Akshara Haasan: "அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது!" - அக்ஷரா ஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் நடித்திருக்கும் 'சிமுலேக்ரா' (Simulacra) திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது.
இந்தப் படத்திற்காக அளித்த நேர்காணல் ஒன்றில் தனது பெற்றோரின் கலைப் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது குறித்தும், தனது சகோதரி ஸ்ருதி ஹாசனுடனான பிணைப்பு குறித்தும் பகிர்ந்திருக்கிறார் அக்ஷரா ஹாசன்.

அதில் பேசிய அக்ஷரா ஹாசன், "என் பெற்றோர் இருவருமே வீட்டுக்குள்ளும் வெளியிலும் உள்ள இரண்டு வெவ்வேறு உலகங்களைப் பற்றி எங்களுக்குப் புரிய வைத்தார்கள்.
வீட்டிற்குள் நாங்கள் சிறந்த மனிதர்களாகவும், சுயமாகவும் இருப்பதற்கான முழு சுதந்திரத்தையும் கொடுத்தார்கள். அதே நேரத்தில், வீட்டின் வெளி உலகம் முற்றிலும் வேறுபட்டது என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
நானும் என் சகோதரி ஸ்ருதியும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, எங்களால் முடிந்த சிறந்த உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பதைப் பெற்றோர் புரிய வைத்தார்கள்.
அதனால், சில விஷயங்களில் நாங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால், எங்கள் பெற்றோர் தங்களின் சொந்த உழைப்பாலும் திறமையாலும் கஷ்டப்பட்டு உருவாக்கிய பெருமையையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

அதே நேரத்தில், எங்களுக்கு என்று தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொள்ளவும், சுயமாகச் சாதிக்கவும் எங்களுக்கான சுதந்திரத்தை அளித்திருக்கிறார்கள்.
நாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது; அதை நாங்கள் பாதுகாக்கவும் வேண்டும்.
அதே சமயம், நாங்கள் விருப்பப்பட்ட பாதையில் பயணிக்கும் சுதந்திரமும், பெற்றோரின் சரியான வழிகாட்டுதலும் கிடைத்ததால், எங்களால் எதையும் எளிதாகச் சாதிக்க முடிகிறது" எனப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)