`பிள்ளைக்காக தன் அடையாளத்தையே தள்ளிவைத்தவர்..!'- ஷோபா சந்திரசேகருக்கு விருது வழங்கிய விகடன் MD
தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகருக்கு 'பெஸ்ட் மாம்' விருதை வழங்கியது அவள் விருதுகள். இந்த விருதை ஷோபா சந்திரசேகருக்கு வழங்கியவர், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா. சீனிவாசன்.
ஷோபா சந்திரசேகர் குறித்து பா.சீனிவாசன் பேசியதாவது...
``ஒவ்வொரு தாயுமே கொண்டாடப்பட வேண்டியவர்தான். தன் அன்பாலும் தியாகத்தாலும் தலைமுறையையே தாங்கிப்பிடிக்கும் சக்தி தாய்மைக்கு மட்டுமே உண்டு.
`பிள்ளைகளின் கனவுகள் நனவாக வேண்டும்’ என நினைப்பதும், தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவதும் அம்மாக்களின் இயல்பு. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பிரபல கல்லூரியில் விஸ்காம் படித்துக்கொண்டிருந்த ஓர் இளைஞர், சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு தன் பெற்றோர் முன்னால் போய் நின்றார்.

அதிகம் பேசாத, கூச்ச சுபாவம்கொண்டவராக இருந்த அந்த இளைஞருக்கு 'சினிமாவெல்லாம் சரியா வராது' என்றார்கள் பலரும். ஆனால் `தன் மகன் நிச்சயம் சாதிப்பான்’ என முழுமையாக நம்பி, அவருக்காக நின்றார் ஒரு தாய்.
நடிகரான பிறகும் ஏராளமான விமர்சனங்கள். புதிதாக ஒரு கலைஞன் சினிமாவில் அறிமுகமாகும்போது இயல்பாக எழுகிற விமர்சனங்கள்தான். எல்லாவற்றையும் கடந்து, பதற்றப்படாமல் மகனின் மன உறுதியைக் காத்தார் அவர். 'Ignore Negativity' என்ற தாரக மந்திரத்தை அந்த இளைஞர் மனதில் ஆழமாகப் பதித்தவர் அவர்.
`ஒரு பிள்ளை பிறக்கும்போது ஒரு தாயும் பிறக்கிறாள்’ என்றார் ஓஷோ ரஜனீஷ். பிள்ளைக்காகவே பிறந்தவர்போல விளங்கினார் இந்தத் தாயார்.
தன் பிள்ளையின் வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் தன் அடையாளத்தையே பின்னுக்குத் தள்ளிவைத்தவர். கர்னாடக இசைக்கலைஞராக, திரைப்படப் பின்னணிப் பாடகியாக அடையாளம்கொண்ட ஷோபா, மகனின் வளர்ச்சிக்காகத் தனது கனவுகளைச் சுருக்கிக்கொண்டவர்.
`தன் மகன் முன்னணி நடிகராக வேண்டும்’ என்று ஆசைப்பட்டார். அப்படியே நடந்தது. `தன் மகன் நம்பர் ஒன் இடத்துக்கு நகர வேண்டும்’ என விரும்பினார். அதுவும் நடந்தது.

பெரிய சம்பளம், உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் என எல்லாவற்றையும் உதறிவிட்டு ஒருநாள், `அரசியலில் இறங்கப்போகிறேன்’ என்று மகன் சொன்னபோதும் ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தார்.
60 ஆண்டுக்கால தமிழக அரசியலில் மாபெரும் இரு கட்சிகளை வீழ்த்தி, மிகப்பெரிய மக்கள் சக்தியாக உருவெடுத்து, கர்ஜனையாக `சி.ஜோசப் விஜய் எனும் நான்...’ என நேரு ஸ்டேடியத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து, தன் மகன் தமிழக முதல்வராக அமர்ந்த அந்தக் கணத்தில், முன்வரிசையில் அமர்ந்தபடி, நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகக் கண்கலங்கினார் அவருடைய அருமைத்தாய் திருமதி ஷோபா சந்திரசேகர்.
அரசியல் தங்களுக்கு அந்நியமானது என்று விலகியிருந்த இளைஞர் கூட்டத்தை, சமூகத்தின் மீது அக்கறைகொள்ள வைத்து, அரசியலை நோக்கித் திருப்பியவர் திரு. விஜய். அந்த மாற்றத்தின் பின்னணியில், மகனை உருவாக்கி, வழிநடத்திய தாயின் அன்பும், தன்னலமற்ற தியாகமும் நிச்சயம் பேசப்பட வேண்டும்.. போற்றப்பட வேண்டும்.
முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு அவரின் அபார உழைப்பு காரணம். அவரின் தைரியம் காரணம். அவரின் தன்னம்பிக்கை ஒரு காரணம். இவை எல்லாவற்றையும் விஜய்க்கு ஊட்டி வளர்த்த திருமதி. ஷோபா சந்திரசேகர் அவர்களுக்கு `பெஸ்ட் மாம்’ விருதை வழங்கி அழகு பார்க்கிறது அவள் விகடன்.’’
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)