'கருத்து கேட்பு கூட்டத்தை ரகசியமா நடத்துவீங்களா?' - கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கருத்துக் கேட்பு கூட்டங்களையும் அதிகாரிகள் மறைமுகமாக நடத்தி முடிக்க திட்டமிடுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர் பட்டினப்பாக்கம் மீனவர்கள்.

1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்திலேயே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது. உடனடியாக பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையுள்ள பல்வேறு மீனவ கிராமத்தினரும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீனவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதா என அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சென்னை ஆட்சியர் அலுவலத்தில் பட்டினப்பாக்கம் மீனவர்களுடன் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது இந்தக் கருத்து கேட்புக் கூட்டம் நவம்பர் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மீனவ கிராமங்களுக்கு அரசு சார்பில் முறையாக அழைப்பு விடுக்காமல் மறைமுகமாக கூட்டத்தை நடத்தி முடிக்க நினைத்ததாலயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என மீனவ கிராமத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தென்னிந்திய மீனவர் நலச்சங்க தலைவர் பாரதி, 'பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரை 12 கிராம மக்கள் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படுவோம். கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினால் அங்கே எங்களின் கருத்துகளை எடுத்து வைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், அரசு சார்பில் கலகெடர் அலுவலகத்திலிருந்து முறையாக அழைப்பு விடுக்கவில்லை.
போராடும் சங்கப் பிரதிநிதிகளை அழைக்காமல், கைப்போன போக்கில் பொதுவாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு மீனவருக்கு போனில் அழைத்து கிராமத்துக்கு ஒருவர் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு வந்தால் போதும் என்றனர்.
கிராமத்துக்கு ஒருவரை அழைத்து அவ்வளவு ரகசியமாக மறைமுகமாக நீங்கள் என்ன கூட்டத்தை நடத்தப் போகிறீர்கள்? அரசு தங்களுக்கு சாதகமான ஆட்களை அழைத்து கூட்டத்தை நடத்த திட்டமிட்டுவிட்டதோ எனும் சந்தேகமும் எங்களுக்கு எழுந்தது. அதனால் எழுத்துப்பூர்வமாக 12 கிராமங்களுக்கும் அரசு சார்பில் அழைப்பு விடுக்காவிடில் கூட்டத்தில் யாரும் கலந்துகொள்ளமாட்டோம் என கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கடிதம் கொடுத்தோம்.
அதைத் தொடர்ந்தே இன்று நடக்கவிருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை வியாழன்கிழமைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். அந்த கூட்டத்துக்கும் இன்னும் அழைப்புக் கடிதம் வரவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களின் கருத்துகளை கூட்டத்தில் வலுவாக எடுத்து வைப்போம். நிச்சயாம இந்தத் திட்டத்தை எதிர்ப்போம். அந்த இடம் மீனவர்களுக்கு குடியிருப்பு கட்ட வேண்டிய இடமென ஆதாரத்தோடு எடுத்து வைப்போம்' என்றார் உறுதியாக.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)