'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' - மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்தியம் செய்த பாஜகவினர்

Apr 27, 2026 - 12:01
 0
'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' - மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்தியம் செய்த பாஜகவினர்

மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிகிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற தீவிரத்துடன் பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அசைவ உணவுகளுக்கு தடை விதித்து விடுவார்கள் என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார். பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் மீன் மற்றும் இறைச்சிக்கு விழாக்காலங்களில் தடை விதிக்கப்பட்டு இருப்பதையும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால் பா.ஜ.கவினர் இதனை மறுத்து வருகின்றனர்.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான காளி கோயிலுக்கு சென்று வழிபட்டார். இந்த கோயில் ராமகிருஷ்ண பரமஹம்சரோடு தொடர்புடையது ஆகும். அம்மா சித்தேஷ்வரி என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் அம்மனுக்கு பிரசாதமாக அசைவ உணவு படைக்கப்படுவது வழக்கம். ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த அம்மனுக்கு முதன் முதலில் அசைவ உணவு படைத்து வழிபட்டார். அதனை தொடர்ந்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது பக்தர்கள் அதே அம்மனுக்கு அசைவ உணவு படையல் படைத்து ராமகிருஷ்ண பரமஹம்சர் குணமடையும்படி வேண்டிக்கொண்டனர்.

1703ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில் மேற்கு வங்க மக்களின் மிகவும் நம்பிக்கைக்குறிய தெய்வம் ஆகும். இந்த கோயிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அம்மனுக்கு நடந்த ஆர்த்தியில் கலந்து கொண்டார். அதோடு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கமாட்டோம் என்று பா.ஜ.கவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். மாநில பா.ஜ.க தலைவர் சமிக் பட்டாச்சாரியா, மத்திய அமைச்சர் சுகந்தா ஆகியோர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

அதோடு நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென் என்பவர் தான் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு, நானும் பா.ஜ.ககாரன் தான் என்றும், அசைவ உணவு எனது பழக்கம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட பிரச்சாரத்தின் கடைசி நாளன்று அன்று அனுராக் தாக்கூர் மற்ற பாஜக தலைவர்களுடன் மீன் குழம்புடன் சாப்பிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற முதல்வர் மம்தா பானர்ஜியின் கூற்றை முறியடிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது. மேற்கு வங்க மக்களின் பிரதான உணவு மீனாக இருந்து வருகிறது. எனவேதான் தேர்தல் பிரசாரத்தில் மீன் முக்கிய பங்கு வகித்தது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த பிரசாரம் இன்று மாலையோடு முடிவுக்கு வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா, “மீன், இறைச்சி, முட்டை சாப்பிட முடியாது என்று பாஜக சொல்வார்கள்; அவர்கள் எந்த மதத்தையும் நம்ப மாட்டார்கள், அவர்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள்''என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0