Scene: "சூர்யா சார் அப்படிச் சொன்னதும் கை, கால் நடுங்கிடுச்சு" - 'நக்கலைட்ஸ்' திலகவதி பேட்டி

Nov 11, 2026 - 19:01
0
Scene: "சூர்யா சார் அப்படிச் சொன்னதும் கை, கால் நடுங்கிடுச்சு" - 'நக்கலைட்ஸ்' திலகவதி பேட்டி

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களைத் தாண்டி இன்னும் சில சோஷியல் மீடியா பிரபலங்கள் படத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

அவர்களில் 'நக்கலைட்ஸ்' திலகவதியும் ஒருவர். 'சீன்' படத்தில் 'மாமி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். கோவையில் இருக்கும் அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

Scene
Scene

நம்மிடையே பேசியவர், "நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர்தான். அடிப்படையில் ஒரு விளம்பர ஏஜென்சியில் கிராஃபிக் டிசைனராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீடியாத்துறையில் ஆஃப்-ஸ்கிரீனில் பணியாற்றலாம் என்ற எண்ணத்தில்தான் 'நக்கலைட்ஸ்' சேனலை அப்ரோச் செய்தேன். ஆனால், அங்குள்ளவர்கள் என்னை ஆன்-ஸ்கிரீனில் பெர்ஃபார்ம் செய்து பார்க்கச் சொன்னார்கள்.

அங்கு நடித்த பிறகுதான் எனக்கு நடிப்பின் அடிப்படை விஷயங்களே தெரியவந்தன. நடிப்புக்கான எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நக்கலைட்ஸில்தான் படித்தேன்.

ஆபீஸில் இரண்டு நாட்கள் லீவ் போட்டுவிட்டு நடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் வேலைக்குப் போவேன். அப்படித்தான் என் நடிப்புப் பயணம் தொடங்கியது" என்றவர் தொடர்ந்து, "எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் பெரியளவில் இல்லை.

ஆனால், 'நக்கலைட்ஸ்' சேனலில் நான் நடித்த 'ஹை ஸ்கூல்' எபிசோடில் வந்த டீச்சர் கதாபாத்திரத்தைப் பார்த்துவிட்டு, 'சீன்' படத்திற்கான காஸ்டிங் டைரக்டர் செபினா மேம் என்னை அழைத்தார்.

இவர்தான் இயக்குநர் ஜித்து மாதவனின் மனைவி. ஆரம்பத்தில் உடல்நலக்குறைவு காரணமாகவும் பயத்தினாலும் 'எனக்கு பிக் ஸ்கிரீன் வேண்டாம்' என்று மறுத்தேன்.

ஆனால், என் மகன்கள் 'சூர்யா சார் பட வாய்ப்பை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?' என்று கேட்டு என்னை ஊக்கப்படுத்தினார்கள். அதன்பிறகு செபினா மேமும் போன் செய்து தைரியம் கொடுத்ததால் சென்னைக்கு வந்தேன்" என்றார்.

Thilagavathi - Scene Actress
Thilagavathi - Scene Actress

"இயக்குநர் ஜித்து மாதவன் சார் என்னை 'அகரம் ஃபவுண்டேஷன்' அலுவலகத்திற்கு வரவழைத்து ஆடிஷன் எடுத்தார். மூன்று கட்ட ஆடிஷன்களுக்குப் பிறகே என்னை 'மாமி' கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தார்கள்.

ஒரு வில்லியாக என்னை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால், 'இது நகைச்சுவையாகத்தான் இருக்கும்' என்று இயக்குநர் தைரியம் அளித்தார். ஷூட்டிங்கில் 3 மாதங்களாக சூர்யா சாரைப் பார்க்கவே முடியவில்லை.

ஒருநாள் கேரவனில் இருந்தபோது உதவி இயக்குநர்கள் என்னை கூப்பிட்டு, இயக்குநர் ஜித்து சார் பக்கத்தில் உட்கார வைத்தார்கள். அப்போது என்னைச் சூர்யா சாருக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

என்னைப் பார்த்ததும் சூர்யா சார், 'சூப்பர்ங்க, ரொம்ப நல்லா பண்றீங்க, உங்க ஆக்டிங் ரொம்ப நேச்சுரலா இருக்கு' என்று பாராட்டினார். அவ்ளோ பெரிய ஸ்டார் கூப்பிட்டுப் பாராட்டியதும் எனக்குக் கை கால் எல்லாம் நடுங்கிவிட்டது.

Thilagavathi - Scene Actress
Thilagavathi - Scene Actress

அது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்" என்றவர், "படத்தில் நஸ்லென்னுடன் வரும் காம்பினேஷன் காட்சிகள் அனைத்தும் மக்களிடம் மிகச் சிறந்த கெமிஸ்ட்ரியாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

டெய்லர் ஷாப் காட்சியில் நஸ்லென் பேசும்போது நான் சொல்லும் 'தம்பி ஜோக் அடிக்குது' என்ற டயலாக் இந்த அளவிற்கு இணையத்தில் வைரலாகும் என நான் நினைக்கவே இல்லை.

இன்ஸ்டாகிராமில் மக்கள் போடும் கமெண்ட்கள், மீம்ஸ்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User