"அரசுகள் மாறினாலும் தமிழ்நாடு மக்களுக்குச் சேவை புரிவதில் என் மன உறுதி தொடர்கிறது" - பிரதமர் மோடி

Oct 11, 2026 - 17:31
0
"அரசுகள் மாறினாலும் தமிழ்நாடு மக்களுக்குச் சேவை புரிவதில் என் மன உறுதி தொடர்கிறது" - பிரதமர் மோடி

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் வரவேற்றார்.

முதலில், பூந்தமல்லி - வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்த பிறகு நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் பேசியிருக்கிறார்கள்.

Narendra Modi - Vijay
Narendra Modi - Vijay

பிரதமர் மோடி பேசுகையில், "இன்று சென்னையில் உங்களுடன் இருப்பது எனக்குப் பேருவகையை அளிக்கிறது. இன்றைய நிகழ்வு ₹13,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடர்பானது.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைவதோடு, தமிழ்நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றிலிருந்து நவராத்திரி புனித காலம் தொடங்குகிறது. சிவனோடு கூடவே சக்தி பீடம் கொண்டிருக்கும் பவித்திரமான பூமியாம் தமிழ்நாட்டில் நான் இருக்கிறேன். இங்கு வருவதற்கு முன்பாக ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பகவான் சிவபெருமானின் நல்லாசிகளைப் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சற்று முன்பாக சென்னை ஐஐடியில் மூளை ஆய்வு மையத்தைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இத்துறையில் நடைபெறும் ஆய்வுகள் பொது சுகாதாரத் துறையில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். மேலும் சென்னை மெட்ரோ விரிவாக்கத்தையும் அர்ப்பணித்திருக்கிறோம்.

கடந்த அக்டோபர் 2001-ல் நான் முதல்வராகப் பதவியேற்றேன். இத்துடன் அரசியலில் எனது 25 ஆண்டுகாலப் பயணம் நிறைவடைந்துள்ளது. நான் எப்போதும் மாநிலங்களின் வளர்ச்சியில், தேசத்தின் முன்னேற்றம் என்கிற மந்திரத்தைத் தாங்கிப் பிடித்து வந்திருக்கிறேன்.

முதல்வராக இருந்தபோது கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமரான பிறகும் ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் போன்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

அரசுகள் மாறினாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மக்களுக்குச் சேவை புரிவதிலும் எனது மன உறுதி எப்போதும் தொடர்கிறது. இன்று இதே உறுதிப்பாட்டுடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.

Narendra Modi
Narendra Modi

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதிலும் மெட்ரோ சேவையை பெரியளவில் விரிவாக்கியிருக்கிறோம். 2014-ல் 5 நகரங்களில் 250 கி.மீ ஆக இருந்த மெட்ரோ பாதை, இன்று 25 நகரங்களில் 1,100 கி.மீ-க்கும் அதிகமாக மெட்ரோ சேவைகள் விரிவடைந்துள்ளன.

சென்னை மெட்ரோவின் இந்த விரிவாக்கம் சாமானிய மக்கள், உழைக்கும் குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பயணத்தை எளிதாகவும் விரைவாகவும் மாற்றும்" எனப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User