தடம் : இரட்டை மாயம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 38
ஆகாஷ் எனும் இளைஞன் ஒருவன் கொடூரமாகக் கொல்லப்படுகிறான். அவனைக் கொலை செய்தது எழில், கவின் எனும் இரட்டையர்களில் ஒருவன் என்பது பார்வையாளர்களான நமக்குத் தெரியும். ஆனால், அந்த இருவரில் யாரென்பது நமக்கும் தெரியாது, படத்திலிருக்கும் எந்தக் கதாபாத்திரங்களுக்கும் தெரியாது. கடைசி வரை ஒரே போராட்டமாக இருக்கிறது. வழக்கைத் துப்பறியும் மலர்விழி எனும் ஒரு எஸ்.ஐ அந்த இருவரில் நிஜமானக் குற்றவாளியைக் கண்டுபிடித்திட கடுமையாகப் போராடுகிறார்.
புகைப்படத் தடயம் உதவவில்லை. டிஎன்ஏ சாம்பிள் கூட அவரைக் கைவிடுகிறது. கைரேகைதான் ஒரே வழி. ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. போலீசார் அந்த இருவரும் அண்ணன், தம்பி என்பதையும், இருவருக்குமே ஆகாஷோடு எந்தத் தொடர்புமில்லை என்பதையும், இருவருமே கொலை நடந்த நேரத்தில் வேறு இடத்தில் இருந்தார்கள் எனும் சாட்சியங்களையும் கண்டுபிடிக்கிறார்கள்.
யாரோ ஒருவன் பொய் சொல்கிறான், பொய் சாட்சியங்களையும் ஏற்பாடு செய்திருக்கிறான். ஆனால், அது யாரென்பது கடைசி வரை தெரியவில்லை. மலர்விழியால் என்னதான் செய்யமுடியும்? வழக்கு நடக்கிறது. குற்றவாளி கைப்பிடியில் இருக்கிறான். ஆனால், நிரூபிக்க வழியில்லை! இருவரும் தண்டிக்கப்பட சட்டத்தில் இடமில்லை. அதனால், இருவருமே விடுதலை செய்யப்படுகிறார்கள்.

நீதிமன்றத்தில், இருவரும் விடுதலையாகி படம் முடியும் தருவாயில் ’எல்லாம் சரிதான். குற்றவாளி யாருன்னு சொல்லுங்கப்பா, இதுக்கு மேல சஸ்பென்ஸ் தாங்க முடியாது’ என்று நாம் பரபரக்கும் வேளையில், மலர்விழி, எழிலின் காதலியான தீபிகாவின் போட்டோ ஒன்றைப் பார்க்கிறார். அதன் பின் வெளிப்படுகிறது பல ரகசியங்கள். ஆகாஷைக் கொலை செய்தது யார்? என்ன காரணம்? இன்னொருவன் ஏன் உள்ளே வந்தான்? அவன் ஆடிய ஆட்டம் எத்தகையது? கூடவே பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களான நமக்கே தெரியாமல் எஸ்.ஐ மலர்விழி செய்த காரியம் என்ன? என்பதெல்லாம் படபடவென விரிந்து கதை நிறைவடைகிறது.
அருண் விஜய், எழில் மற்றும் கவின் எனும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐடண்டிகல் டிவின்ஸ் இருவரின் கதாபாத்திரங்களையும் தனித்தனியாக அடையாளப்படுத்த வேண்டிய பெரிய சவால் அருண் விஜய்க்கு இருந்தது. மிக நுணுக்கமாக அதை வேறுபடுத்திக் காட்டியிருந்தார். இருவரும் பெரும்பாலான விசயங்களில் ஒரே மாதிரியானவர்கள் என்பதைச் சொல்லவே ’அழகு’ எனும் ஒரே பொருள்படும்படியான இரண்டு பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 30 வருடங்களாகத் திரைத்துறையில் இயங்கி வரும் அருண் விஜய்க்கு குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படங்கள் குறைவானவையே. அவற்றுள் மகிழ் திருமேனியுடன் பணியாற்றிய தடையறத்தாக்க, தடம் ஆகிய படங்கள் முக்கியமானவை. காவல் நிலையத்தில் நடக்கும் சண்டைக் காட்சியெல்லாம் ஒரு நடிகருக்கு வாழ்நாள் கனவு போன்ற ஒரு வாய்ப்புதான். அதை அத்தனைப் பிரமாதமாகச் செய்திருந்தார் அருண்.
மலர் விழியாக வித்யா பிரதீப், தீபிகாவாக தான்யா ஹோப், ஆனந்தியாக ஸ்மிருதி வெங்கட், காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனாக பெப்சி விஜயன், கவினின் நண்பன் சுருளியாக யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தார்கள்.

’ஐ ஹேட் காஃபி’ என்று எழிலை மடக்கும் இடத்திலும், ’நான் திரும்பி வர்ற வரைக்கும் யார் ஆளுனு ஞாபகம் வைச்சுக்க வேண்டாமா?’ எனும் ரயில் காட்சியிலும் தான்யாவின் அழகு நம்மை மயக்குகிறது. காவல்துறையில் பணியாற்றும் பெண்கள், பயிற்சியும் பணிச்சூழலும் தரும் கம்பீரத்துடன் இருப்பார்கள். அதே நேரத்தில், அந்தக் கம்பீரத்துக்குள் தங்களுக்கே உரிய நளினத்தையும் இயல்பையும் தக்கவைத்துக்கொள்ளும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு மலர்விழியாகவே வாழ்ந்திருந்தார் வித்யா பிரதீப்.
விசாரணைக் கைதிகளை அவர் அடிப்பதில்லை. அப்பாவுக்குப் பொறுப்பாகக் காராமணிப் பொரியல் செய்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டுப் பணிக்குச் செல்லும் குடும்பப் பெண். பெரிய கண்களுடன் அழகாகவும் இருக்கிறார். கான்ஸ்டபிள்களை வெடுக்கெனக் கண்டிக்கும்போதுகூட அவரிடம் ஒரு நளினம் வெளிப்படுகிறது. எல்லாவற்றையும் தாண்டி தன் பொறுப்பில் தீவிரமாக இருக்கிறார். இத்தனைக் குணங்களையும் இயல்பாக வெளிப்படுத்தியிருந்தது வித்யாவின் நடிப்பு. மலர்விழி என்ற பெயரேகூட இந்தக் கதாபாத்திரத்தின் மென்மையைச் சுட்டுவதற்காகச் சூட்டப்பட்டிருக்கலாம்.
ஒளிப்பதிவு எஸ். கோபிநாத். கொலை விசாரணை, காவல் நிலையக் காட்சிகள் எனத் திரைக்கதை நகரும் விதத்துக்கு ஏற்ற பரபரப்பான உணர்வைக் கொண்டு வந்திருந்தார். சண்டைக்கலைஞர்களான அன்பறிவ் அமைத்திருந்த காவல்நிலையச் சண்டைக்காட்சி குறிப்பிட வேண்டிய ஒன்று. அதுவரையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ இரட்டை வேடங்களையும், அப்படியான இரண்டு கதாபாத்திரங்கள் மோதிக்கொள்வதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் இரண்டு அருண் விஜய்களும் மோதிக்கொள்ளும் காட்சி மிரட்டலாக அமைந்திருந்தது.
ஏதோ இரண்டு தனித்தனி நடிகர்கள் மோதிக்கொள்வதைப் போலவே, எந்தத் தயக்கமுமின்றி கோபிநாத்தின் கேமரா எல்லா இடங்களிலும் புகுந்து புறப்பட்டு அதைக் காட்சிப் படுத்திய விதம் நம்மை வியப்பூட்டியது. பல திருப்பங்களைக் கொண்ட கதையில், பார்வையாளர்களின் கவனத்தைத் தக்கவைத்துக்கொண்டு தகவல்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவது மிக முக்கியமானது. அந்த வகையில் என்.பி.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு திறம்படச் செய்யப்பட்டிருந்தது.

இசையமைப்பாளர் அருண் ராஜுக்கு தடம் முதல் படம். ’இணையே’ பாடலை சித் ஸ்ரீராம், பத்மலதா பாடியிருந்தார்கள். ’விதி நதியே’ பாடலை ரேவந்த் பாடியிருந்தார். இரண்டு பாடல்களையும் எழுதியவர் மதன் கார்க்கி. மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கும் அடித்தளமாக இருப்பது தொடக்கத்தில் கொஞ்ச நேரமே வரும் எழில், தீபிகாவின் காதல் பகுதிதான். அந்தக் குறைந்த நேரத்தில் அதைச் சிறப்பாக நிறுவிட ’இணையே’ பாடல் மிக முக்கியப் பங்கு வகித்தது.
’உடல் மேல் பூக்கும் நீரோடு நீராடியே’ வரிகள் காதலையும், காமத்தையும் ஒன்று கலந்தன. இன்றைக்கும் காதலர்களின் பிளேலிஸ்ட்டில் உள்ள பாடல் இது. இறுதிக் காட்சியில் எல்லாப் பரபரப்பும் ஓய்ந்து எழில் காரில் கிளம்புகையில் ’ஆறாய் மனம்’ என்று தொடங்கும் விதி நதியே பாடலின் வரிகள், ஒரு சூறைக்காற்றில் சிக்கிக்கொண்ட இலையொன்று காற்றடங்கும் பொழுதில் தரை சேர்வதைப் போல பார்வையாளர்களின் மனங்களை ஆசுவாசப்படுத்தியது. பாடல்களோடு அருண்ராஜின் சிறப்பான பின்னணி இசையும் படத்தின் குற்றப் புலனாய்வுப் பின்னணிக்கு மேலும் வலுசேர்த்தது.
’ரேதன் தி சினிமா பீப்பிள்’ நிறுவனத்துக்காக இந்தர்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்க கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தவர் மகிழ் திருமேனி. தடையறத்தாக்க, மீகாமன் போன்ற திரில்லர் படங்களைத் தனது தனித்துவமான பாணியில் வழங்கி வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்திருந்த மகிழ், ’தடத்’தில் இதுவரையிலான அவரது உச்சத்தைக் கொடுத்திருந்தார். சிறப்பான திரைக்கதை எழுத்தாளர்கள் கூட எல்லா சமயங்களிலும் அருமையான திரைக்கதைகளை எழுதிவிடுவதில்லை. அது அரிதானது. தடம் அப்படியான ஒன்று.
தடம் குற்றப்புலனாய்வுக் கதைகளுக்கே உரிய எதிர்பாராத் திருப்பங்களையும், விறுவிறுப்பையும் கொண்டிருந்த அதே சமயம், ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்வுப் பூர்வமாகவும் அமைக்கப்பட்டிருந்தது.
கவின் திருடன்தான், ஆனால் அவனுக்கென்று சில தொழில் தர்மங்கள் இருக்கின்றன. ஆனந்தி போன்ற எளிய மனிதர்களை அவன் ஏமாற்றுவதில்லை. ஆனால், இக்கட்டான ஒரு சூழ்நிலையில் வேறு வழியே இல்லாமல் ஆனந்தியிடம் வந்து ’அம்மாவுக்கு உடம்பு சரியில்லை’ என்று சொல்லிப் பணம் கேட்கிறான். அதற்கு முன்னதாகவே கவின் ஓர் ஏமாற்றுக்காரன் என்பதை ஆனந்தி அறிவாள். தெரிந்தே பணத்தை ஏன் கொடுக்கிறாள் எனும் சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. கவின் பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பி நடக்கும் போது, அவனை அழைத்து ஒரு கேள்வியைக் கேட்கிறாள் ஆனந்தி.

”என் பெயராவது உங்களுக்குத் தெரியுமா கவின்?”
பிறகு, அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் இடத்தில் வைத்து நமது சந்தேகத்தையேதான் கவினும் அவளிடம் கேட்கிறான், ”நான் ஏமாற்றுக்காரன்னு தெரிஞ்சும் ஏன் பணத்தைக் கொடுத்தாய்? ஒருவேளை நான் வரலாமலே போயிருந்தால்?” அதற்குப் பதில் சொல்கிறாள் அவள், ”ஒருவேளை நீ வராமலே போயிருந்தால் உன்னை மறக்குறதுக்கு எனக்கு எளிதாக இருந்திருக்கும்”. அந்தச் சின்ன இடைவெளியில் கவினைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறோம் எனும் நினைப்பில் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்திருக்கிறாள் அந்த அப்பாவிப் பெண். அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாத துயரத்தால் வெளிப்பட்ட செயல்தான் அது.
இப்படியான படங்களில் நகைச்சுவைக்கான வாய்ப்பு மிகக்குறைவு. ஆனாலும், வெங்கட் எனும் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியான், ஆங்காங்கே ஒரு மிதமான, இயல்பான நகைச்சுவையைச் சாத்தியப்படுத்தியிருந்தார். விசாரணைக்குப் போன இடத்தில் இருக்கும் வீடுகளைப் பார்த்து, ’அவனவன் ஒண்டுறதுக்கு ஒரு வீடில்லாம இருக்குறான். ஆனால், இந்தப் பணக்காரனுக வருசத்துக்கு ஒருநாள் வந்து போக எம்மாம் பெரிய பங்களா கட்டி வைச்சிருக்கானுக பாத்தியா’ என்று புலம்புகிறார்.
தடயம் சேகரிக்கப்போன இடத்தில் பக்கத்து வீட்டுப் பெண்ணை சைட் அடிக்கிறார். எழிலை எப்படியாவது மாட்டிவிட வேண்டும் என்று கஷ்டப்பட்டு ஜிகே ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் போது அவரிடம் போய், ’எழிலுக்கு சாதகமா சாட்சி சொல்ல அந்தக் கால் டாக்சிக்காரன் வந்துட்டான் சார். நான் அப்பவே சொன்னேன்ல சார், எழில் ஒரு இன்னசண்ட்னு’ என்று சிரித்த முகமாகச் சொல்லி, முகத்திலேயே குத்து வாங்குகிறார். எல்லா போலீசாரும் மிடுக்காக வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த போது, இவர் மட்டும் நேரம் காலம் தெரியாமல் எதையாவது பேசிக் கொண்டிருப்பது அழகு.
ஒவ்வொரு கட்டத்திலும் நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆனால், அடுத்த காட்சியிலேயே அந்த முடிவை மாற்றும் இன்னொரு தகவல் கிடைக்கிறது. இறுதியில் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது, இதுவரை பார்த்த காட்சிகளைக்கூட வேறொரு கோணத்தில் யோசிக்க வைக்கிறது திரைக்கதை.
ஒரு நல்ல த்ரில்லர் என்பது அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்க வைப்பது மட்டுமல்ல; நடந்ததைப் பற்றிய நம் புரிதலையே மாற்றுவதும்தான். அந்த வகையில், ஒரு சிறப்பான திரைக்கதை அனுபவத்தை நமக்குக் கொடுத்துத் தடம் பதித்துச் சென்றது இந்தத் தடம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)