உடைந்த பாகிஸ்தான் அணை; சிக்கலாகும் 700 மில்லியன் டாலர் பொருளாதாரம்; சீன நிறுவனம்தான் காரணமா?

Nov 11, 2026 - 20:30
0
உடைந்த பாகிஸ்தான் அணை; சிக்கலாகும் 700 மில்லியன் டாலர் பொருளாதாரம்; சீன நிறுவனம்தான் காரணமா?

பாகிஸ்தானில் 1,530 மெகாவாட் திறன் கொண்ட 'தர்பேலா அணை 5-வது விரிவாக்க நீர்மின் திட்டம்' அணை கட்டப்பட்டு வந்தது. சீனாவைச் சேர்ந்த 'பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா லிமிடெட்' (PCCCL) நிறுவனம் இந்தத் திட்டத்தின் சுரங்கம்-5-ன் பாதுகாப்புத் தடுப்புச் சுவர் பணிகளை மேற்கொண்டுவந்தது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை சுரங்கம் 5-ன் பாதுகாப்புச் சுவர் உடைந்து விபத்து ஏற்பட்டது. இதனால், அணை நீர்த்தேக்கத்திலிருந்து திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

2025-க்குப் பிறகு இத்திட்டத்தில் நடைபெறும் இரண்டாவது மிகப்பெரிய விபத்து இதுவாகும். முன்னதாக, இத்திட்டத்தில் நடைபெற்ற மற்றொரு தற்காலிக தடுப்பணை உடைப்பு குறித்து பாகிஸ்தானின் பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட 15 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையில், `ஒப்பந்த விதிகளை மீறி தடுப்பணையின் வடிவமைப்பு மாற்றப்பட்டதே அந்த விபத்திற்குக் காரணம்' எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒப்பந்தக் காலத்திற்குப் பிறகு, விதிகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களில் திட்டத்தின் மூன்று முக்கியப் பொறுப்பாளர்களான ஒப்பந்த நிறுவனம், பொறியாளர் குழு, WAPDA ஆகியவை ஒப்பந்த மீறல்களில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அதாவது, ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்படாத பலவீனமான பாறை நிரப்பப்பட்ட தடுப்பணை வடிவமைப்பை ஒப்பந்த நிறுவனமான PCCCL முன்மொழிந்துள்ளது.

அதன் தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சரியாகக் ஆராயாமல் பொறியாளர் குழு, நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்ட நிலையில், கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் பாகிஸ்தான் நீர் மற்றும் மின் மேம்பாட்டு ஆணையமும் (WAPDA) இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அப்போது ஏற்பட்ட அணை உடைப்புக்கு வெள்ளப்பெருக்கே காரணம் என WAPDA குற்றம் சாட்டிய போதிலும், அப்போது பதிவான நீர்வரத்து இயல்பான அளவிலேயே இருந்ததாகவும், போதிய பாதுகாப்பு அடுக்கை அமைக்காததே கட்டமைப்பு வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் விசாரணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், தற்காலிகப் பணிகளுக்காக முறைசாரா கட்டணங்கள் வழங்கப்பட்டதால், விபத்திற்குப் பிறகு ஒப்பந்த நிறுவனத்திடம் இழப்பீடு கோரும் அரசின் உரிமையும் பலவீனமடைந்துள்ளது.

இந்தத் தொடர் குளறுபடிகளால், ஆரம்பத்தில் 82.36 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக இருந்த இத்திட்டத்தின் மதிப்பீடு 285 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, தற்போது 317 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக உயர்ந்துள்ளது. திட்டத்தின் நிறைவு தேதியும் 2026-ல் இருந்து 2028 ஜூன் மாதத்திற்குத் தள்ளிப்போயுள்ளது.

உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியவற்றின் 700 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் நிதியுதவியுடன் செயல்படும் இத்திட்டத்தில், மின்சார உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு 27-28 பாகிஸ்தான் ரூபாய் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா - பாகிஸ்தான்
சீனா - பாகிஸ்தான்

இது பாகிஸ்தானிலேயே மிக அதிக கட்டணம் என்பதால், இத்திட்டம் பொருளாதார ரீதியாகப் பயனற்றதாக மாறும் ஆபத்து உருவாகியுள்ளது. சீன நிறுவனங்களின் குறைபாடான திட்டமிடல் மற்றும் WAPDA நிர்வாகத்தின் ஒப்பந்த மீறல்களே இத்திட்டத்தின் வீழ்ச்சிக்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளன என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User