'மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது.!' - பாஜகவிடம் கட்சியை அடகு வைத்த ஜி.கே.வாசன்?

Mar 25, 2026 - 19:00
 0
'மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது.!' - பாஜகவிடம் கட்சியை அடகு வைத்த ஜி.கே.வாசன்?

என்.டி.ஏ கூட்டணியில் 5 தொகுதிகளை வாங்கிக் கொண்டு பாஜக-வின் தாமரை சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டிருக்கிறார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். பாஜகவை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளாத உண்மையான காங்கிரஸ்காரர் மூப்பனார். அவரின் மகன் கட்சியை மொத்தமாக பாஜகவிடம் அடிய பணிய வைத்து தாமரை சின்னத்திலேயே போட்டி என்றும் அறிவித்திருப்பதை பார்த்து, 'மூப்பனாரின் ஆன்மா மன்னிக்குமா..' என கொந்தளிக்கின்றனர் மூப்பனார் விசுவாசிகள்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

1991 சட்டமன்றத் தேர்தலை அதிமுக கூட்டணியோடு இணைந்து சந்தித்தது காங்கிரஸ். ராஜிவ் காந்தியின் இறப்பால் உருவான அனுதாப அலையில் அந்த கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், அந்த 5 ஆண்டுகால ஜெ.வின் ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. எதேச்சதிகார போக்கால் மக்கள் மத்தியிலும் ஜெயலலிதா மீது அதிருப்தி ஏற்பட்டது.

1996 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி செல்லக்கூடாது என மூப்பனார் நினைக்கிறார். ஆனால், அகில இந்திய தலைமை அதிமுகவுடன் கூட்டணி செல்லவே விரும்புகிறது. அந்த சமயத்தில்தான் காங்கிரஸை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார் மூப்பனார். ரஜினியின் ஆதரவுடன் திமுகவுடன் கூட்டணி வைத்து 40 இடங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமாகா 39 இடங்களில் பெரு வெற்றிப் பெற்றது.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

1999 சமயத்தில் திமுக மத்தியில் பாஜக கூட்டணியோடு இணைகிறது. காங்கிரஸூக்கு நேரெதிராக நிற்கும் வலதுசாரி சக்தியோடு திமுக சேர்ந்ததில் மூப்பனாருக்கு உடன்பாடில்லை. உடனடியாக கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியே வருகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்கிறார். மூப்பனாருக்கு படுதோல்வி. 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே மூப்பனாருக்கு வலைவிரித்தன. ஆனால், எக்காரணம் கொண்டும் பாஜகவை ஆதரிக்கக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்கு செல்லாமல், அதிமுகவை டிக் அடித்தார் மூப்பனார்.

இதுசம்பந்தமாக பேசும் மூப்பனார் விசுவாசிகள் சிலர், 'அதிமுகவை எதிர்த்துதான் மூப்பனார் தமாகா கட்சியையே தொடங்கினார். ஆனால், மதவாத சக்திகளை எதிர்க்க வேண்டுமென வரும்போது எந்த சமரசமும் செய்யாமல் ஈகோ பார்க்காமல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் மூப்பனார். எந்த காலத்திலும் அவர் வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவாக நின்றதே இல்லை.

மூப்பனாரின் நெருங்கிய நண்பர் ரஜினி. திமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால் அவரே கொஞ்சம் வருந்தினார். ஆனால், தனிப்பட்ட நட்பும் தனக்கு கிடைக்கும் சுயலாபங்கள் எதையும் மனதில் வைக்காமல் மூப்பனார் பாஜகவுக்கு எதிராக நின்றார்.

மூப்பனார்
மூப்பனார்

இன்று அவரின் மகன் பாஜகவின் தாமரை சின்னத்தில் 5 தொகுதிகளை வாங்கிவிட்டு எந்த உறுத்தலும் இன்றி தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இன்னமும் கட்சியை கொண்டு பாஜகவில் இணைக்கவில்லை, அவ்வளவுதான். மற்றபடி வலதுசாரி சக்திகளுடன் அத்தனை நெருக்கமாக இருக்கிறார். மூப்பனாரின் ஆன்மா வாசனை ஒரு போதும் மன்னிக்காது' என்கின்றனர்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0