பாலியல் தொல்லை... அத்துமீறிய தந்தை; சிங்கப்பெண் படையிடம் புகாரளித்த மாணவி - பாய்ந்தது போக்சோ!

Sep 22, 2026 - 20:00
0
பாலியல் தொல்லை... அத்துமீறிய தந்தை; சிங்கப்பெண் படையிடம் புகாரளித்த மாணவி - பாய்ந்தது போக்சோ!

நெல்லை, டவுன் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், 52 வயதான பிளம்பிங் தொழிலாளி.  இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகள், நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான அந்த மாணவியின் தந்தை, வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். `இது குறித்துத் தாய், சகோதரி, தாத்தா, பாட்டி என வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் கூறக் கூடாது. அப்படிக் கூறினால் கொன்று விடுவேன்' என்று மாணவியை அச்சுறுத்தி மிரட்டி வந்துள்ளார்.

சிங்கப்பெண் படை விழிப்புணர்வு

உயிருக்குப் பயந்த அந்த மாணவி, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளர். இந்த நிலையில் அந்த மாணவி பயிலும் பள்ளிக்கு  சமீபத்தில் தமிழக அரசின் 'சிங்கப்பெண்' அதிரடிப் படையினர் நேரில் சென்று, பாலியல் சீண்டல் மற்றும் அத்துமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் மாணவிகளுக்கு தைரியம் ஊட்டி, ``பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டாலோ அல்லது பிற மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானாலோ யாருக்கும் பயப்படாமல் துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும். புகார் அளிக்கும் மாணவியின் பெயர் ரகசியம் காக்கப்படும்.

புகார் அளித்தவர்கள் குறித்த விவரம் வெளிவராமலேயே, பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளனர். அத்துடன், அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களையும்  மாணவிகளுக்குக் கொடுத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், மீண்டும் தந்தையால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக, பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி இன்று தைரியமாகச் ’சிங்கப்பெண்’ அதிரடிப் படையினருக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, தன் தந்தை தனக்குச் செய்து வந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்துப் புகாரளித்தார்.

சிங்கப்பெண் அதிரடிப்படை

அந்தப் புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் பகுதிக்கு விரைந்து வந்த சிங்கப்பெண் படையினர், மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையைப் பிடித்து நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User