செலவு, வீடு, கார், ஷேர் மார்க்கெட், கிரெடிட் கார்டு: பக்காவாக பிளான் செய்ய நிதி ஃபார்முலாக்கள்!
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஸ்கூல் படிக்கும்போது, கணிதமும், ஃபார்முலாக்களும் அலர்ஜியாக இருந்திருக்கலாம்.
ஆனால், இங்கே பார்க்கப் போகும் ஃபார்முலாக்கள் நமக்கு அலர்ஜியாக இல்லாமல், நிதி ரீதியாக வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு நாம் நகரப் பெரிதாக உதவும்.
1. 50-30-20 ரூல்
கையில் சம்பளமோ, வருமானமோ வந்துவிட்டதா? அதை 50 சதவிகிதம் - 30 சதவிகிதம் - 20 சதவிகிதம் என்று மூன்றாகப் பிரியுங்கள்.
இதில் 50 சதவிகிதத்தில் வாடகை, வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், போக்குவரத்துச் செலவுகள், கடன் ஆகிய அத்தியாவசியங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த 30 சதவிகிதத்தில் ஷாப்பிங், பொழுதுபோக்கு, அவுட்டிங் ஆகியவற்றைச் செய்துகொள்ளுங்கள். மீதி இருக்கும் 20 சதவிகிதத்தை ஸ்ட்ரிக்டாகச் சேமிப்பு அல்லது முதலீட்டிற்கு எடுத்து வைத்துவிடுங்கள்.

2. 20% டவுன் பேமென்ட் ரூல்
சொந்த வீடு என்பது இங்கே பெரும்பாலானவர்களின் கனவு. நமக்கு வரும் வருமானத்தில் காசு சேர்த்து வைத்து வீடு வாங்குவதெல்லாம் நடக்காத ஒன்று.
அதனால், இப்போது பலர் வீட்டுக் கடன் சாய்ஸிற்குச் சென்றுவிடுகின்றனர். வீட்டுக் கடன்தான் வாங்குகிறோமே என்றில்லாமல் டவுன் பேமெண்டிற்கான 20 சதவிகிதப் பணத்தை நீங்கள் எந்தக் கடனும் இல்லாமல் ரெடி செய்துவிடுங்கள்.
மேலும், வீட்டுப் பதிவிற்குத் தேவையான பதிவுக் கட்டணத்திற்கும் கடன் இல்லாமல் பணத்தைத் தயார் செய்யுங்கள். இது கடன் சுமையைக் குறைக்கும்.
3. 20 - 4 - 10 ரூல்
கார் என்பது இப்போது பொருளாதார ஸ்டேட்டஸாக மாறிவிட்டது. பெரும்பாலும் காரையும் இ.எம்.ஐ.யில் தான் வாங்குகிறோம். காருக்குக் கடன் வாங்கும்போது, 20 சதவிகித டவுன் பேமென்ட் உங்கள் கையில் இருப்பது நல்லது.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் காருக்கான கடனைப் போடாதீர்கள். கார் தேய்மானச் சொத்து என்பதால், 4 ஆண்டுகளுக்கு மேலும் கார் கடன் கட்டியிருந்தால், உங்களுக்கு லாபம் இல்லை.
காருக்கான உங்களுடைய மாத இ.எம்.ஐ., தொகை உங்களுடைய மாத வருமானத்தின் 10 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது.

4. 6 மாத ரூல்
உங்களுடைய மாதச் செலவு அல்லது மாத நிதித் தேவையைக் கணக்கு செய்யுங்கள். அதை 6-ஆல் பெருக்கி, அந்தத் தொகையைச் சிறுகச் சிறுகச் சேமிக்கத் தொடங்குங்கள். இது எமர்ஜென்சி ஃபண்டாகும்.
அடிக்கடி லே ஆஃப்கள் நடக்கின்றன... எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அந்த நேரங்களில் 6 மாதங்கள் வாழ்க்கையை நிதிச் சிக்கலின்றி ஓட்ட இந்தப் பணம் முக்கியத் தேவை.
6 மாதக் காலத்தில் உங்களுடைய அடுத்தகட்டப் பிளானை முடிவு செய்துக்கொள்ளலாம். இது அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய தம்ப் சட்டம் என்றுகூடச் சொல்லலாம்.
5. 10× ரூல்
உங்கள் குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் நீங்கள் என்றால், கட்டாயம் ஆயுள் காப்பீட்டை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய ஆண்டு வருமானத்தை 10-ஆல் பெருக்கி, அந்தத் தொகைக்கான காப்பீட்டை எடுத்து வையுங்கள்.
உங்களுக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் ஆனால்கூட, உங்கள் குடும்பம் நீங்கள் இல்லாமல் நிதிப் பாதுகாப்புடன் இருக்க இது உதவும்.
6. 100 - வயது ரூல்
பங்குச்சந்தையில் முதலீடு செய்வது ரிஸ்க்குடன் கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
வயது ஆக ஆக, ரிஸ்க் எடுப்பதைக் கட்டாயம் குறைக்க வேண்டும். இதனால், பங்குச்சந்தை முதலீடுகளில் இக்விட்டியில் முதலீடு செய்வதற்கு முன்பு, 100-ஆல் உங்களுடைய வயதைக் கழியுங்கள்.

உதாரணத்திற்கு, உங்களுடைய வயது 30 என்றால், 100 - 30 = 70. இப்போது நீங்கள் 70 சதவிகித முதலீட்டை இக்விட்டியில் முதலீடு செய்யலாம். மீதத் தொகையைத் தங்கம், கடன் பத்திரம் என்று சரியாக அசட் அலோகேஷன் செய்து முதலீடு செய்யலாம்.
7. 30% கிரெடிட் கார்டு ரூல்
இன்றைய உலகில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிரெடிட் கார்டில் இருக்கும் மொத்த கிரெடிட் லிமிட்டையும் ஸ்வைப் செய்துவிடாமல், 30 சதவிகிதத் தொகையை மட்டும் பயன்படுத்துங்கள். இது உங்களுடைய நிதிச் சுமையைக் குறைக்கும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)