இயற்கை கொடுத்த பரிசு! - சிறுகதை

Nov 27, 2026 - 02:30
0
இயற்கை கொடுத்த பரிசு! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

காவியாவின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. நான்கு சகோதரர்களுக்குச் சொந்தமான நிலங்கள் இன்னும் பிரிக்கப்படாமல் இருந்ததால், நான்கு வீடுகளும் அருகருகே அமைந்திருந்தன. அந்த எலுமிச்சை மரம் யாராலும் நடப்பட்டதல்ல. தானாக முளைத்து வளர்ந்தது. அதற்குத் தண்ணீர் ஊற்றியதோ, உரமிட்டதோ, கவாத்து செய்ததோ யாருமில்லை. ஆனால், மரம் காய்க்கத் தொடங்கியதும் காவியாவின் மாமியாருக்குத் தனி அக்கறை வந்துவிட்டது.

அவ்வப்போது மரத்தைப் பார்த்துக்கொள்வார். அதில் காய்க்கும் எலுமிச்சைக் காய்களையும் பழங்களையும் யாரும் பறித்துவிடக் கூடாது என்பதில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பார். மரத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்ளாதவர்கள்கூட அதன் கனிகளுக்கு உரிமை கொண்டாடத் தயாராக இருந்தார்கள்.

அந்த எலுமிச்சை மரத்தின் அடியிலேயே ஒரு கொய்யாச் செடியும் தானாக முளைத்திருந்தது. அதுவும் யாருடைய கவனிப்புமின்றி மழையையும் மண்ணின் ஈரத்தையும் நம்பி வளர்ந்துகொண்டிருந்தது. எலுமிச்சை மரத்தைப் போலவே அதற்கும் யாரும் தண்ணீர் ஊற்றியதில்லை; உரமிட்டதில்லை. ஆனால், அதைப் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.

அந்த நாட்களில் காவியா கந்த சஷ்டி விரதம் இருந்தாள். ஆறு நாட்களும் இரவில் மட்டுமே உணவு. அதுவும் உப்பு சேர்க்காத தயிர். ஆறாம் வகுப்பு படிக்கும் அவளுடைய மகளும் அம்மாவைப் பார்த்து விரதம் இருந்தாள்.

நான்காவது நாளிலிருந்தே காவியாவின் வாயில் லேசான கசப்பு ஏற்பட்டது. கொய்யாவின் இளந்தளிர் இலைகளை மென்று அதன் சாற்றை விழுங்கினால் கசப்பு நீங்கும் என்று நினைத்தாள். தோட்டத்திற்குச் சென்று ஒரு நுனி இலையைப் பறித்து வாயில் போட்டு மென்றாள். ஆனால், அவளுடைய மனதில் கொய்யாப்பழத்தின் மீதான ஆசை மட்டும் குறையவில்லை.

கொய்யாப்பழம் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக, மரத்திலேயே நன்றாகப் பழுத்த பழத்தின் வாசனை அவளுக்கு அலாதியான மகிழ்ச்சியைத் தரும்.

ஆறாவது நாள் மாலை.

விரதம் முடிந்ததும் சாப்பிடுவதற்காக உப்பு கடலையும் பொரியும் வாங்கலாம் என்று நினைத்தாள். அப்போது தெருவில் குட்டி யானை வண்டியில் அவற்றை விற்றுக்கொண்டு ஒருவர் வந்தார். அவரை அழைத்து வீட்டின் அருகே நிறுத்தச் சொன்னாள். தேவையானவற்றை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தாள். வண்டியைத் திருப்பிச் செல்ல வேண்டுமென்றால் தோட்டத்திலிருந்த எலுமிச்சை மரத்தின் அருகேதான் செல்ல வேண்டும். வண்டி திரும்புவதற்கு வழிவிட்டு காவியா சற்று ஒதுங்கினாள். அப்போதுதான் அவளுடைய பார்வை அந்தக் கொய்யாச் செடியின் மீது விழுந்தது. அதில் ஒரு பெரிய கொய்யாப்பழம் பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தது! அந்தச் செடியின் முதல் கனி அது.

வாங்கிய பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு வேகமாகத் தோட்டத்திற்கு வந்தாள். மெதுவாகப் பழத்தைத் தொட்டாள். தொட்டதுமே அது கையோடு வந்துவிட்டது. அவ்வளவு பழுத்திருந்தது! பழத்தை முகத்தின் அருகில் கொண்டுசென்றாலே அதன் வாசனை அவளுக்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்றைத் திடீரென்று பெற்ற குழந்தையைப்போலத் துள்ளிக் குதித்தாள்.

"அம்மா! என்னம்மா இவ்வளவு சந்தோஷம்?" என்று மகள் கேட்டாள். "இந்தப் பழத்தைப் பாரேன்! எவ்வளவு அழகா இருக்கு! என்ன வாசனை தெரியுமா?" என்றாள்.

மகளிடம் கைப்பேசியைக் கொண்டுவரச் சொல்லி, அந்தப் பழத்தையும் செடியையும் புகைப்படம் எடுத்தாள். பழத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, செடியின் இலைகளை மெதுவாகத் தடவினாள்.

"உனக்கு நான் தண்ணீர்கூட ஊற்றியதில்லை. ஆனாலும், இன்னைக்கு எனக்கு இவ்வளவு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கியே!" என்று செடியிடம் பேசினாள்.

அம்மாவின் செயலைப் பார்த்த மகள் சிரித்தாள். "அம்மா, செடிக்கிட்டயும் பேசுவியா?" "ஏன் பேசக்கூடாது? நமக்கு மகிழ்ச்சி கொடுக்கிறதுக்கு நன்றி சொல்லணும் இல்லையா?" என்றாள் காவியா.

அந்த முதல் கனியை வீட்டிற்குள் எடுத்துச் சென்று முருகனுக்குப் படைத்தாள். விரதம் முடிந்ததும் மகளுடன் சேர்ந்து உப்பு கடலையும், பொரியும், அந்தக் கொய்யாப்பழத்தையும் பகிர்ந்து சாப்பிட்டாள். பழத்தின் சுவையைவிட அதன் வாசனையும், அது கிடைத்த தருணமும் அவளுடைய மனதில் இனிய நினைவாகப் பதிந்தன. மறுநாள் காலையில் எழுந்ததும் முதலில் தோட்டத்திற்குச் சென்றாள். அந்தக் கொய்யாச் செடியின் அடியில் வட்டப்பாத்தி அமைத்து, தண்ணீர் ஊற்றினாள்.

அதைப் பார்த்த மகள், "அம்மா, நேத்து வரைக்கும் இந்தச் செடியைக் கண்டுக்கவே இல்லையே! இன்னைக்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை?" என்று கேட்டாள்.

காவியா புன்னகைத்தாள்.

"நம்ம யாரும் கவனிக்காமலேயே இது வளர்ந்திருக்கு. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காம, தனக்குக் கிடைச்ச மழைநீரை வச்சு வளர்ந்து, தன்னோட முதல் பழத்தையே நமக்குக் கொடுத்திருக்கு. இதுவரைக்கும் உன்னை நான் கவனிக்கவே இல்லை. ஆனா, நீ எனக்கு இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கே. இனிமேல் உன்னை அப்படியே விட்டுவிட மாட்டேன். அன்போடு பார்த்துக்கொள்வேன்!" என்றாள்.

மகள் எலுமிச்சை மரத்தைப் பார்த்தாள். பிறகு கொய்யாச் செடியைப் பார்த்தாள். "அம்மா, இந்த இரண்டு மரங்களுமே யாரும் வைக்காம தானாவே வளர்ந்ததுதானே? அப்புறம் ஏன் பாட்டி எலுமிச்சை மரத்தை மட்டும் பார்த்துக்கிறாங்க?"

காவியா சற்றுநேரம் அமைதியாக இருந்தாள்.

"அது காய்க்க ஆரம்பிச்சதும் எல்லாருக்கும் அதன் பழம் முக்கியமாயிடுச்சு. இந்தச் செடி இன்னைக்குத்தான் நம்ம கவனத்துக்கு வந்திருக்கு. சில நேரம் நாம ஒரு பொருளோட பயனைப் பார்த்துத்தான் அதுக்கு மதிப்புக் கொடுக்கிறோம். ஆனா, அது வளரும்போது அதற்குத் தேவையான அன்பைக் கொடுக்க மறந்துடுறோம்" என்றாள்.

காற்றில் கொய்யாச் செடியின் இலைகள் மெதுவாக அசைந்தன. இரண்டு மரங்களுமே யாருடைய பராமரிப்புமின்றித் தானாக முளைத்து வளர்ந்தவைதான். “ஒன்றின் கனிகள் மட்டும் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டன; மற்றொன்றின் இருப்புக்குக்கூடக் கவனம் கிடைக்கவில்லை.” ஆனால், அந்தக் கொய்யாவின் முதல் கனி காவியாவுக்கு ஒரு புதிய உணர்வைக் கொடுத்திருந்தது. இனி கனிகளுக்காக மட்டுமல்ல, அவற்றைத் தந்த மரங்களுக்காகவும் அக்கறை காட்ட வேண்டும் என்று முடிவு செய்தாள். இரண்டு மரங்களையும் அன்போடு பராமரிக்கத் தொடங்கினாள்.

இயற்கை மட்டும் எந்த வேறுபாடும் பார்க்கவில்லை. தனக்குக் கிடைத்த மழையையும் மண்ணின் வளத்தையும் கொண்டு வளர்ந்து, காலம் வந்தபோது தன் முதல் கனியை வழங்கியது. அன்று காவியாவுக்குக் கிடைத்தது ஒரு கொய்யாப்பழம் மட்டுமல்ல. மனிதர்கள் கவனிக்கத் தவறிய இடங்களிலும் இயற்கை தன் அன்பைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வும்தான்.

அவள் அந்தச் செடியை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். அதன் இலைகள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. அது எதையும் கேட்கவில்லை. எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒரு பழத்தின் மூலம் ஒரு மனதையே மாற்றியிருந்தது. மனிதன் கனிகளுக்காக மரங்களைத் தேடுகிறான். இயற்கையோ, தன்னைத் தேடி வராதவர்களுக்குக்கூடக் கனிகளையும் வளங்களையும்  வழங்குகிறது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User