Priyanka Mohan: "தென் கொரியா அதிபர் என் படத்தை பார்த்து..." - ராஷ்டிரபதி பவனில் பிரியங்கா மோகன்
இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு (Lee Jae-myung) ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார்.
சமீபத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் 'மேட் இன் கொரியா' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அத்திரைப்படத்தின் பெரும்பகுதி கொரியாவிலேயே படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்வு தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியிருக்கிறார் பிரியங்கா மோகன். அதில், “இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. ராஷ்டிரபதி பவன் உள்ளே எப்படி இருக்கும் என்று எப்போதும் வியந்ததுண்டு.
அங்கிருந்த அமைதியான சூழலையும், மரியாதையையும் ரசித்தேன். பல முக்கியப் பிரமுகர்களுடன் அமர்ந்து உணவு அருந்துவது ஒரு கனவு போல இருந்தது.
தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங், அவரது மனைவி கிம் ஹீ கியுங் (Kim Hea Kyung) ஆகிய இருவரும் 'மேட் இன் கொரியா' படம் பற்றி என்னிடம் பாராட்டிப் பேசினார்கள். அவர்களிடம் நான் நீண்ட நேரம் உரையாடவில்லை.
ஆனால், நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அதிபர் என்னைப் பார்த்ததும் நினைவுகூர்ந்து, 'நான் உங்கள் திரைப்படத்தைப் பார்த்தேன்' என்று கூறினார். அதிபரும் அவரது மனைவியும் என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத மிகப்பெரிய விஷயம்.
'மேட் இன் கொரியா' படத்தில் நடிக்கும்போது என் பொறுப்பை உணர்ந்து சிறந்த நடிப்பைத் தர வேண்டும் என்று மட்டுமே உழைத்தேன். கடின உழைப்பிற்குப் பலன் கிடைக்கும் என்பார்கள்; அது என் விஷயத்தில் நிஜமாகியுள்ளது.
இந்தப் படம் எல்லைகளைத் தாண்டி இவ்வளவு தூரம் சென்றடையும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு நாட்டின் அதிபர் என் படத்தைப் பார்த்திருக்கிறார் என்பதும், நான் ராஷ்டிரபதி பவனில் இருப்பேன் என்பதும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0