நூறு கோடி வானவில் விமர்சனம்: காதலின் எதார்த்தத்தைப் பேசுகிறதா இந்த கலர்புல் சினிமா?

Nov 06, 2026 - 16:30
0
நூறு கோடி வானவில் விமர்சனம்: காதலின் எதார்த்தத்தைப் பேசுகிறதா இந்த கலர்புல் சினிமா?

மும்பையிலுள்ள பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கும் வினோத் (ஹரிஷ் கல்யாண்) பதவி உயர்வுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரை கோவாவிலுள்ள லோக்கல் கிளைக்குப் பணிமாற்றம் செய்கிறது நிர்வாகம். கோவாவில் தரையிறங்கும் வினோத்திற்கு, சுற்றுலா வழிகாட்டியான ஃபென்னியைக் (சித்தி இத்னானி) கண்டு ஈர்ப்பு வருகிறது.

நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review
நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review

ஃபென்னியை வைத்து வெற்றிகரமாக ஒரு நிகழ்ச்சியைச் செய்துகாட்டி, தன்னை நிரூபிக்க முடிவெடுக்கிறார் வினோத். முதலில் மறுத்தாலும், கோமா நிலையில் இருக்கும் தன் காதலர் ரிச்சியின் (ரினில்) மருத்துவச் செலவிற்காக ஒத்துக்கொள்கிறார் ஃபென்னி. இந்தப் பயணத்தில் வினோத்துக்கும் ஃபென்னிக்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடும் காதலைப் பேசுகிறது இயக்குநர் சசியின் 'நூறு கோடி வானவில்'.

கோபம், துருதுருப்பு, காதல், அதன் தத்தளிப்பு எனத் துடிப்பான இளைஞர் கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் கச்சிதம். ஆங்காங்கே தலைகாட்டும் குடும்ப எமோஷனிலும் குறைகளில்லை. கண்மூடித்தனமான காதல், அப்பாவித்தனம், முக்கோணக் காதலோடு மல்லுக்கட்டுவது என எந்நேரமும் எமோஷன்களோடு நடைபோடும் ஃபென்னி கதாபாத்திரத்தை, சில மிகை நடிப்புத் தருணங்களோடு கரைசேர்க்கிறார் சித்தி இத்னானி. ஃபென்னியின் காதலனாக ரினிலின் செயற்கைத்தனமான நடிப்பு பெரிய மைனஸ். கோவை சரளா, தம்பி ராமையா, விஜே பார்வதி, சின்னி ஜெயந்த் ஆகியோர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.

நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review
நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review

கோவாவின் பழைமையின் அழகையும், பசுமையின் பொலிவையும் இந்தக் காதல் கதைக்கு டபுள் இன்ஜினாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார். காதல் படத்திற்கான மீட்டரைப் படத்தொகுப்பாளர் எம்.சுபாரத் கச்சிதமாகப் பிடித்திருந்தாலும், பல இடங்களில் வேகத்தைக் கூட்டத் தவறியிருக்கிறார். சித்து குமாரின் 'போதும் போ', 'கண்ணாட்டி' ஆகிய பாடல்களும், சில பின்னணி இசை கோவைகளும் காதலுக்கு ஸ்ருதி சேர்க்கின்றன.

பரபரப்பான மும்பை இளைஞன் vs நிதானமான கோவா இளைஞி என்ற தொடக்க லைனும், கோவாவின் பின்புலமும் சுவாரஸ்யம் தருகின்றன. ஃபென்னியின் காதல், லட்சியம், வினோத்தின் காதல், அவரது லட்சியம் என மையக்கதை தேவையான திருப்பங்கள், முட்டல் மோதல்களுடன் நகர்ந்தாலும், படம் முழுதும் நீடிக்கும் செயற்கைத்தனம் திரையோடு நம்மை ஒன்றவிடாமல் செய்கிறது. மேலும், திருப்பங்களும் திரைக்கதையும் மேம்போக்காகவும், யூகிக்கும் வகையிலும் நகர்வது பெரிய மைனஸ்.

நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review
நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review

கண்மூடித்தனமான காதலால் தன் சின்ன சின்ன ஆசைகளையும், லட்சியங்களையும், சுயத்தையும் துறக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனப்போராட்டத்தையும், காதலால் மனதிற்குள் வரும் ஊசலாட்டத்தையும் ஃபென்னி கதாபாத்திரம் மூலம் நன்றாகப் பதிவு செய்கிறது திரைக்கதை. ஆனால், ஏற்கனவே கண்மூடித்தனமான காதலிலிருக்கும் பெண்ணுக்கு ஏன் வேறொரு ஆண் மீது காதல் வருகிறது என்பதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லாமல் இருப்பது குழப்பத்தையே தருகிறது.

திருநர் கதாபாத்திரம் மூலம் இயக்குநர் என்ன நிறுவ வருகிறார் என்பதிலும் குழப்பமே! ஆங்காங்கே மெல்லுணர்வைப் பேசும் காட்சிகளும், சின்ன சின்ன ஒன்லைனர்களும் ஆறுதல் தருகின்றன. கவிதைப்பூர்வமான சில வசனங்கள் ரசிக்க வைத்தாலும், அதே வகையான ஏனைய வசனங்கள் செயற்கைத்தனத்தோடு துருத்திக்கொண்டு நிற்கின்றன.

காதலின் எதார்த்தத்தையும் ஊசலாட்டத்தையும் பேசும் அழகான மையக்கதையை, முழுமையும் தெளிவும் இல்லாத திரைக்கதையால் கலைத்துப் போடுகிறது இந்த 'நூறு கோடி வானவில்'.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User