Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: சேர்க்க, தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா?

Nov 08, 2026 - 09:00
0
Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: சேர்க்க, தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 65 வயது. அவருக்கு லேசான குளிர், மழை என வானிலை மாறினாலே மூட்டு வலி வந்து அவதிப்படுவது வழக்கம்.  இந்த வலிக்கு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும், உணவுமுறையில் ஏதேனும் மாபற்றங்கள் செய்ய வேண்டுமா... வலி குறைக்கும் உணவுகள் என ஏதேனும் உள்ளனவா?

பதில் சொல்கிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் இ. லெட்சுமணன்

உணவியல் ஆலோசகர் இ. லெட்சுமணன்

குளிர்காலத்தில் சிலருக்கு மூட்டுவலி, மூட்டு இறுக்கம் (Joint Stiffness) மற்றும் வீக்கம் போன்றவை அதிகமாக உணரப்படலாம். குறிப்பாக, மூட்டுத் தேய்மானம் (Osteoarthritis) மற்றும் முடக்குவாதம் (Rheumatoid Arthritis) உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

உணவுப்பழக்கங்கள் மூட்டு ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், உடலில் ஏற்படும் அழற்சியைக் கட்டுப்படுத்த உதவவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், மூட்டு வலி உள்ளவர்கள்,  சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

குளிர்காலத்தில் தாகம் குறைந்தாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மூட்டுகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். தினமும் மிதமான நடைப்பயிற்சி மற்றும் மூட்டுகளுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்:


ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: ஆளி விதை (Flax seeds), வால்நட், சியா விதைகள் மற்றும் மீன் ஆகியவை

கால்சியம் நிறைந்த உணவுகள்: பால், தயிர், ராகி, எள், கீரை வகைகள் போன்றவை.

வைட்டமின் டி: முட்டையின் மஞ்சள் கரு, வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால் போன்றவை.

 ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, கீரைகள், கேரட் போன்றவை.

 புரதச்சத்து: பருப்பு வகைகள், பால், தயிர், முட்டை போன்றவை.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மூட்டுகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும்.


தவிர்க்க வேண்டிய மற்றும் குறைக்க வேண்டிய உணவுகள்:


அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகள்.

அதிக உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகள்.

அதிக அளவு சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி.


உணவியல் ஆலோசகர்  இ. லெட்சுமணன்:

திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் உணவியல் ஆலோசகராகப் பணிபுரிகிறார்.



உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User