தீபாவளி : எண்ணெய்க்குளியல் முதல் கேதார கௌரி விரதம் வரை... பூஜை செய்ய உகந்த நேரம்; தாத்பர்யங்கள்!

Nov 07, 2026 - 10:00
0
தீபாவளி : எண்ணெய்க்குளியல் முதல் கேதார கௌரி விரதம் வரை... பூஜை செய்ய உகந்த நேரம்;     தாத்பர்யங்கள்!

கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. மத்தாப்புகள் சுடர்விட குழந்தைகள் குதியாட்டம் போடத்தொடங்கிவிட்டனர். சொந்த ஊரில் தம் உற்றார் உறவினர்களோடு இந்த நாளில் மகிழ்ச்சியாகப் பொழுதைக்கழிக்க பல லட்சம்பேர்பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம், தீபாவளி. ஏன் தீபாவளிக்கு இவ்வளவு முக்கியத்துவம்? கொண்டாட்டங்கள் மட்டும்தானா தீபாவளி? தீபாவளி குறித்து நம் சாஸ்திரங்கள் சொல்வது என்ன என்பது குறித்துக் காண்போம்.

`தீப + அவளி - தீபங்களின் வரிசை’ என்று பொருள் சொல்வார்கள் பெரியவர்கள். அவ்வகையில் வீதியெங்கும், வீடு தோறும் தீபங்கள் ஏற்றிவைத்துக் கொண்டாடும் அற்புதமான ஒளிமிகு விழாதான் தீபாவளி. இன்றைக்கு அந்த வழக்கம் நம் தமிழகத்தில் இல்லை என்றாலும் தீபாவளி நாளில் தீபம் ஏற்றி வழிபடுவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும். இதுகுறித்து வடமாநிலத்தில் சொல்லப்படும் கதை ஒன்று சுவாரஸ்யமானது.

மகாலட்சுமி

மகாலட்சுமி உங்கள் வீட்டில் மகளா... மருமகளா?

சௌராஷ்டிர தேசத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். ஒருமுறை அவர் செய்த தவறினால் மகாலட்சுமியின் அருள் அவரை விட்டு நீங்கியது. ஒருவருக்குச் சேர வேண்டிய உழைப்புக்கான கூலியை அவர் அலட்சியமாகத் தூக்கி எறிந்ததால், மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளானார்.

அதன் விளைவாக, சூதாட்டத்தில் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் இழந்து ஏழையானார். இத்தனை துன்பத்திலும் அவருடைய மனைவி கணவனைப் பிரியாமல் உடனிருந்தார். இருவரும் தாங்கள் முன்பு செல்வத்துடன் வாழ்ந்த ஊரை விட்டுவிட்டு வேறொரு பகுதிக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.

அந்தச் செல்வந்தர் அங்கே அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தினார். அதேவேளை, ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி அன்று மகாலட்சுமிக்குச் சிறப்பாகப் பூஜை செய்து, இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்து வந்தார்.

ஒருநாள் காலையில் அவருடைய வீட்டின் வாசலில் ஒரு பருந்து வந்து அமர்ந்தது. அதன் காலில் இருந்த நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அழகிய மாலையை அங்கே போட்டுவிட்டுப் பறந்து சென்றது. அந்த மாலை யாருடையது என்று தெரியாமல் கணவன் வரும்வரை மனைவி காத்திருந்தார்.

அப்போது கணவர் ஒரு செய்தியைக் கூறினார். அந்த நாட்டு மன்னர் ஆற்றில் நீராடச் சென்றபோது, தன்னுடைய பரம்பரைச் சொத்தான நவரத்தின மாலையை ஆற்றங்கரையில் வைத்திருந்தார். அப்போது ஒரு பருந்து அந்த மாலையைத் தூக்கிச் சென்றுவிட்டது என்றும் மாலையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்றும் நாடெங்கும் அறிவித்திருக்கிறார் என்றார்.

உடனே அந்தத் தம்பதி அரண்மனைக்குச் சென்று மாலையை ஒப்படைத்தனர். மகிழ்ச்சியடைந்த மன்னர், அவர்கள் கேட்டதைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

தாங்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றுவிடலாம் என்று கணவர் நினைத்தார். ஆனால், அவருடைய மனைவியோ வித்தியாசமான ஒரு வேண்டுகோளை மன்னரிடம் வைத்தார்.

“இன்னும் சில நாள்களில் தீபாவளிப் பண்டிகை வரப்போகிறது. அன்று மாலை உங்கள் அரண்மனை உட்பட உங்கள் ராஜ்ஜியத்தில் எந்த வீட்டிலும் விளக்கேற்றக் கூடாது. விளக்கேற்ற விரும்புபவர்கள் தங்கள் வீட்டில் விளக்குகளை ஏற்றி, அவற்றை எங்கள் வீட்டைச் சுற்றி வைத்துவிட வேண்டும். எங்கள் வீட்டில் மட்டுமே தீபங்கள் ஒளிர வேண்டும்” என்றார்.

மன்னரும் அதற்கு ஒப்புக்கொண்டு நாடெங்கும் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தீபாவளி

தீபாவளி அன்று மாலை அந்தத் தம்பதியினரின் வீடு மட்டும் ஆயிரக்கணக்கான தீபங்களால் ஒளிர்ந்தது. மற்ற வீடுகள் அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தன.

தீபாவளி அன்று மாலை யார் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுகிறார்களோ, அந்த வீட்டில் தான் குடியிருக்க வேண்டும் என்பது மகாலட்சுமியின் சங்கல்பம். அதன்படி வைகுண்டத்திலிருந்து பூலோகத்துக்கு வந்த மகாலட்சுமி, அந்த தேசத்தில் ஒவ்வொரு வீட்டையும் பார்த்தார். ஆனால், எங்குமே விளக்குகள் எரியவில்லை. ஒரே ஓர் இடத்தில் மட்டும் வீடு முழுவதும் தீபங்கள் ஒளிர்வதைக் கண்ட மகாலட்சுமி, அந்த வீட்டுக்குள் செல்ல முடிவு செய்தார்.

வீட்டு வாசலிலேயே செல்வந்தரின் மனைவி காத்திருந்தாள். அந்தப் பெண் தன் பூஜாபலனால் வீட்டுவாசலுக்கு வந்த மகாலட்சுமியை தரிசனம் செய்தார். பிறகு அன்னையை வணங்கி “தாயே! நீங்கள் என் வீட்டுக்கு மகளாக வரப்போகிறீர்களா? அல்லது மருமகளாக வரப்போகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு மகாலட்சுமி, “இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?” சொல் என்றார்.

அதற்கு அவள், “நீங்கள் மகளாக வந்தால் சில காலம் கழித்து இன்னொருவர் வீட்டுக்குச் சென்றுவிடுவீர்கள். நான் இழந்த செல்வத்தை மீண்டும் இழக்க விரும்பவில்லை. என் குலம் விளங்க, என் குடும்பத்திலேயே நிலையாக இருக்க வேண்டுமென்றால் மருமகளாக வாருங்கள். அப்படியானால் மட்டுமே உங்களை வீட்டுக்குள் அனுமதிப்பேன்” என்றாள்.

அன்னை மகாலட்சுமி புன்னகை செய்தார். தீபாவளி அன்று யார் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வீட்டில் வாசம் செய்வேன் என்கிற தன் சங்கல்பத்தை அறிந்த பெண்ணாக இருக்கிறாளே என்பதை நினைத்து வியந்தார். பிறகு “உன் வீட்டில் மட்டுமே தீபங்கள் ஒளிர்கின்றன. என்னுடைய சங்கல்பமும் நிறைவேற வேண்டும். எனவே, நான் உன் வீட்டுக்கு மருமகளாகவே வருகிறேன்” என்று அருள்புரிந்தார்.

அதன்பிறகு அந்தக் குடும்பம் முன்பு இழந்த செல்வத்தைவிடப் பல மடங்கு செல்வம் பெற்று, மகிழ்ச்சியுடனும் ஐஸ்வரியத்துடனும் வாழ்ந்ததாக இந்தக் கதை கூறுகிறது.

இந்தக் கதையின் மூலம் தீபாவளி அன்று செய்ய வேண்டிய மகாலட்சுமி பூஜையின் சிறப்பை நமக்கு நன்கு உணர்த்துகிறது. அதனால்தான் வடநாட்டில் தீபாவளிப் பண்டிகை நாளின் மாலைப்பொழுதில் லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்குப் போடுவது வழக்கம்.

எண்ணெய்க்குளியல்... மகாலட்சுமி பூஜை எப்போது?

ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது சதுர்த்தசி திதி அதிகாலை வேளையில் இருக்க வேண்டும். இந்த ஆண்டு நாளைக் காலை தீபாவளி அமைகிறது. எனவே எண்ணெய்க்குளியல் செய்ய வேண்டிய நேரம் 8.11.26 அன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள். பொதுவாக அதிகாலையில் எண்ணெய்க்குளியல் செய்யக்கூடாது. அதேபோன்று வெந்நீரிலும் குளிக்கக்கூடாது. ஆனால் தீபாவளி அன்று அதைச் செய்யலாம். காரணம் அந்த நாளில் எண்ணெயில் லட்சுமியும் வெந்நீரில் கங்கையும் நிறைந்திருப்பாள் என்பது ஐதிகம்.

காலையில் குடும்பத்தில் அனைவரும் நீராடியபின் புத்தாடை உடுத்தி இறைவனை வணங்க வேண்டும். அதன்பின் குடும்பப் பெரியவர்களை வணங்கி ஆசி பெற்றுப் பின்னரே இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாசு வெடிக்கச் செல்லலாம்.

மாலை மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். மகாலட்சுமியின் படம் அல்லது விக்ரகத்துக்கு அலங்காரம் செய்து நறுமண மலர்கள் சாத்தி தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும். நாளை மாலை 6.00 மணி முதல் 7 மணிக்குள் குரு ஹோரையில் பூஜை செய்ய வீட்டில் செல்வ வளம் சேரும். இந்த வேளையில் வெள்ளி வாங்குவதும் தானம் கொடுப்பதும் மிகவும் விசேஷம். இரண்டுமே பன்மடங்கு செல்வ வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கும்.

கேதார கௌரி விரதம்

ஐப்பசி அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது `புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாள்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கெளதம முனிவர் அம்பாளிடம் விவரித்தாராம். இந்த முறைப்படி அம்பாள் விரதம் இருந்து ஈசனின் இடபாகத்தைப் பெற்றாள் என்கிறது புராணம். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரித்து எப்போதும் இணைந்திருக்கும் வரமும் சுபிட்சமும் பெற இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

சிலர், ஐப்பசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 நாள்கள் விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு. அதேபோல், ஐப்பசி தேய்பிறை அஷ்டமி தொடங்கி சதுர்த்தசி வரையிலான 7 நாள்கள் கடைப்பிடிப்போரும் உண்டு. அதுவும் முடியாதவர்கள் சிலர் தேய்பிறை சதுர்த்தசி அன்று மட்டும் விரதம் கடைப்பிடிப்பார்கள். இதை சாமான்யபட்சம் என்பார்கள் பெரியோர்கள்.

இந்த நான்கு காலத்திலும் இயலாதோர் ஐப்பசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசி அன்று விரதம் தொடங்கி அமாவாசையில் பூர்த்தி செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு விரதம் நாளை வருகிறது. நாளை பகல் 12 மணி வரை சதுர்த்தசி திதி அமைந்துள்ளது. அதன்பின் அமாவாசை. எனவே அமாவாசை தர்ப்பணம் செய்பவர்களும் நாளையே செய்யலாம். கேதார கௌரி விரதத்தையும் நாளையே பூர்த்தி செய்யலாம்.

இந்த விரதத்தை மணமாகாத பெண்கள் கடைப்பிடிக்க விரைவில் திருமண வரம் கிடைக்கும். நாளை மாலை கேதார கௌரி பூஜை செய்து விரதத்தைப் பெண்கள் பூர்த்தி செய்யலாம்.

இப்படி நலமும் வளமும் தரும் அற்புதமான நாளாக இந்த ஆண்டு தீபாவளித் திருநாள் அமைகிறது. வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User