‘வணக்கம் தமிழ்நாடு மக்களே’ – கோவையில் வாக்காளர்களை வரவேற்ற ‘டினா’ ரோபோ!

Apr 23, 2026 - 10:32
 0
‘வணக்கம் தமிழ்நாடு மக்களே’ – கோவையில் வாக்காளர்களை வரவேற்ற ‘டினா’ ரோபோ!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1,065 இடங்களில் 3,540 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 182 வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்கு சாவடியாக கண்டறியப்பட்டு, அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வரும் தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடிகள், பசுமை வாக்குச்சாவடிகள் மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் நிர்வகிக்கும் பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று  வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு, ஒரு ரோபோ பூக்களை வழங்கி வரவேற்றது வியப்பில் ஆழ்த்தியது. இந்த ரோபோவை அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். 'டினா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, ஜாய் ஸ்டிக் கருவியின் உதவியுடன் இயக்கப்பட்டது.

டினா ரோபோ
டினா ரோபோ

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “வணக்கம் தமிழ்நாடு மக்களே, நான் உங்கள் டீனா ரோபோ பேசுகிறேன். உங்கள் வாக்கு, உங்கள் சக்தி. அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று கண்டிப்பாக வாக்களியுங்கள். தயவு செய்து உங்கள் பெயரை சரி பார்த்து, வரிசையில் நின்று வாக்களியுங்கள். வாக்களிப்போம், தமிழ்நாட்டை வளர்ப்போம்” என ரோபோ பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நாளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ரோபோ வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர். வாக்குச்சாவடி வரவேற்பு அளித்த ரோபோவை பார்த்து, ஆச்சரியமடைந்த வாக்காளர்கள் அதனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0