Busiest Airport: அமெரிக்க கோட்டையை அசைத்துப் பார்க்குமா துபாயும் டோக்கியோவும்? | புள்ளிவிவரங்கள்

Apr 21, 2026 - 15:02
 0
Busiest Airport: அமெரிக்க கோட்டையை அசைத்துப் பார்க்குமா துபாயும் டோக்கியோவும்? | புள்ளிவிவரங்கள்

சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (ACI) வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை 2025, வெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் விமான நிலையங்களுக்குள் பாய்ந்தோடும் கோடிக்கணக்கான மனிதர்களின் இயக்கத்தை, அவர்களின் கனவுகளை, வர்த்தகத்தை வரைபடமிட்டுக் காட்டுகிறது.

980 கோடி பயணிகள்

2025-ம் ஆண்டில் மட்டும், உலகெங்கிலும் சுமார் 980 கோடி பயணிகள் விமானங்களில் பறந்திருக்கிறார்கள்.

இது 2024-ம் ஆண்டை விட 3.6 சதவீதம் அதிகம். இந்த மாபெரும் பயணிகள் வெள்ளத்தில், எந்த விமான நிலையம் முதலிடத்தில் மிதக்கிறது? கடந்த 28 ஆண்டுகளில் 27 முறை தன் சிம்மாசனத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காத அமெரிக்காவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் (ATL), இந்த ஆண்டும் தனது மகுடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

2025-ல் மட்டும் 10.63 கோடி பயணிகளைக் கையாண்டு, உலகின் பரபரப்பான விமான நிலையமாக அது மீண்டும் உருவெடுத்திருக்கிறது.

அட்லாண்டாவின் அசைக்க முடியாத கோட்டையில் மெல்லிய விரிசல் விழுந்திருக்கிறதோ என்ற கேள்வியை புள்ளிவிவரங்கள் எழுப்புகின்றன. காரணம், 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதன் பயணிகள் எண்ணிக்கை 1.6 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. அதே சமயம், அதன் போட்டியாளர்களான துபாய் மற்றும் டோக்கியோ விமான நிலையங்கள் அசுர வேகத்தில் முன்னேறி, அட்லாண்டாவுடனான இடைவெளியைக் கணிசமாகக் குறைத்துள்ளன.

மறுபுறம், சர்வதேசப் பயணிகளின் போக்குவரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) தனியொருவனாக ஆட்சி செய்கிறது. ஒட்டுமொத்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், நாடுகளைக் கடந்து பயணிக்கும் பயணிகளின் முதல் தேர்வாக துபாய் திகழ்கிறது. சர்வதேசப் பயணிகளின் தலைநகரமாக விளங்கும் துபாயைத் தொடர்ந்து, லண்டன் ஹீத்ரோ (LHR), சியோலின் இன்சியான் (ICN) மற்றும் சிங்கப்பூர் சாங்கி (SIN) விமான நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன.

ஒட்டுமொத்தப் பட்டியலை உற்று நோக்கினால், முதல் 10 இடங்களில் அமெரிக்காவின் நான்கு விமான நிலையங்கள் (அட்லாண்டா, டாலஸ்/ஃபோர்ட் வொர்த், சிகாகோ ஓ'ஹேர், டென்வர்) இடம்பெற்றுள்ளன. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் அமெரிக்காவின் பெரும் பலத்தைக் காட்டுகிறது.

அதேநேரம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் விமான நிலையங்கள், குறிப்பாக டோக்கியோ ஹனேடா (HND), மிக வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்து, உலக விமானப் போக்குவரத்தின் ஈர்ப்பு மையம் மெல்ல மெல்ல கிழக்கு நோக்கி நகர்வதை காட்டுகிறது. மேலும், விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை எண்ணிக்கையில், அதாவது இயக்கங்களின் அடிப்படையில், சிகாகோ ஓ'ஹேர் விமான நிலையம் உலகிலேயே முதலிடத்தில் இருப்பது ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரம்.

ஆக, அட்லாண்டா தன் கிரீடத்தைத் தக்கவைத்திருந்தாலும், துபாயின் சர்வதேச ஆதிக்கமும், டோக்கியோவின் அதிவேக வளர்ச்சியும் அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் போட்டியை இன்னும் கடுமையாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. !

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0