ரூ.5 கோடி லஞ்சம் வாங்கினாரா இன்ஸ்பெக்டர்?”-தனியார் மருத்துவமனை விவகாரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

Oct 10, 2026 - 12:00
0
ரூ.5 கோடி லஞ்சம் வாங்கினாரா இன்ஸ்பெக்டர்?”-தனியார் மருத்துவமனை விவகாரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன். இவர் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் வசித்து வருகிறார். தனியார் மருத்துவமனை விவகாரத்தில் அதன் நிர்வாக இயக்குநரிடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக சொல்லப்படும் புகாரில் சுகுமாறனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன்

இந்த விவகாரம் தொடர்பாக விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், தஞ்சாவூர் ரகுமான்நகர் 3-வது குறுக்குதெருவைச் சேர்ந்தவர் டாக்டர் சரவணன்(37). இவரது சித்தப்பா பாஸ்கரன் முக்கிய புள்ளி. இவர்கள் டாக்டர் ராமசாமியை பங்குதாரராக இணைத்துக் கொண்டு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் A To Z என்ற பெயரில் தனியார் பல்நோக்கு மருத்துவமனை நடத்தி வந்தனர். இந்நிலையில் சரவணன் மற்றும் டாக்டர் ராமசாமி தரப்புக்கு இடையே நிர்வாக ரீதியாக பிரச்னை ஏற்பட்டது. இதற்கிடையில் சுங்காதிடலைச் சேர்ந்த திருமாறன் என்பவர் A To Z மருத்துவமனை கட்டுமானம் குறித்து புகார் மனு அளித்திருந்தார்.

புகார் அளித்ததற்காக அப்போது சரவணனும், பாஸ்கரனும் திருமாறனை மிரட்டும் ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. இதுதொடர்பாக திருமாறன் மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் பாஸ்கரன் மீது எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாஸ்கரன் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

சோதனை நடத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீடு

இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தொடர்பான பிரச்னையில் டாக்டர் ராமசாமியை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ராமசாமி தரப்பு மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து சரவணனும் புகார் அளித்ததாக சொல்கிறார்கள். இதைத்தொடர்ந்து இருதரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்கிறார்கள். இதனை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் முன்னின்று செய்ததாக சொல்கிறார்கள். இதில் டாக்டர் ராமசாமியின் பங்கு சரவணன் தர்ப்பில் இருந்து செட்டில் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், உள்நோக்கத்துடன், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து எங்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் காவல் துறை உயர் அதிகாரி செயல்பட்டு வருகிறார் என்றும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்கள் மருத்துவமனை விவகாரங்களில் சட்டத்திற்கு புறம்பாக இடையூறு செய்யும் காவல் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபியிடம் சரவணன் புகார் மனு அளித்தார்.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கை விசாரிக்க தமிழக டிஜிபி கடந்த செப்.12ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சரவணனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் காவல் துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், இதில் காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர் ரூ.5 கோடி வரை கேட்டதாகவும், இவற்றில் ரூ.3.25 கோடி பணமாகவும், ரூ.1.75 கோடி காசோலையாகவும் சுகுமாறனிடம் வழங்கியதாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பங்குதாரர்கள், வழக்கு தொடர்பான காவல் ஆய்வாளர்கள் மற்றும் பலரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறன் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணையில் ஈடுப்பட்டனர். கதவை சாத்திக்கொண்டு பல மணி நேரம் சுகுமாறனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள், வீடியோ பதிவுகளை கைப்பற்றியதாக தெரிகிறது. இதையடுத்து சுகுமாறனை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக உடல்நிலை பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இன்ஸ்பெக்டர் சுகுமாறன்

அங்கு தனக்கு நெஞ்சு வலிப்பதாக சுகுமாறன் கூறிய நிலையில் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். மேலும் விசாரணையில் ரூ.5 கோடி லஞ்சம் விவகாரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் சொல்லி நான் இதை செய்தேன் என்றும் சுகுமாறன் சொன்னதாக சொல்கிறார்கள். சுகுமாறன் மீது ஏற்கனவே பல சர்ச்சைகள் உள்ள நிலையில் அவர் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர். இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User