"நான் ஹீரோவாக அறிமுகமாகிறேனா?" - விளக்கமளிக்கும் சாய் அபயங்கர்
தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான். சூர்யாவின் 'கருப்பு', அல்லு அர்ஜுனின் 'ராக்கா' எனப் பல பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர்.
இதில், சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவரை அப்படத்திலிருந்து சாய் அபயங்கர் இசையில் உருவாகியிருக்கும் மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. 
முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருந்தார். அவர் இப்படத்திலிருந்து விலகிய பிறகு சாய் அபயங்கர் இசையமைப்பாளராகப் படத்திற்கு வந்தார்.
சமீபத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சாய் அபயங்கருடன் இணைகிறோம் எனப் பதிவிட்டிருந்தனர். அப்பதிவிற்குப் பிறகு, ஏஜிஎஸ் தயாரிப்பில் சாய் அபயங்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார் என தகவல்கள் பரவின.
அந்தத் தகவல்களுக்கு ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்தியப் பதிப்பிற்கு அளித்திருக்கும் பேட்டியில் சாய் அபயங்கர் விளக்கமளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் சாய் அபயங்கர், "அது பொய்யான தகவல். அது உண்மை கிடையாது. நான் ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளேன்.
அதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வரும். நான் நடிக்கவில்லை. சொல்லப்போனால், எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்றுகூடத் தெரியாது. எனக்கு யதார்த்தமாகவே நடிப்பு வருமென்றால், நான் நடிக்கப் போயிருப்பேன். 
ஆனால், எனக்கு நடிப்பில் அவ்வளவு திறமை கிடையாது. நடனமாடலாம். ஆனால், சில விஷயங்களைப் பொறுத்தமட்டில், அது இயற்கையாகவே உங்களுக்குள் இருக்க வேண்டும்.
மியூசிக், நடிப்பும் நமக்குள் இருக்க வேண்டும். எனக்கு என்னுடைய மியூசிக் வீடியோக்களில் நடிக்கப் பிடிக்கும்" எனக் கூறியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0