குழந்தைகளுக்கு சிகரெட்டால் சூடு வைத்த தாய் திருமணம் மீறிய உறவால் கொடூரம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அழகுவேல். கூலித் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சுகன்யாவுக்கு பள்ளிப் பருவத்தில், உடன் படித்த நண்பரான ரஞ்சித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ரஞ்சித்குமார் இப்போது காற்றாலையில் வேலை செய்து வருகிறார். சுகன்யா தனது திருமணத்திற்கு முன்பும், திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் கூட ரஞ்சித்குமாருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கணவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் ரஞ்சித்குமாரை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் இருப்பது, இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்வது என நெருக்கத்தைத் தொடர்ந்துள்ளனர். இவர்களது திருமணம் மீறிய உறவு குறித்து கணவர் அழகுவேலுக்கு தெரியவரவே, குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுகன்யா, மார்த்தாண்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ரஞ்சித்குமாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ரஞ்சித்குமாருடன் சேர்ந்திருக்க குழந்தைகள் இடையூறாகவும் தடையாகவும் இருப்பதாக சுகன்யா கருதியுள்ளார். எனவே சுகன்யாவும், ரஞ்சித்குமாரும் குழந்தைகளை கம்பால் கொடூரமாகத் தாக்கியும், சிகரெட்டால் உடலின் பல இடங்களில் சூடு வைத்தும் கொடூர சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

குழந்தைகளால் தொடர்ந்து தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கருதிய சுகன்யா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈத்தாமொழி பகுதியில் வசிக்கும் தனது தம்பி ராஜலிங்கம் வீட்டில் குழந்தைகளை கொண்டுபோய் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அப்போது குழந்தைகளின் உடல் முழுவதும் கடுமையான ரத்தக் காயங்களும் தீக்காயங்களும் இருப்பதைக்கண்டு ராஜலிங்கம் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அக்கா சுகன்யாவிடம் கேட்டபோது, அவரும் காதலனும் சேர்ந்து ராஜலிங்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர் குழந்தைகளிடம் கனிவாக விசாரித்தபோது, அம்மாவும் அவருடன் தங்கியிருந்த நபரும் சேர்ந்து தங்களை கம்பால் அடித்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் சித்திரவதை செய்த கொடூரத்தை அழுதுகொண்டே தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜலிங்கம் உடனடியாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

படுகாயமடைந்த இரு குழந்தைகளையும் மீட்ட போலீஸார் அவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சுசீந்திரம் போலீஸார், தலைமறைவாக இருந்த சுகன்யா மற்றும் அவரது காதலன் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணம் மீறிய உறவு காரணமாக பெற்ற குழந்தைகளையே தாய் சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)