`பாஜக-வின் துரந்தர் மாணிக்கம் தாகூர் ... பனையூர் பங்களாவுக்கு வாட்ச்மேன்!" – தமிழன் பிரசன்னா காட்டம்

Nov 26, 2026 - 18:31
0
`பாஜக-வின் துரந்தர் மாணிக்கம் தாகூர் ... பனையூர் பங்களாவுக்கு வாட்ச்மேன்!" – தமிழன் பிரசன்னா காட்டம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநரைச் சந்தித்திருக்கும் உதயநிதியை, கிண்டலாக விமர்சித்திருக்கும் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுத்துள்ளது தி.மு.க தரப்பு!

கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதான விவகாரம் தமிழக அரசியலையே தடதடக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்படும் தவெக எம்.எல்.ஏ மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்தார்

இதைத் தொடர்ந்து இன்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரையும் நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார். அந்த மனுவில், இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இவ்விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்' என்று ஆளுநரை விமர்சித்தவர்கள், இன்று அதே 'தபால்காரரிடம்' மனு கொடுக்க வரிசையில் நிற்பதாகக் கிண்டல் செய்திருக்கிறார். மேலும் அதிகாரம் கையில் இருந்தபோது ஆளுநர் பதவியே தேவையில்லை என்றவர்கள், இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணடைந்துவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

இது தி.மு.க தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னாவிடம் கேட்டபோது,

"மாணிக்கம் தாகூர், பாஜக-வின் துரந்தர் மாதிரி செயல்படுகிறார். உதயநிதி கவர்னரிடம் புகார் கொடுத்திருப்பது எதற்காக என்பதைப் புரிந்துகொண்டிருந்தால், மாணிக்கம் தாகூர் தார்மீகப் பொறுப்புடன் இந்த விவகாரத்தில் வாய் திறந்திருக்க மாட்டார்.

ஒரு மாவட்ட ஆட்சியருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து, அவரைப் பணிசெய்யவிடாமல் தொடர்ந்து தடுத்துவரும் ஒரு பாலியல் குற்றவாளி குறித்து 117 நாள்களாகியும் இந்த ஆட்சியாளர்கள் வாய் திறக்கவில்லை. தேசிய மகளிர் ஆணையமும் நீதிமன்றமும் தலையிட்ட பிறகும்கூட, அந்த நபரின் கட்சிப் பதவியைக்கூட நீக்கத் துணிவில்லாத கோழைத்தனமான தலைமைதான் இந்தக் கட்சியில் இருக்கிறது. அத்தகைய கோழைத்தனத்தை ஆதரிப்பவர்களை என்னவென்று சொல்வது?

நாங்கள் வெளிப்படையாக கவர்னரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். 117 நாள்களாகத் தலைமைச் செயலாளர் மௌனமாக இருக்கிறார். சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியிடமே, ‘வேறு மாவட்டத்துக்கு மாறிப் போகிறீர்களா?’ என்று கேட்கிற அளவுக்கு வஞ்சகமும் துரோகமும் நடந்திருக்கிறது.

இது குறித்து தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்கவும், உரிய பரிந்துரைகளைச் செய்யவும், பிரச்னையைத் தீர்க்கவும் அல்லது முறைகேடுகள் தொடராமல் தடுக்கவும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒரு வழிமுறை ஆளுநர்தான்.

ஆளுநர் என்பவர் இந்த நாட்டுக்கு அவசியமற்றவர்; ‘ஆட்டுத் தாடி’தான் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 'ஆளுநர் தேவையில்லை' என்று சொல்லும் மாணிக் தாகூர், அந்த மாநிலங்களின் ஆளுநர் மாளிகை வாசலில் சென்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கட்டும். அப்படிச் செய்ய அவருக்குத் தைரியம் இருக்கிறதா?

தமிழன் பிரசன்னா

பிரச்னையைத் திசைதிருப்புவது மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகப் பேசுகிற, அவருக்கு முட்டுக்கொடுக்கிற ஒரு நபராக மாணிக்கம் தாக்கூர் செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்துவரும் மாணிக்கம் தாகூர், இந்த விவகாரத்தில் த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர்போல், ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாகப் பேசுவதை என்னவென்று சொல்வது?

ஆளுநரை நாங்கள் ‘போஸ்ட்மேன்’ என்று சொல்லித்தான் அணுகியிருக்கிறோம். அவரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். அறிக்கையைக் கேட்டு வாங்குங்கள், உரிய பரிந்துரைகளைச் செய்யுங்கள் என்றுதான் வலியுறுத்தியிருக்கிறோம்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட நிர்வாக அதிகாரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைக்கான அதிகாரம் யாரிடம் இருக்கிறது, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதுகூடத் தெரியாமல் பேசுகிறார் மாணிக்கம் தாகூர்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல், டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூர், த.வெ.க-வுக்கும் பனையூர் பங்களாவுக்கும் வாட்ச்மேன் மாதிரி செயல்பட்டு வருகிறார்!" என்றார் காட்டமாக.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User