திருப்பதி: பக்தர்களுக்கான புதிய வழிகாட்டிச் செயலி... Venkatadri App-ன் 7 முக்கிய அம்சங்கள் தெரியுமா?

Oct 28, 2026 - 08:31
0
திருப்பதி: பக்தர்களுக்கான புதிய வழிகாட்டிச் செயலி... Venkatadri App-ன் 7 முக்கிய அம்சங்கள் தெரியுமா?

திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பார்கள். அத்தகைய பிரசித்திபெற்ற திருப்பதி வேங்கடாஜலபதியை ஆண்டுதோறும் தோராயமாக 2.5 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், மாதந்தோறும் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் தரிசித்து மகிழ்கின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க திருத்தலத்தை எந்தவொரு இடையூறுமின்றித் தரிசிக்க, எளிமையான இணையவழி வழிகாட்டிச் செயலியான என்ற Venkatadri செயலியைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கியுள்ளது.

இச்செயலியின் முக்கிய அம்சங்கள்:

1. திருப்பதி திருத்தலத்தைச் சுற்றியுள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள், வைகுண்டத்திற்கான வரிசை, மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் 25 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் கீழ் 350-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு கூகுள் மேப்பின் வழிகாட்டுதலுடன் துல்லியமாகச் சென்றடையலாம்.

2. இந்தச் செயலியில் ‘கோவிந்தா’ என்னும் குரல்வழித் தேடல் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் மைக்கை இயக்கி, எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறினால் மட்டும் போதும். அந்த இடத்தை செயலி துல்லியமாகக் காண்பிப்பதால், யாருடைய உதவியும் இன்றி அந்த இடத்தைச் சென்றடையலாம்.

3. திருப்பதியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இணைய வசதி குறைவாக இருப்பதால், இச்செயலி இணையம் இல்லாமலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்னல் கிடைக்கவில்லை என்ற பிரச்னையின்றி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வைத்திருப்பவர்கள் இணைய வசதி இல்லாமலும் இதைப் பயன்படுத்தலாம்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

4. திருப்பதியில் நிலவும் வாகன நெரிசலில் எங்கு வாகனத்தை நிறுத்தினோம் என்று குழப்பமடைபவர்களுக்கும், எந்த விடுதியில் தங்கியிருந்தோம் என்பதை மறந்து தேடுபவர்களுக்கும் உதவும் வகையில், வாகன நிறுத்துமிடம் மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றைச் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் இந்தச் செயலியில் இடம்பெற்றுள்ளது. திரும்பிச் செல்லும்போது சேமித்து வைத்திருந்தால், அதுவே வழிகாட்டிவிடும்.

5. திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவச தர்மப் பேருந்துகள் குறித்த தகவல்களை ஒரே செயலியில் அறிந்துகொள்ளும் வகையில், திருமலைக்கு வரும் இலவச தர்மப் பேருந்துகள் எங்கு வருகின்றன, எப்போது வருகின்றன என்பன போன்ற தகவல்களை இச்செயலி துல்லியமாக நேரலையில் வழங்குகிறது.

6. திருமலைக்கு வரும் பக்தர்கள் அவசர நேரங்களிலோ அல்லது ஆபத்தான சூழல்களிலோ தேவஸ்தான உதவியாளர்களையோ காவலர்களையோ அழைக்க, இதில் உள்ள அவசரகாலப் பொத்தானை அழுத்தினாலே போதும். உடனடியாக உதவி கிடைப்பதற்கான ஏற்பாடு செய்யப்படுவது இச்செயலியின் சிறப்பம்சமாகும்.

7. இத்தகைய சிறப்பு வாய்ந்த இச்செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User