வெடியை மறந்த கிராமம்: பறவைகளுக்காக 50 ஆண்டு தியாகம் - இனிப்பு கொடுத்து வனத்துறை நெகிழ்ச்சி!

Nov 01, 2026 - 10:01
0
வெடியை மறந்த கிராமம்: பறவைகளுக்காக 50 ஆண்டு தியாகம் - இனிப்பு கொடுத்து வனத்துறை நெகிழ்ச்சி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ளது கொல்லுக்குடிப்பட்டி கிராமம். இங்குள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தருகின்றன.

சுமார் ஆறு மாதங்கள் வரை இங்கு தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்துவிட்டுத் தங்களது சொந்த ஊருக்குப் பறந்து செல்லும் இந்தச் சிறகு விருந்தினர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் கொல்லுக்குடிப்பட்டி கிராம மக்கள் உறுதியாக உள்ளனர்.

கொல்லுக்குடிப்பட்டி கிராமம்

இதன் காரணமாக, சுமார் 50 ஆண்டுகளாக தீபாவளித் திருநாளில் பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை இவர்கள் முற்றிலுமாகத் தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர விசேஷங்களின்போதும் வாணவெடி போன்ற அதிக சத்தம் எழுப்பும் வெடிகளைப் பயன்படுத்துவதில்லை.

பறவைகளின் நலனுக்காக இக்கிராம மக்கள் காட்டி வரும் இந்த மாபெரும் தியாக உணர்வைப் போற்றும் வகையில், வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் இவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் கொல்லுக்குடிப்பட்டி மற்றும் வேட்டங்குடிப்பட்டி கிராம பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கொல்லுக்குடிப்பட்டி கிராமம்

அப்போது கிராம மக்கள், "இந்த வேட்டங்குடி சரணாலயத்தின் பெயரை 'கொல்லுக்குடிப்பட்டி சரணாலயம்' என மாற்ற வேண்டும்" என்று தங்களது பல ஆண்டு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரனிடம் நாம் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் கூறியதாவது:

"வேட்டங்குடி என்ற பெயரை மாற்றுவதுதான் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது; இதுகுறித்து அரசாங்கத்திற்கு முன்பே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, விரைவில் அரசிலிருந்து முறையான அறிவிப்பு வெளியாகும். சம்பளம் வாங்கி வேலை பார்க்கும் எங்களைத் தாண்டி, எந்தவித ஊதியமும் எதிர்பார்க்காமல் கடந்த இரண்டு, மூன்று தலைமுறைகளாகத் தங்களது சொந்த ஊருக்குள் வரும் பறவைகளைப் பாதுகாத்து வருவது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மனிதநேயமிக்க செயலாகும்.

இந்த ஆண்டு வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் பிற வெளி மாநிலங்களிலிருந்தும் பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. சாம்பல் கூழைக்கடா, சின்ன சீழ்க்கைச் சிறகி, நீலச்சிறவி, நத்தை குத்தி நாரை (Asian open bill stork), மஞ்சள் மூக்கு நாரை (Painted stork), நாமக்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன் (Black headed ibis), குருட்டுக் கொக்கு, உண்ணிக்கொக்கு, பாம்புத்தாரா, சிறிய நீர்க்காகம், முக்குளிப்பான் உள்ளிட்ட பல வகைகளைச் சேர்ந்த பறவைகள் வந்துள்ளன.

இந்த ஆண்டு மழை குறைவாக இருந்தாலும், வெளிநாட்டுப் பறவைகள் வரத் தொடங்கிவிட்டன; வழக்கம்போல் இந்த ஆண்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வர வாய்ப்புள்ளது..." என்றார்.

பறவைகளின் சிறகடிப்பை மட்டுமே தங்களுக்கான கொண்டாட்டமாக மாற்றிய கொல்லுக்குடிப்பட்டி மக்களின் இந்த மனிதநேயம் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User