுகளில் உண்மையாகப் பயன்படுகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான பதிலில்தான், அடுத்த பேரிடரில் நாம் எவ்வளவு தயாராக இருப்போம் என்பது அடங்கியிருக்கிறது.

தொழில்நுட்பத்தை உருவாக்குவது ஒரு பக்கம். அதன் மூலம் கிடைக்கும் ஆய்வு முடிவுகளை நடைமுறைத் திட்டங்களிலும் நிர்வாக முடிவுகளிலும் பயன்படுத்துவதுதான் உண்மையான சவால். சீனாவின் இந்த முயற்சி நமக்கு உணர்த்தும் முக்கியமான பாடமும் அதுதான்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User