பெரியார் நூலகத்தில் போலிப் புத்தகங்கள் அகற்றம் – தமிழ்ச் சமூகத்தின் வெற்றி என எழுத்தாளர்கள் கருத்து!

Nov 07, 2026 - 21:30
0
பெரியார் நூலகத்தில் போலிப் புத்தகங்கள் அகற்றம் – தமிழ்ச் சமூகத்தின் வெற்றி என எழுத்தாளர்கள் கருத்து!

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போலிப் புத்தகங்களை, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டினார். இது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த போலிப் புத்தகங்களை அகற்ற வேண்டும் எனவும், இவற்றை கொள்முதல் செய்து ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுத்தாளர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இக்கோரிக்கையை வலியுறுத்தி காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போலிப் புத்தகங்கள் அகற்றம்
போலிப் புத்தகங்கள் அகற்றம்

இந்த நிலையில் பெரியார் நூலகத்தில் இருந்த சர்ச்சைக்குள்ளான அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தங்கள் இன்று மதியம் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறியதாவது, “எங்களது கோரிக்கையை ஏற்று அந்த புத்தகங்களை அகற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. இது ஒரு பதிப்பு மோசடி. இந்த நூல்களை கொள்முதல் செய்ய காரணமானவர்கள் மீதும், போலிப் புத்தகங்களை உருவாக்கிய பதிப்பாளர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல மற்ற நூலகங்களிலும் ஊழல் நடைபெற்று உள்ளதா என்பது குறித்து அரசு குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

போலிப் புத்தகங்கள் அகற்றம்
போலிப் புத்தகங்கள் அகற்றம்

தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் அ.கரீம் கூறுகையில், “அறிவு மோசடியில் ஈடுபட்ட போலிப் புத்தகங்களை அகற்றவில்லை எனில், முற்போக்கு அமைப்புகள் சார்பில் நாங்களே அகற்றுவோம் என கூறியிருந்தோம். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பெரியார் நூலகத்தில் இருந்த போலிப் புத்தகங்களை உடனடியாக அகற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. இது தமிழ்ச் சமூகத்திற்கும், இதற்காக குரல் எழுப்பிய எழுத்தாளர்களுக்கும் கிடைத்த வெற்றி. இதேபோல மற்ற நூலகங்களிலும் போலிப் புத்தகங்கள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User