30 ஆண்டுகள் வாழ்ந்து 300 ஆண்டு மருத்துவ வரலாற்றில் இடம்பிடித்த இந்தியப் பெண் மருத்துவர்!

Nov 27, 2026 - 02:30
0
30 ஆண்டுகள் வாழ்ந்து 300 ஆண்டு மருத்துவ வரலாற்றில் இடம்பிடித்த இந்தியப் பெண் மருத்துவர்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

பெண்கள் கல்வி கற்பதற்குப் பல சமூகத் தடைகள் இருந்த 19-ஆம் நூற்றாண்டில், இந்தியாவிலிருந்து ஸ்காட்லாந்து சென்று மருத்துவம் பயின்று, பிரிட்டனின் அதிகாரப்பூர்வ மருத்துவப் பதிவேட்டில் முதல் இந்தியப் பெண் மருத்துவராக இடம்பெற்ற மருத்துவர்.அன்னி வார்ட்லா ஜெகநாதன் குறித்து  பலருக்குத் தெரியாது. பெண்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, துணிச்சல், கற்கும் ஆர்வம், அறிவுத்திறன் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றிற்குச் சான்றாகத் திகழ்கிறது.

மருத்துவர்.அன்னி வார்ட்லா ஜெகநாதன் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த விசாகப்பட்டினத்தில், 1864-ஆம் ஆண்டு மே 30-அன்று பிறந்தார். தெலுங்கு மொழியில் கவிதைகளை இயற்றிய அன்னியின் தந்தை புலிபாகா ஜெகநாதன் லண்டன் மிஷனரி சொசைட்டியுடன் தொடர்புடைய ஒரு ஆசிரியராகவும், கிறிஸ்தவ மறைப்பணியாளராகவும் இருந்தார். அன்னியின் தாயாரான எலிசா ஆஸ்போர்ன் மிஷனரி பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியையாக பணியாற்றினார். ஆறு குழந்தைகளில் ஒருவர் பிறந்த அன்னியின் சகோதரர் பி. ரிச்சர்ட் ஹே ஜெகநாதன் எடின்பர்க்கில் மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரானார்.


19-ஆம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மிஷனரி குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு 'அன்னி' என்ற பெயர் பொதுவாகவும் பிரபலமாகவும் சூட்டப்பட்டது. ஆனியின் தந்தை, விசாகப்பட்டினத்தில் 'லண்டன் மிஷனரி சொசைட்டி' அமைப்பைச் சேர்ந்த ஜான் ஸ்மித் வார்ட்லா என்பவரிடம் கல்வி பயின்று, பின்னர் அவருடன் இணைந்து பணியாற்றவும் செய்தார். நன்றியுணர்வின், மரியாதையின் அடையாளமாக, அவர் தனது மகளின் பெயருடன் 'வார்ட்லா' என்பதையும் சேர்த்து, அவரை 'அன்னி வார்ட்லா' என்று அழைத்தார்.

விசாகப்பட்டினத்தில் இருந்த ஒரு மிஷனரி பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற ஆனி, மெட்ராஸ் மாகாணத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் உள்நாட்டு கிறிஸ்தவப் பெண்மணி ஆவார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். 1884-ஆம் ஆண்டில், தனது 20-வது வயதில், அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, புகழ்பெற்ற மருத்துவர் ஆர்தர் மட்ஜ் பிரான்ஃபுட்டின் வழிகாட்டுதலின் கீழ் மகப்பேறியல் துறையில் பயிற்சி பெற்றார்.

பெண் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட 'கவுண்டஸ் ஆஃப் டஃபெரின் ஃபண்ட்' (Countess of Dufferin Fund) அமைப்பின் கல்வி உதவித்தொகையைப் பெற்று, அவர் மேலதிகப் படிப்பிற்காக ஸ்காட்லாந்திற்குச் சென்றார். அங்கு, சோபியா ஜெக்ஸ்-பிளேக் என்பவரால் நிறுவப்பட்ட எடின்பர்க் மகளிர் மருத்துவப் பள்ளியில் (Edinburgh Medical School for Women) அவர் சேர்ந்தார்.

அங்கு மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மாணவியான அன்னி, தனது பொது மருத்துவக் கல்வியுடன், மனநல மருத்துவத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்றார். எடின்பர்க் பெண்கள் மருத்துவப் பள்ளியில் தனது இறுதித் தேர்வுகளை மிகச் சிறப்பாக எழுதி உயர்ந்த மதிப்பெண்களுக்கான சிறப்பு மதிப்பெண் சான்றிதழுடன் பேராசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்றார். அவரது திறமையைப் பாராட்டி எடின்பர்க்கில் உள்ள 'சர்ஜன்ஸ் ஹால்' (Surgeons' Hall) என்ற புகழ்பெற்ற மருத்துவக் கூடத்தில் மாணவர்களுக்கு உடற்கூறியல் பாடங்களை விளக்கிக் காட்டும் உடற்கூறியல் விளக்கக்காட்சியாளர் (Demonstrator of Anatomy) பொறுப்பு வழங்கப்பட்டது. 

1890-ஆம் ஆண்டு அன்னி, மருத்துவத் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, ஸ்காட்லாந்தின் எல்.ஆர்.சி.பி (LRCP-Licentiate of the Royal College of Physicians), எல்.ஆர்.சி.எஸ் (LRCS-Licentiate of the Royal College of Surgeons), எல்.ஆர்.எஃப்.பி.எஸ் (LRFPS-Licentiate of the Royal Faculty of Physicians and Surgeons) ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மைத் தகுதி சான்றிதழைப் பெற்றார்.

1890-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதியன்று, பிரிட்டனின் அதிகாரப்பூர்வ மருத்துவப் பதிவேட்டில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர் என்ற வரலாற்றுச் சிறப்பை அன்னி பெற்றார். எடின்பர்க் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஓராண்டு காலம் நிலைய மருத்துவ அதிகாரி' (House Officer) ஆகப் பணியாற்றியதன் மூலம் அவர் மருத்துவ அனுபவத்தைப் பெற்றார்.

1892-ல் இந்தியா திரும்பிய அன்னி, பெண்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் பெயர் பெற்ற மும்பை காமா மருத்துவமனையில் 'நிலைய அறுவை சிகிச்சை நிபுணர் ' (House Surgeon) ஆகச் சேர்ந்தார். இங்கு அன்னி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவச் சேவை வழங்கினார். காமா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எடித் பெச்சி-பிப்சன் விடுப்பில் இருந்த காலங்களில், அன்னி அந்த மருத்துவமனையின் பொறுப்புகளை ஏற்று அதன் செயல்பாடுகளைக் கவனித்துக்கொண்டார். 

காமா மருத்துவமனையில் பணியாற்றிய காலத்தில் அவர் கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானார். காசநோயால் பாதிக்கப்பட்டதாகவும்  கடுமையான, வலிமிகுந்த தொண்டை நோயால் பாதிக்கப்பட்டதாகவும் இது குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன.

உடல்நிலை மோசமடைந்ததால் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்குத் திரும்பிய அன்னி, 1894-ஆம் ஆண்டு ஜூலை 26-அன்று தனது 30-வது வயதில் காலமானார். அவர் காலமானதைத் தொடர்ந்து, லண்டன் மிஷனரி சொசைட்டி தனது இதழான தி குரோனிக்கிள் ஆஃப் தி லண்டன் மிஷனரி சொசைட்டியில் (The Chronicle of the London Missionary Society)-"அவர் மறைந்தபோது அவருக்கு வயது முப்பதுதான்; இருப்பினும், அந்த இளம் வாழ்க்கை முழுமையாக, இறைவனுக்காக நேர்மையான, ஆடம்பரமற்ற மற்றும் உன்னதமான சேவையில் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது" என்று இரங்கல் செய்தி வெளியிட்டது.

எடின்பர்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் 300 ஆண்டு கால வரலாற்றைக் சிறப்பிக்கும் 'எடின்பர்க் மருத்துவப் பள்ளியின் 300 முகங்கள்' (300 Faces of Edinburgh Medical School) எனும் பட்டியலில் அன்னியின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. லண்டன் மற்றும் எடின்பர்க்கின் ராயல் மருத்துவக் கழக உரிமப் பதிவேடுகளில் (Licentiate Register), 1890-ஆம் ஆண்டு அன்னி பிரிட்டிஷ் மருத்துவப் பதிவேட்டில் முதன்முதலில் இணையும் போது இட்ட அவரது அதிகாரப்பூர்வ கையெழுத்து இன்றும் வரலாற்றுச் சான்றாகப் பாதுகாக்கப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவியும், மருத்துவத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு வரலாற்று ஆளுமை மருத்துவர்.அன்னி வார்ட்லா ஜெகநாதன்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User