ஊரை விட்டு கிளம்ப பயமாயிருக்கு; அதான் இப்ப நடிக்கல - 'சின்னத்தம்பி' பட நடிகர் மார்த்தாண்டன்
சின்னதம்பி. 1991ம் ஆண்டு இதே ஏப்ரல் மாதம் வெளியாகி வசூலை அள்ளிய படம். பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி உள்ளிட்ட முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் 'எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்' எனக் கத்திக்கொண்டு மனநலம் பிறழ்ந்தவராக நடித்திருப்பார் நகைச்சுவை நடிகர் மார்த்தாண்டன்.
படத்தில் ஆரம்பத்தில் ஒரு காட்சி, பிறகு பிரபு குஷ்பு கழுத்தில் தாலி கட்டும் சீன், தொடர்ந்து கிளைமேக்ஸ் என மூன்று காட்சிகளில் நடித்திருப்பார்.
படம் வெளியான பிறகு அவர் நடித்த காட்சியும் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது எனச் சொல்லலாம்.
படம் வெளியாகி சரியாக 35 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மார்த்தாண்டன் எங்கே இருக்கிறார் என விசாரித்ததில், தெற்கே திசையன்விளை அருகேயுள்ள தன் பூர்வீக கிராமத்தில் தனி ஆளாக பொங்கிச் சாப்பிட்டபடி வசித்து வருகிறார் என தகவல் கிடைத்து.
நீண்டதொரு முயற்சிக்குப் பிறகு அவரைத் தொலைபேசியில் பிடித்தோம்.
'நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் தெற்கு எரந்தை கிராமம்தான். சின்ன வயசுல படிபபுல சராசரிதான். அதனால நாகர்கோவில்ல ஓவியம் வரையற ஒரு ஸ்கூல்ல சேர்ந்து வரையக் கத்துகிட்டேன். கொஞ்சம் வளர்ந்ததும் எப்படின்னு தெரியலை சினிமா ஆசை வந்திடுச்சு. எங்க மூதாதையர் வழியில ஒருத்தரும் நடிச்சதில்ல.
சினிமா ஆசையில சென்னைக்குக் கிளம்பிட்டேன். அங்க என்னை மாதிரியே சினிமா வாய்ப்பு தேடிட்டிருந்த மறைந்த போண்டா மணி, கிங்காங் உள்ளிட்ட சிலருடைய தொடர்பு கிடைச்சது.
நாங்க வர்ற வாய்ப்புகளை ஒருத்தருக்கொருத்தர் தெரிவிச்சுக்கிடுறது வழக்கம். அப்படிதான் எனக்கும் சினிமா சான்ஸ் கிடைச்சது.
'கழுகுமலைக் கள்ளன்' நான் நடிச்ச முதல் படம். தொடர்ந்து இயக்குநர் பாலச்சந்தரின் `ஒரு வீடு இரு வாசல்' 'பாளையத்தம்மன்' முதலான சில படங்களில் நடிச்சேன். 50 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன்னு நினைக்கேன்.
நிறையப் படங்களின் பெயர்களே எனக்கு மறந்து போயிடுச்சு. வயசு எழுபதை நெருங்குதில்லையா' எனக் கேட்டவரிடம் 'சின்னத்தம்பி' படத்தில் நடித்தது குறித்துக் கேட்டோம்.
'அந்தப் படத்துக்குப் பிறகுதான் ரொம்ப பேமஸ் ஆகிட்டேன். இங்க எங்க ஊர்ப் பக்கம்தான் எங்கயோ ஷூட்டிங் நடந்தது. யார் சிபாரிசு பண்ணினாங்கன்னெல்லாம் மறந்துடுச்சு. ஆனா படத்துல மூணு சீன் தான் வருவேன். ஆனா படம் இந்தப் பக்கமெல்லாம் ஒரு வருஷம் வரைக்கும் ஓடுச்சு.
சொந்தக்காரங்க சிலர் பைத்தியமா நடிச்சதுக்கு திட்டக் கூட செய்தாங்க. அனா படம் நல்ல ஓட்டம். இப்பவும் எங்கயாச்சும் யாராவது என்னைப் பார்த்தா 'எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்' டயலாக்கைப் பேசச் சொல்லி கேக்காம நகர்வே மாட்டாங்க. நானும் பேசிக் காட்டுவேன். அந்தப் படத்துல நடிச்சப்ப பிரபு, குஷ்பு எல்லார் கூடயும் பேசியிருக்கேன். இப்பெல்லாம் யார் ஞாபகம் வச்சிருக்கப் போறாங்க' என்கிறார்.
சரி, உங்க கல்யாணம் எப்ப நடந்தது? மனைவி, பிள்ளைகள் எல்லாம் எங்க இருக்காங்க? இந்த கிராமத்துல எதுக்கு தனியா வாழ்ந்திட்டிருக்கீங்க? இங்க இருந்தா தொடர்ந்து சினிமா வாய்ப்பு எப்படி கிடைக்கும்? என மேலும் சில கேள்விகளைக் கேட்டோம்.
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்..
'சினிமா அது இதுனு திரிஞ்சாலும் எனக்கு கல்யாணம் சரியான பருவத்துல நடந்திடுச்சு. ரெண்டு மகள்கள். ரெண்டு பேரையும் டவுனுகள்ல கட்டிக் கொடுத்து பேரன் பேத்தி எடுத்துட்டேன். என் வீட்டம்மா பேரனைப் பார்த்துகிடணும்னு மக கூடப் போய் தங்கிட்டாங்க.
நானும் இங்கயும் மக வீட்டுலயுமாதான் இருந்தேன். இடையிடையே நடிக்க யாராச்சும் கூப்பிட்டாப்போயிட்டு வந்தபடிதான் இருந்தேன். இங்க வீடும் கொஞ்ச பூர்வீக நிலமும் இருக்கு. வீட்டைப் பூட்டிட்டு எல்லாரும் டவுனுக்குப் போயிட்டா இங்க இருக்கிற நம்ம இடத்தை அபகரிக்கப் பாக்குறாங்க. ஆறு மாசம் ஆள் இல்லைன்னாலே இடத்தை ஆட்டயப் போட்டுடுறாங்க. யார் என்னங்கிறதைப் பேசினா பொல்லாப்பு வந்து சேரும். இது தேர்தல் நேரமா வேற இருக்கில்லையா, அதனால அது பத்திப் பேச வேண்டாம்.
அப்படியொரு சிக்கல் வரப்போய்த்தான், நான் மட்டுமாச்சும் இங்க ஊர்ல இருக்கணும்னு முடிவு பண்ணி, இப்ப கொஞ்ச காலமா இங்கயே தங்கிட்டேன்.
சோறு பொங்கிச் சாப்பிடுவேன். அக்கம் பக்கத்துல இருக்கிற சொந்தக்காரங்களும் அப்பப்ப சாப்பாடு தருவாங்க. என் பொண்ணுங்க 'பேசாம எங்க கூட வந்துடுங்க'னு கூப்பிடத்தான் செய்யறாங்க. பொறந்த வீடு, பூர்வீக இடத்தையெல்லாம் விக்க மனசு வரலை. நம்ம காலம் வரைக்கும் எப்படியாவது காப்பாத்திடுவோம்'னு இருக்கேன். ஓவியம் வரையறது மூலம் எப்பவாவது கொஞ்சம் காசு வரும். என் ஒரு ஆளுக்கு என்ன செல்வாகிடப் போகுதுன்னு அப்படியே தங்கிட்டேன்.
உடம்பு ஆரோக்கியமாத்தான் இருக்கு, ஆனா நடிக்க வர்ற வாய்ப்புகளை ஏத்துகிட்டு போய் நடிக்க முடியலயேங்கிறதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. டைரக்டர் வசந்தபாலன் ஆபிஸ்ல இருந்து பேசுறோம்னு கொஞ்ச நாள் முன்னாடி கூப்பிட்டு ஒரு படத்துல நடிக்கக் கேட்டாங்க. என்னால போக முடியலை' என ரொம்பவே ஆதங்கப் படுகிறார் மார்த்தாண்டன்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0