"JD வான்ஸ் பேச்சு தேவையற்றது; இது இரு நாடுகளுக்கும் உதவாது"- அமெரிக்க அரசு மீது இந்தியா நேரடி தாக்கு
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களை ‘ஒப்பந்தப் பணியாளர்கள் (indentured servants)’ என்று கூறியிருந்தார்.
இவர் குறிப்பாக ஹெச்-1பி விசாதாரர்களைக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் வேலை செய்யும் பெரும்பாலான ஹெச்-1பி விசாதாரர்கள் இந்தியர்களே.
ஐ.டி நிறுவனங்களுக்கு...
இன்னொரு பக்கம், அமெரிக்காவின் தொழிலாளர் துறை, காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, HCL டெக்னாலஜிஸ், கேப்ஜெமினி ஆகிய ஆறு நிறுவனங்களை ‘நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் (PERM) திட்ட’த்தில் இருந்து தடை செய்துள்ளது. இதிலும் இந்தியர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

இது குறித்து, ஜே.டி. வான்ஸின் பேச்சுக்கு நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்...
> ‘PERM’ திட்டம் என்பது H-1B விசா திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
PERM விண்ணப்பங்களை இடைநிறுத்தம் செய்வது, பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் தகுதியான ஊழியர்களின் நிரந்தரக் குடியுரிமை / கிரீன் கார்டு நடைமுறையில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால், இது ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் தற்போதைய நிலையை நேரடியாகப் பாதிக்காது.
> திறமையான பணியாளர்களின் இடப்பெயர்வு (Talent mobility) என்பது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் மதிப்பைக் கூட்டுகிறது.
இது இந்தியர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்குவது போல, அமெரிக்காவில் பங்குதாரர்களின் செல்வத்தைப் பெருக்குவதுடன், அதிநவீன திறமையாளர்கள், புதுமைப் படைப்புகள், ஆராய்ச்சி, உற்பத்தித்திறன், போட்டித்தன்மை மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அமெரிக்க நிறுவனங்களுக்கும் சம அளவில் உதவுகிறது.
எனவே, இது இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் மிகப்பெரிய நன்மையளிக்கும் ஒரு துறையாகும். இந்தச் செயல்பாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த உண்மையை உணர்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அமெரிக்கா தற்போது அறிவித்துள்ள இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளின் கூட்டு இலக்குகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவாது.
> இது தொடர்பாக அமெரிக்கத் துணை அதிபர் கூறிய சில கருத்துகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
இத்தகைய பேச்சுகள் தேவையற்றவை. அமெரிக்காவில் உள்ள இந்திய வல்லுநர்கள் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் கண்டுபிடிப்புச் சூழலுக்குப் பங்காற்றும் உயர் கல்வியும் திறனும் கொண்டவர்கள் என்ற உண்மையைப் புறக்கணிப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம்.
உண்மையில், அமெரிக்காவின் வரலாறே தலைமுறை தலைமுறையாகக் குடிபெயர்ந்த மக்களின் உழைப்பு, தொழில்முனைவு மற்றும் புதுமைகளால் செதுக்கப்பட்டதுதான்.
அதுவே அந்நாட்டின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் பங்களித்துள்ளது. வேதனையான வரலாற்று மற்றும் காலனித்துவ ஆதிக்கத்தின் கசப்பான நினைவுகளைச் சுமந்து நிற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிகுந்த மனவேதனையளிக்கிறது".
- என்று கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)