Salim Kumar: பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார் - மலையாள திரையுலகினர் இரங்கல்

Jun 07, 2026 - 09:01
0
Salim Kumar: பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார் - மலையாள திரையுலகினர் இரங்கல்

பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் நேற்றைய தினம் காலமானார். இவருக்கு வயது 56.

கடந்த சில காலமாகவே கல்லீரல் தொடர்பான நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று காலமானார்.

Actor Salim Kumar
Actor Salim Kumar

இவர் மிமிக்ரிக் கலைஞராக தனது கரியரைத் தொடங்கினார். பிரபலமான 'கொச்சின் கலாபவன்' உள்ளிட்ட குழுக்களில் மிமிக்ரி கலைஞராக இருந்தவர், 1996-ல் சினிமாவுக்குள் வந்தார்.

மலையாள சினிமாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் சலீம் குமார் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 'தென்காசிப்பட்டணம்', 'கல்யாணராமன்', 'சிஐடி மூசா' உள்ளிட்ட சில படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக மாலிவுட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதன் பிறகு, இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், முதன்மை கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'ஆதாமின்டே மகன் அபு' படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

நடிகர் என்பதைத் தாண்டி இயக்குநராகவும் சில படங்களை இயக்கியிருக்கிறார். கடைசியாக நடிகர் ஜெயராமை வைத்து 'தெய்வமே கைதொழாம் கே குமார் ஆகணம்' என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார்.

இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. மாலிவுட்டைத் தாண்டி தமிழிலும், 'நெடுஞ்சாலை', 'மரியான்' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

Actor Salim Kumar
Actor Salim Kumar

சினிமாவைத் தாண்டி, அரசியலிலும் சலீம் குமார் இயங்கி வந்தார். சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (UDF) பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சலீம் குமாரின் மறைவுக்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User