நடுரோட்டில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை; "இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்" - பீகார் அமைச்சர் பேச்சு
பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து தனது ஆண் நண்பருடன் திரும்பிக்கொண்டிருந்த 10வது மாணவியை ஒரு கும்பல் வழிமறித்துச் சூழ்ந்துகொண்டது, அவர்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவர்களைத் தாக்கி பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி மானபங்கம் செய்த பிறகு அங்கிருந்து செல்ல அனுமதித்தது.
இது தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் பரவியது. ஒரு காணொலியில், அந்தச் சிறுவன் ஸ்கூட்டரை ஓட்ட, சிறுமி அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்க பலரும் அவர்களைச் சூழ்ந்திருப்பதைக் காண முடிகிறது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அச்சிறுவனையும் சிறுமியையும் துரத்திச் செல்வதை மற்றொரு காணொளி காட்டுகிறது.
அச்சிறுவனின் சட்டைக் கழுத்துப் பகுதியை ஒருவர் பிடித்து இழுப்பதையும் அதில் காண முடிகிறது. அப்போது அவர்கள் இருவரும் அந்தக் கும்பலிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோருகின்றனர். அந்த மைனர் சிறுவன், தாங்கள் ஒரே பள்ளியில் பயில்வதாகவும், தங்கள் உறவு குறித்து வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்றும் அவர்களிடம் கூறுகிறான்.


அப்போது அந்தக் கும்பலில் இருந்த ஒருவர் சிறுவனை அறைந்துவிட்டு, "அவர்களுக்குத் தெரியும் என்றால், அவர்களை இப்போதே வரவழை," என்று கூறுகிறார். மற்றொருவர், "குடும்பத்தினரை வரவழை," என்று கூறுகிறார்.
அந்தப் பெண் கைகூப்பி, தங்களைச் செல்ல விடுமாறு அந்தக் கும்பலிடம் கெஞ்சுவது காணொளியில் தெரிகிறது. மற்றொரு காணொளியில், தயவுசெய்து எங்களைச் செல்ல விடுங்கள், நாங்கள் இனி ஒருபோதும் இங்கு வரமாட்டோம் என்று அம்மாணவி கூறுவது கேட்க முடிகிறது.
அந்தக் காணொளியில், இறுதியில் அந்தக் கும்பலில் உள்ள சிலர், "போங்கள், போங்கள்" என்று கூறி, அந்த இருவரையும் அங்கிருந்து செல்லுமாறு சொல்வது கேட்கிறது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறைந்தது ஆறு முதல் ஏழு இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்பிரச்னையை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் பீகாரில் காட்டாட்சி நடப்பதாகத் தெரிவித்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், "இது மிகவும் வருந்தத்தக்க ஒரு சம்பவம். எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது, ஆனால் அரசாங்கத்திற்கோ எந்தவித வெட்கமோ கூச்சமோ இல்லை. 'பெண்கள் இரவில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்' என்று சம்ராட் சௌத்ரி (துணை முதல்வர்) கூறுகிறார். ஆனால், பகலோ அல்லது இரவோ - பீகாரில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதே எதார்த்தம்," என்று கூறினார். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
பீகாரில் காட்டாட்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து மாநில அமைச்சர் ஷர்வன் குமாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''மானபங்கம் போன்ற தனிப்பட்ட சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். இது போன்ற தனிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது. உலகில் குற்றம் இன்னும் ஒழிந்துவிடவில்லை," என்று கூறினார். அமைச்சரின் இக்கருத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமைச்சரின் கருத்து குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் உமேஷ் குஷ்வாஹாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "சில நேரங்களில் நாக்கு தவறி அத்தகைய கருத்துகள் வெளிப்படலாம். ஆனால், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களிலும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், இனிமேலும் எடுப்போம்," என்று கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)