'கடைசி வரை நம்பிக்கையை விடவில்லை'- சூப்பர் ஓவர் வெற்றி குறித்து ரஹானே!  

Apr 27, 2026 - 10:32
 0
'கடைசி வரை நம்பிக்கையை விடவில்லை'- சூப்பர் ஓவர் வெற்றி குறித்து ரஹானே!  

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 26) பரபரப்பான ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட விறுவிறுப்பான சூப்பர் ஓவரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, கடைசி ஓவர் வரை போராடி ஆட்டத்தைச் சமன் செய்தது. இந்த த்ரில் வெற்றிக்குப் பிறகு கேகேஆர் கேப்டன் ரஹானே தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

LSG vs KKR
LSG vs KKR

வெற்றி குறித்து பேசிய ரஹானே , " இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக நாங்கள் பேட்டிங் செய்தபோது 16 ஓவர்களுக்குப் பிறகு ஆடிய விதம் மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டம் அனைத்தையும் மாற்றியது.

ஆரம்பத்தில் ஆட்டம் மெதுவாகச் சென்றதால் சற்று சிந்தித்தோம், ஆனால் ரிங்கு சிங் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார்.

இந்த ஆடுகளம் முஷ்டாக் அலி தொடரில் ஆடிய ஆடுகளத்தைப் போலவே இருந்ததால், 160 முதல் 170 ரன்கள் வரை எடுத்தால் அது நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம்.

பேட்டிங்கில் பவர்-பிளே மற்றும் மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், 156 ரன்களைத் தற்காத்து பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது.

அணி வீரர்களிடம் நான் சொன்னது ஒன்றே ஒன்றுதான், கடைசி வரை நம்பிக்கையை விடக்கூடாது என்பதுதான். ஆட்டம் முடியும் வரை எதுவும் முடிந்துவிடவில்லை.

லக்னோ அணிக்குச் சிறந்த தொடக்கம் அமைந்தாலும், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி மற்றும் அனுகுல் ராய் ஆகியோரின் பந்துவீச்சில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஒரு விக்கெட் கிடைத்தால் கூட ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பும் என்று நினைத்தோம், அதுதான் சரியாக நடந்தது.

LSG vs KKR
LSG vs KKR

ஆட்டம் சூப்பர் ஓவர் முறைக்குச் சென்றபோது, சுனில் நரைன் தான் எங்களின் முதல் தேர்வாக இருந்தார்; ஏனெனில் நீண்ட எல்லைக் கோடுகளைக் கொண்ட இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது பேட்டர்களுக்குச் சவாலானது.

இளம் வீரர்கள் கார்த்திக் தியாகி மற்றும் வைபவ் ஆகியோரின் தன்னம்பிக்கை மற்றும் தெளிவான பந்துவீச்சு என்னைக் கவர்ந்தது. குறிப்பாக கார்த்திக் தியாகி அந்த இக்கட்டான கடைசி ஓவரை மிகச்சிறப்பாகக் கையாண்டார்.

அனுகுல் ராயும் பவர்-பிளே மற்றும் மிடில் ஓவர்களில் அபாரமாகச் செயல்பட்டார். பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தில் தெளிவாகச் செயல்பட்டது இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது," என ரஹானே தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0