`பணம், தங்குமிடம், உணவு இல்லை?' - பேட்மிண்டன் வீரர்களை ஐரோப்பாவில் நிர்கதியாக விட்ட விளையாட்டுத்துறை

Nov 03, 2026 - 17:00
0
`பணம், தங்குமிடம், உணவு இல்லை?' - பேட்மிண்டன் வீரர்களை ஐரோப்பாவில் நிர்கதியாக விட்ட விளையாட்டுத்துறை

ஐரோப்பாவில் உள்ள பின்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் நடைபெறும் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து வீரர்கள் சென்று இருந்தனர். இதற்கான செலவுகளை இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் இம்முறை அங்கு சென்ற பிறகுதான் வீரர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து நிதியை மத்திய விளையாட்டுத்துறை ஒதுக்கவில்லை என்று தெரியவந்தது. அனைத்து வீரர்களும் ஐரோப்பாவிற்கு சென்ற பிறகுதான், இது குறித்து வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பி.வி.சிந்து மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் நடந்த ஹைலோ ஓபன் போட்டியில் ஒற்றையர் பட்டங்களை வென்றனர். மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து பி.வி.சிந்து கூறுகையில், ``நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை அறிந்தபோது நான் சற்று அதிர்ச்சியடைந்தேன். நிதி ஏன் கிடைக்கவில்லை என்று வியந்தேன்.

இது போன்ற ஒரு சூழலை நான் இதற்கு முன்பு எதிர்கொண்டதில்லை. ஆனால் அந்தச் சூழலில், நிதி உதவி கிடைக்கவில்லை என்றால் விளையாட மாட்டேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை, போட்டிகளில் பங்கேற்பதும், நான் செய்ய வேண்டியவற்றில் கவனம் செலுத்துவதும், ஆட்டத்தை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்பதில் கவனம் செலுத்துவதுமே முதன்மையானதாக இருந்தது. நிதி உதவி கிடைக்காதது நிச்சயமாக ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நான் ஓரளவு சொந்தமாக நிதி ஏற்பாடு செய்துகொண்டேன்'' என்றார்.

நிதிச் சிக்கல் காரணமாக, இந்தச் சுற்றுப்பயணத்தின் பெரும்பகுதியில் தங்களின் பயணம், உணவு மற்றும் தங்குமிடச் செலவுகளை வீரர்களே கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்லாந்தில் நடைபெற்ற தொடக்கப் போட்டிக்கான தங்குமிட வசதிகளைச் செய்து தருவதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI) வீரர்களிடம் உறுதியளித்திருந்தாலும், எஞ்சிய போட்டிகளுக்கான செலவுகளை வீரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இதன் தாக்கம் ஆடுகளத்திலும் எதிரொலித்தது. சில விளையாட்டு வீரர்களால் தங்கள் பயிற்சியாளர்களுடன் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், போட்டிகளின்போது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வழக்கமான ஆதரவு கிடைக்காமல் போனது. பிரெஞ்சு ஓபன் தொடரில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை அகானே யமாகுச்சியைத் தோற்கடித்த அஷ்மிதா சலிஹாவுக்கு, அந்தப் போட்டியின்போது சக வீராங்கனை இஷாராணி பருவா துணையாக இருந்தார். அதேபோல், டென்மார்க் ஓபன் தொடரில் தன்வி ஷர்மாவும் பயிற்சியாளர் எவருமின்றிப் பங்கேற்றார்.

நிதி ஒதுக்காதது ஏன்?

ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததே இந்த நிதி திரும்பப் பெறப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் எதையும் வெல்லவில்லை. ஆனால் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெறவில்லை என்பதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் மறுத்துள்ளது.

இது குறித்து இந்திய விளையாட்டுத்துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் பயனத்திற்கான செலவு பட்டியலை சமர்ப்பிக்க தவறிவிட்டது. எனவேதான் நிதி ஒதுக்கப்படவில்லை. விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு 30 நாள்களுக்கு முன்பு அதற்கான செலவு தொடர்பான விவரத்தை விளையாட்டுத் துறைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User