ரூ.600-க்கு ஒரு கிலோ மட்டன்! கிலோ கணக்கில் அள்ளும் மக்கள்: சிவகங்கை பனங்குடி 'நாட்டின்' அதிரடி மாடல்
இன்றைய காலகட்டத்தில் கறிக்கடை வாசலில் நிற்கும்போதே பர்ஸ் பதைபதைப்பது அசைவப் பிரியர்களுக்கு வழக்கமான ஒன்றுதான். சிவகங்கை, காரைக்குடி போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் வெள்ளாட்டுக் கறி கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை ‘ரெக்கை கட்டி’ப் பறந்துகொண்டிருக்கிறது.
ஆனால், அதே சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை மற்றும் கல்லல் அருகே உள்ள பனங்குடி கிராமத்திற்குச் சென்றால், அப்படியே ஆச்சரியத்தில் வாய் அடைத்துப் போகிறது! காரணம்... அங்கே ஒரு கிலோ தரமான வெள்ளாட்டுக் கறி வெறும் ரூ.600 மட்டுமே!
அதுவும் ஏதோ தீபாவளி ஆபரோ அல்லது பண்டிகை காலத் தற்காலிகச் சலுகையோ அல்ல... வருடத்தின் 365 நாட்களும் இதே நிலைதான்!
கிராமக் கட்டுப்பாடு தந்த கிஃப்ட்!
"இவ்வளவு குறைந்த விலையில் எப்படி சாத்தியம்?" என்று விசாரித்தால், அதன் பின்னணியில் நிற்பது பனங்குடி நாட்டின் பாரம்பரிய ஊர்க் கட்டுப்பாடுதான் (நாட்டு கூட்டம்).

நடராஜபுரம், பனங்குடி, திருத்திப்பட்டி, மும்முடிசன்பட்டி, வீரனேந்தல்பட்டி, சூரம்பட்டி உள்ளிட்ட 15 கிராமங்களை உள்ளடக்கியதுதான் இந்த 'பனங்குடி நாடு'. காலங்காலமாக ஊர்க் கூட்டம் போட்டு எடுக்கும் முடிவுகளுக்கு இன்றும் மக்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.
அப்படி ஊர்க் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிராமத்தில் வெள்ளாட்டுக் கறி விலையைக் கட்டுப்படுத்த ஒரே ஒரு கடைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதியை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் அசாருதீன் என்பவர் பெற்று, கிலோ ரூ.600-க்குக் கறி விற்பனை செய்து வருகிறார்.
பனங்குடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரிடம் பேசியபோது, "பனங்குடி நாடுங்கிறது 15 கிராமங்களை உள்ளடக்கியது. பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து 'நாடு' என்கிற பாரம்பரிய அமைப்பைப் பன்னெடுங்காலமாகக் கட்டமைத்து, அதன்படிதான் இன்னைக்கும் செயல்பட்டு வர்றோம்.
இந்த நாட்டு அமைப்பின் மூலம் ஊர்த் திருவிழாக்கள் நடத்துறது, விவசாய காலங்கள்ல தண்ணீர் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறது, சிறு சிறு பிரச்சினைகளுக்கு ஊருக்குள்ளேயே சமரசத் தீர்வு காண்பதுன்னு பல நன்மைகளைச் செஞ்சுட்டு வர்றோம்.

அப்படி ஒரு நன்மையான விஷயம்தான் இந்த ஆட்டுக் கறிக்கான ஓராண்டு நிலையான விலை நிர்ணயம். வாரந்தோறும் சந்தை நடைபெறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதே ரூ.600 விலைதான் என்பதால், கறி வாங்க மக்கள் கூட்டம் முண்டியடிக்கும்.
இந்தத் தீபாவளிக்கு எப்படியும் 500 முதல் 600 வெள்ளாட்டுக் கிடாய்கள் வரை வெட்டப்படும். இதுக்காக நேற்று இரவு முதலே சுற்றுவட்டார மக்கள் பனங்குடியை நோக்கி படையெடுத்து வந்து ஆட்டுக் கறியை அள்ளிச் செல்கின்றனர். இங்கே விலை மட்டும் குறைவுன்னு நினைக்க வேண்டாம், தரத்திலும் எந்தக் குறையும் இருக்காது! தரமான வெள்ளாடுகள் மட்டுமே இங்கே வெட்டப்படுது.
இதனால் சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் இந்த பனங்குடியைத் தேடி வர்றாங்க. இன்னைக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாம அரசாங்கமே திணறிட்டு இருக்கும்போது, எங்களோட 'பனங்குடி நாடு' ஒரு கிலோ மட்டனுக்கு 600 ரூபாய்னு நிர்ணயம் செய்து அதை வெற்றிகரமா செயல்படுத்தி வர்றது எங்கள் பனங்குடிக்கே பெரும் பெருமை..." என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

அலைமோதும் அசைவப் பிரியர்கள்!
நகரத்து விலையோடு ஒப்பிடும்போது கிட்டத்தட்ட பாதி விலையிலேயே தரமான வெள்ளாட்டுக் கறி கிடைப்பதால், சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமல்லாது, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அசைவப் பிரியர்கள் பனங்குடியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விசேஷ நாட்களில் பனங்குடி கறிக்கடை வாசலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் குறிப்பாக, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் கறி வாங்க வரும் மக்களின் வாகனங்களால் அந்தப் பகுதியே திருவிழாக்கோலம் பூண்டு விடுகிறது.
நகரங்களில் அசைவப் பிரியர்களின் பர்ஸை வெறுமையாக்கும் விலைவாசிக்கு மத்தியில், பாரம்பரிய ஊர்க் கட்டுப்பாடும் மக்கள் நலனும் இணைந்து சாதித்துக் காட்டும் பனங்குடி நாட்டின் இந்த முயற்சி, ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்டத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)