'எல்லாம் எங்க அப்பா பார்த்துப்பார் ' போதையில் கார் ஓட்டி 3 உயிரைப் பறித்த தொழிலதிபர் மகன்!

Oct 12, 2026 - 11:31
0
'எல்லாம் எங்க அப்பா பார்த்துப்பார் '
போதையில் கார் ஓட்டி 3 உயிரைப் பறித்த தொழிலதிபர் மகன்!

கேரளத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான ‘இஹா டிசைன்ஸ்’ சேர்மன் சஜீவ் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் நூஹா ஆகியோரின் மகனான சுஹைல் சஜீவ்(19). இவர் காக்கநாடு ராஜகிரி கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். இந்த நிலையில் கொச்சி நெடும்பாசேரி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள சுவர்ணோத்யானம் உயிரியல் பூங்கா பகுதியில் இவர் மதுபோதையில் அதிவேகமாக ஓட்டிவந்த மினி கூப்பர் சொகுசு கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​எர்ணாகுளத்தில் லாஜிஸ்டிக்ஸ் படிப்பு படித்துக்கொண்டே, திருக்காக்கரையில் உள்ள கிராப்ட் கடை ஒன்றில் பகுதிநேர வேலை பார்த்து வந்த வயநாடு கல்பெற்றாவைச் சேர்ந்த தேவிகா (21), பாலக்காடு மன்னார்க்காட்டைச் சேர்ந்த கோபிகா (22) மற்றும் கர்நாடகாவின் கூர்க் பகுதியைச் சேர்ந்த இய்யாஸ் (21) ஆகிய மூவரும் பணி முடிந்து, உணவருந்திவிட்டு ஒரே ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சுஹைலின் ஓட்டிவந்தமினி கூப்பர் சொகுசு கார், ஸ்கூட்டரின் பின்னால் அதிவேகமாக மோதியது. ​மோதிய வேகத்தில் ஸ்கூட்டரில் இருந்த மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஸ்கூட்டரை சுமார் 100 மீட்டருக்கும் மேல் தரதரவென இழுத்துச் சென்ற கார், சாலையோர கான்கிரீட் தடுப்பில் மோதி நின்றது. விபத்தை ஏற்படுத்திய சுஹைல் சஜீவை நெடும்பாசேரி காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். காருக்குள் இருந்த அவரது நண்பர் நினவ் (22) என்பவரும் கைது செய்யப்பட்டார். உடனிருந்த மற்ற நண்பர்களான ஜோயல், அமீன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய ​சுஹைல் சஜீவ்

விமான நிலையத்திற்கு வந்திறங்கும் நண்பரை வரவேற்கச் சென்றதாகக் கூறிய சுஹைல், விபத்து நடந்த உடனேயே திரண்ட பொதுமக்களிடம், "எல்லாவற்றையும் என் அப்பா பார்த்துக்கொள்வார்" என்று திமிராகப் பேசியது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அங்கமாலி தாலுகா அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டபோது, பலியான இய்யாஸின் நண்பர்கள் சுஹைலை தாக்க முயன்றதால் அங்கு பதற்றம் நிலவியது.

விபத்தை ஏற்படுத்திய கார்

விபத்தை ஏற்படுத்திய  ​சுஹைல் சஜீவ் காரில் வரும்போதே மூன்று பார்களில் சென்று மது குடித்தது தெரியவந்துள்ளது. மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கேரள சட்டப்படி மது அருந்துவதற்கும் வாங்குவதற்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 23 ஆக உள்ள நிலையில், 19 வயது இளைஞருக்கு விதியை மீறி மது விநியோகித்த மூன்று மதுபான பார்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும், அவற்றின் உரிமங்களை உடனடியாக ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User