ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகும் பத்தமடை பாய் - திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Nov 07, 2026 - 21:30
0
ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகும் பத்தமடை பாய் - திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதே போல, நெல்லை மாவட்டம், ”பத்தமடை” என்றாலே தரையில் படுத்து உறங்கும் கோரைப்புல்லால் நெய்யப்பட்ட பாய்தான் நினைவுக்கு வரும். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த பத்தமடைப் பாய்,  மத்தியரசின் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது. இந்தப் பாய் நெசவுத் தொழிலை  இஸ்லாமியப் பெண்கள் தங்களது  தலைமுறைகளின்  பாரம்பரியமாகவும்,  பண்பாட்டு அடையாளமாகவும்  செய்து வருகிறார்கள். இதில்,  பெண்கள் பாய் நெய்வதில் முழுமையாக ஈடுபடுகிறார்கள். 

பாய் நெசவு

ஆனால்,  ஆண்கள் புல் அறுவடை செய்வது, சந்தைப்படுத்துவது போன்ற வெளி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பாய்களின் தரம் மற்றும் அதிலுள்ள வேலைப்பாடுகளைப் பொறுத்து ஒரு  பாய்   150 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை  விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாகத் திருமண பாய்களில் மணமக்களின் பெயர்கள், அவர்களின் உருவப்படங்களை நெய்வதில்  தனித்துவமான திறமையைப் பெற்றுள்ளார்கள். இதன் விலை தனி.   பெரிய பண்டல் கோரைப்புல்லின் விலை ரூ.1,300-ல் இருந்து ரூ.2,500 வரை விலை உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.  

இதன் எதிரொலியாக பட்டுப்பாயின் விலை ரூ.3,000-ல் இருந்து ரூ.4 ஆயிரம் வரை விலை உயர்ந்துவிட்டது. அதேபோல், சாதாரண பாயின் விலை ரூ.150-ல் இருந்து ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வாறாக ரகம், கோரைப்புல்லின் தரம், வேலைப்பாடுகளைப் பொறுத்து ரூ.50- முதல் ரூ.1,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பத்தமடை பாயின் விலை உயர்வு குறித்து பத்தமடையைச் சேர்ந்த பாய் உற்பத்தியாளர்கள் சிலரிடம் பேசினோம், ”நெல்லையில் இருந்து சுமார்  29 கி.மீ., தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் ஆரம்பத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பத்தமடைப் பாய்  நெசவு செய்வதை வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர்.

பாய் நெசவு

ஆனால், விலைவாசி உயர்வு, தொழிலாளர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பத்தமடையில் பாய்த்தொழில் தற்போது நலிவடைந்துள்ளது.  இந்த பாய் உற்பத்தியில் சுமார் 300 குடும்பத்தினர்  ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 50-க்கும் குறைவான குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவில்  ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள். அதிலும், கைத்தறி நெசவு செய்பவர்கள் 10-க்கும் குறைவானவர்களே உள்ளனர்.  பெரும்பாலும் தற்போது விசைத்தறிகள்தான் ஓடுகிறது. தமிழ் நாட்டில்  பத்தமடை தவிர திருச்சி, கரூர், சீர்காழி, கொள்ளிடம், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற இடங்களிலும் கோரைப்பாய்கள் நெய்யப்பட்டு வந்தாலும்,” பத்தமடைப்பாய்” தான் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பிற மாவட்டங்களில் பாய் நெய்வதற்கான கோரைப்புற்களை தோட்டத்தில் பயிரிட்டு உற்பத்தி செய்கின்றனர். ஆனால், பத்தமடையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இயற்கையாகவே வளரும் கோரைப்புற்களைக் கொண்டு பாய் நெய்வதால் அந்த பாய், உடலுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வராமல் தடுப்பதாக நம்பப்படுகிறது. பெரும்பாலும் பாய் நெய்யும் தொழிலில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக தாமிரபரணி நதியில் சோலைக்காடுகள் அழிக்கப்பட்டதால் கோரைப்புற்கள் அதிக அளவு கிடைப்பதில்லை.

உற்பத்தி செய்யப்பட்ட பாய்கள்

இதனால், பத்தமடை நெசவாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம், காவிரியாற்றுப் படுகையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் கோரைப் புற்களை வாங்கி பாய் நெசவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது, எல் நினோவால் ஏற்பட்டுள்ள வறட்சியால் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோரைப்புல்லின்  விலை 60 முதல் 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சாயம், நூலின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பத்தமடை பாயின் விற்பனை விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நலவாரியம் மூலம் எங்களுக்கு ஊக்கத்தொகை அளித்து, தொழில் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விலை வாசியை கட்டுப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும்”  என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User