வந்தே மாதரம்: ''நீங்கள் இந்த நாட்டில் வாழ விரும்பினால்..." - மேற்கு வங்க அரசின் சர்ச்சை உத்தரவு!

Jun 03, 2026 - 20:31
0
வந்தே மாதரம்: ''நீங்கள் இந்த நாட்டில் வாழ விரும்பினால்..." - மேற்கு வங்க அரசின் சர்ச்சை உத்தரவு!

மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி, தனது அரசின் முதல் முக்கிய முடிவுகளில் ஒன்றாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் மதரஸாக்களில் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளார். காலை பிரேயர் கூட்டத்தின் போது, தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் அனைத்து வரிகளையும் முழுமையாகப் பாட வேண்டும் என்று அந்த அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க அரசின் இந்த முடிவுக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) கடும் கவலை தெரிவிவித்துள்ளது. இந்தத் தன்னிச்சையான அறிவிப்பை மாநில அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் மாணவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

இது குறித்து வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் எஸ்.க்யூ.ஆர். இல்யாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``ஒரு மாணவரின் மத நம்பிக்கைக்கு மாறான ஒரு பாடலையோ அல்லது உரையையோ பாடுமாறு கட்டாயப்படுத்துவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, ``நீங்கள் இந்த நாட்டில் வாழ விரும்பினால், வந்தே மாதரம் மற்றும் ஜன கண மன பாட வேண்டும். ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளை நீங்கள் மதிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இந்தியப் பண்பாடு, சனாதனப் பண்பாடு. இந்தியா ஹிந்துஸ்தான் என்றும் அறியப்படுகிறது. இந்த நாடு வேறு யாருடைய கைகளுக்கும் சென்றுவிடக் கூடாது." என்றார்.

மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ``வந்தே மாதரம் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்குமான தேசியப் பாடல். இது எனக்கு மட்டுமே அல்லது உங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.

சசி தரூர்
சசி தரூர்

எந்தவொரு தனிப்பட்ட மாநிலத்திற்கோ அல்லது குறிப்பிட்ட மதத்திற்கோ இது பிரத்தியேகமானது அல்ல. இது ஒரு தேசியப் பாடல். இந்த விவகாரத்தை அரசியல் மயமாக்குவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இருக்கக் கூடாது." என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், `` அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் முடிவிலும் வந்தே மாதரத்தின் முழுப் பாடலையும் பாடுவது தேவையற்றது மற்றும் சுமையானது. வந்தே மாதரத்தை அனைவரும் மதிக்கிறோம். ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதன் முழுப் பதிப்பைக் கட்டாயமாக்குவதை நியாயப்படுத்த முடியாது. வழக்கமாக ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசியப் பாடலின் முதல் சில வரிகள் மட்டுமே பாடப்படும். தேசிய கீதம் இறுதியில் தனியாக இசைக்கப்படும். இப்போது முழுப் பாடலையும் தொடக்கத்திலும் முடிவிலும் பாடச் சொல்வது தேவையற்ற திணிப்பு" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User