பவன் கல்யாண் : 'ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி' - கவனம் பெறும் ரேணு தேசாய் அன்று சொன்ன கருத்து

Nov 11, 2026 - 20:02
0
பவன் கல்யாண் : 'ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி' - கவனம் பெறும் ரேணு தேசாய் அன்று சொன்ன கருத்து

ஆந்திராவின் துணை முதல்வராகவும், பிரபல நடிகராகவும் உள்ள பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவி அன்னா கொனிடேலாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவி ரேணு தேசாய் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பிய கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

ஒரு பெண் மறுமணம் பற்றி நினைப்பதே பாவம் எனக் கருதும் இந்த சமூகம், ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்கிறது என்ற அவரது ஆதங்கக் குரல், பவன் கல்யாணின் தற்போதைய தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

பவன் கல்யாண் - அன்னா கொனிடேலா
பவன் கல்யாண் - அன்னா கொனிடேலா

பவன் கல்யாணும், அன்னா கொனிடேலாவும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தற்போது, "பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையுடன்" பிரிவதாக இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பவன் கல்யாணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "எங்கள் திருமணம் முடிவுக்கு வந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்களாகவும், எங்கள் அருமைக் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட பெற்றோராகவும் தொடர்வோம். அவர்களின் மகிழ்ச்சியும், நலனுமே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தனிப்பட்ட மாற்றத்தின் போது தங்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு இருவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தச் சூழலில்தான், 2017-ம் ஆண்டு ரேணு தேசாய் சந்தித்த ஒரு சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. பவன் கல்யாணிடம் இருந்து 2012-ல் விவாகரத்து பெற்ற ரேணு தேசாய், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், எதிர்காலத்தில் தனக்கு ஒரு துணை தேவைப்படலாம் என்றும், மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருப்பதாகவும் இயல்பாகக் கூறியிருந்தார். ஆனால், அவரது இந்தக் கருத்துக்கு பவன் கல்யாணின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் அவர் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் சந்தித்தார்.

இந்தக் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ரேணு தேசாய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆதங்கத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "நம் சமூகத்தில், ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் ஒரு பெண் மற்றொரு உறவைப் பற்றி நினைப்பது கூட பாவம். ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் வருத்தத்துடன் தனியாகத்தான் வாழ வேண்டுமா?" என்று அவர் எழுப்பிய கேள்வி, சமூகத்தின் இரட்டை நிலைப்பாட்டை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

பவன் கல்யாண் - ரேணு தேசாய்

அதே காலகட்டத்தில் தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒரு உடல்நலக் குறைபாடு காரணமாகவே தனக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக ரேணு விளக்கியிருந்தார். "எனக்கு வழக்கமான காதல் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை, ஆனால் ஒரு துணை அவசியம்" என்று அவர் கூறியிருந்தார். மேலும், பவன் கல்யாணுடனான தனது உறவு குறித்துப் பேசுகையில், "அவரை நெருக்கமாகப் புரிந்துகொண்டது நான் தான் என்பதை அவராலும் மறுக்க முடியாது. நாங்கள் கணவன்-மனைவி என்பதைத் தாண்டி நல்ல நண்பர்களாக இருந்தோம்," என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பவன் கல்யாண் 2009-ல் ரேணு தேசாயை மணந்து 2012-ல் விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பின்னர் 2013-ல் அன்னாவை மணந்து தற்போது அவரையும் பிரிகிறார். ஆனால், மறுமணம் குறித்து யோசிப்பதாகக் கூறியதற்கே கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ரேணு தேசாய், இன்றுவரை மறுமணம் செய்துகொள்ளாமல் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இது, அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டிய 'ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி' என்ற சமூகத்தின் பார்வையை மீண்டும் உறுதி செய்வதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User