விளவங்கோட்டில் வீழ்ந்த விஜயதரணி - `3 முறை வென்றவர் 3-ம் இடத்தில்' - சறுக்கியது எங்கே?

May 04, 2026 - 11:32
0
விளவங்கோட்டில் வீழ்ந்த விஜயதரணி - `3 முறை வென்றவர் 3-ம் இடத்தில்' - சறுக்கியது எங்கே?

கேரள எல்லையில் அமைந்துள்ள விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டி.டி.பிரவீன், பா.ஜ.க சார்பில் விஜயதரணி, நா.த.க சார்பில் மரிய ஸ்டெல்லா, த.வெ.க சார்பில் மைக்கேல் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். டி.டி.பிரவீன் தென் கேரள சி.எஸ்.ஐ சபை செயலாளராக உள்ளார். கேரளத்தைச் சேர்ந்தவருக்கு தமிழ்நாட்டில் சீட் கொடுக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. பிரவீன் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக பா.ஜ.க வேட்பாளர் விஜயதரணி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். விஜயதரணி காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக வென்ற தொகுதி இது. அவர் பதவிக்காலம் முடியும் முன்பே பா.ஜ.க-வில் இணைந்ததுடன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். விளவங்கோட்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளுக்கு செல்வாக்கு அதிகம் உண்டு. கேரளாவில் உள்ள டி.டி.பிரவீனுக்கு உள்கட்சியில் நிலவும் அதிருப்தி காரணமாகவும், 3 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த செல்வாக்கு காரணமாகவும் வென்றுவிடலாம் என கணக்குப்போட்டிருந்தார் விஜயதரணி.

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் டி.டி.பிரவீன்

இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் விளவங்கோடு தொகுதியில் 4-ம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் டி.டி.பிரவீன் 15,681 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். த.வெ.க வேட்பாளர் மைக்கேல் குமார் 8,629 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பா.ஜ.க வேட்பாளர் விஜயதரணி 6,436 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளார். இது விஜயதரணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டி.டி.பிரவீன் - விஜயதரணி

மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி தொகுதிக்கு அவ்வப்போது மட்டுமே சென்று வந்ததும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. திடீரென கட்சி மாறிச் சென்றதும் உள்ளூர் மக்களிடையே அவரது செல்வாக்கு சரிய காரணமாக அமைந்தது. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க-வில் நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என ஏற்கெனவே விஜயதரணி அதிருப்தியில் இருந்தார். பாரம்பர்ய காங்கிரஸ் வாக்குகள் பெரும்பாலும் கை சின்னத்துக்கு சென்றுள்ளது. ஆனால், பா.ஜ.க வாக்குகளை அதிகமாக த.வெ.க கைப்பற்றி உள்ளது. இதுவே விஜயதரணி வீழ்வதற்கு காரணமாகிவிட்டது.

(அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User