"அவர் பாடகர்னுகூட தெரியாது; அதனால என் பசங்க படிப்பும் நின்னுடுச்சு!" - கலங்கும் ரிச்சர்ட் மனைவி

Apr 22, 2026 - 17:02
 0
"அவர் பாடகர்னுகூட தெரியாது; அதனால என் பசங்க படிப்பும் நின்னுடுச்சு!" - கலங்கும் ரிச்சர்ட் மனைவி

பின்னணிப் பாடகர் ரிச்சர்ட் அலிசன் நாதன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுச் சிரமங்களைச் சந்தித்து வரும் அவருடைய குடும்பத்தினருக்குச் சமீபத்தில் கே.பி.ஒய் பாலா உதவி செய்திருந்தார்.

ரிச்சர்ட் பாடிய 'நங்கை' பாடல்
ரிச்சர்ட் பாடிய 'நங்கை' பாடல்

ரிச்சர்ட் அலிசன் நாதன், 'எங்கேயும் காதல்' திரைப்படத்தில் 'நங்கை', 'ரெமோ' திரைப்படத்தில் வரும் 'மீச பியூட்டி', 'நண்பேண்டா' திரைப்படத்தில் 'நீ சன்னோ' உள்ளிட்ட பல ஹிட் பாடல்களைப் பாடியவர்.

ஒற்றை நபராகக் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டவருக்கு இப்படியான நிலைமை ஏற்பட்டதால் அவருடைய மகன்களின் படிப்பும் இப்போது தடைபட்டிருக்கிறது.

பாடகர் ரிச்சர்ட் உடல்நிலை குறித்து நம்மிடையே பேசிய அவருடைய மனைவி, "என்னுடைய கணவருக்குக் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கவாதம் (Stroke) ஏற்பட்டுச்சு.

அப்போதிருந்து எங்களுக்குக் கடினமான காலம் தொடங்கிடுச்சு. அதுல இருந்து நாங்க ரொம்பக் கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். என்னுடைய கணவர் ஹிட் பாடல்கள் பாடியிருக்கார்.

ஆனா, இவர் பாடின பாடல்கள் பற்றிக்கூட யாருக்கும் தெரியாது. சொல்லப்போனால், இவரொரு பாடகர் என்பதே நிறைய பேருக்குத் தெரியாது. ஏன்னா, இதைப் பற்றி வெளில தெரியப்படுத்த வேண்டாம்னு இருந்துட்டாரு. அவரும் அதைத் தெரியப்படுத்தணும்னு விரும்பல.

ரிச்சர்ட் - பின்னணி பாடகர்
ரிச்சர்ட் - பின்னணி பாடகர்

'எங்கேயும் காதல்' படத்துல வர்ற 'நங்கை', 'ரெமோ' படத்துல வர்ற 'மீச பியூட்டி', 'நண்பேண்டா' படத்துல வர்ற 'நீ சன்னோ' போன்ற பாடல்களைப் பாடினது என்னுடைய கணவர்தான். இதைத்தவிர, தெலுங்கு மொழியிலும் சில பாடல்களைப் பாடியிருக்காரு.

ஆனா, இது வெளிய தெரியணும்னு அவர் நினைச்சதே இல்ல. எங்களுக்குப் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் இருந்தபோதும், இந்த விஷயத்தை அவர் வெளிப்படுத்திக்கல" என்றவர், "என் கணவரை வந்து பார்த்து கே.பி.ஒய் பாலா சார் எங்களுக்காக உதவிகள் செய்திருந்தார்.

அவரைப் போல இன்னும் சிலர் போன் பண்ணிப் பேசினாங்க. ஆனா, நேரடியா யாரும் வந்து இதுவரைக்கும் பார்க்கல. நாங்களும் உதவிகள் கிடைக்கும்னு நம்பிக்கையோட இருக்கோம்.

சொல்லப்போனால், என்னுடைய கணவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ஸ்மோக்கிங், டிரிங்கிங்னு எந்தக் கெட்ட பழக்கமும் அவருக்குக் கிடையாது. அவர் ஒரு ஃபேமிலி மேன்.

அவர் எப்போதுமே குடும்பம்தான் முக்கியம்னு யோசிப்பார். பசங்களை நல்லா படிக்க வைக்கணும், குடும்பத்தைக் காப்பாத்தணும்னு ரொம்ப உழைச்சாரு. அதுக்காகத் தொடர்ந்து வேலை, வேலைனு முழு கவனத்தோட இருந்தாரு. அப்படி இருந்ததுனால அவருக்குப் பயங்கரமான ஸ்ட்ரெஸ் ஏற்பட்டிருச்சு.

என் கணவருடைய இந்த நிலைமைக்கு ஸ்ட்ரெஸ் தான் மெயின் காரணம்னு டாக்டர்ஸும் சொன்னாங்க. அதுக்குக் கொரோனா காலம்தான் காரணம்.

ரிச்சர்ட் - பின்னணி பாடகர்
ரிச்சர்ட் - பின்னணி பாடகர்

என் கணவர் முழுமையாக மியூசிக் பக்கம்தான் கவனம் செலுத்திட்டு இருந்தாரு. கோவிட் சமயத்துல, இரண்டு வருடங்கள் முழுமையாக வேலை இல்லாம போனது அவருக்குப் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது.

அப்போ, என் கணவர் குடும்பத்தைச் சமாளிக்கிறது பத்தி நிறைய அழுத்தம் எடுத்துகிட்டாரு. பிறகு, 2022-ல தான் மறுபடியும் வேலைகள் வர ஆரம்பிச்சது.

ஆனா 2023-ல அவருக்கு இப்படியான நிலைமை வந்துடுச்சு. என் கணவர் இப்போ அவருடைய ஹெல்த் மேல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்னு ஃபீல் பண்ணாரு" என்றார்.

தொடர்ந்து பேசியவர், "இப்போதான் கணவருக்கு இப்படி ஆகிடுச்சுனு வெளில தெரியப்படுத்தியிருக்கோம். கடவுள் அருளால் உதவி கிடைக்கும்னு நம்பிக்கையாக இருக்கோம். என் கணவருடைய மருத்துகளுக்கு நிறைய பணம் செலவாகுது.

எங்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்காங்க. குடும்பச் சூழ்நிலைகளால் இப்போ என்னுடைய மகன்களால படிக்க முடியல. எங்களுடைய பொருளாதார நிலைமை அப்படி இருக்கு. வீட்டு வாடகை கட்டணும்.

ரிச்சர்ட் - பின்னணி பாடகர்
ரிச்சர்ட் - பின்னணி பாடகர்

பிறகு, இவருடைய மெடிக்கல் செலவுகளும் இருக்கு. நானும், என்னுடைய ஆண் பிள்ளைகளும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல்தான் இருக்கோம். முன்பு, அதுவே என் கணவருக்கு ஸ்ட்ரெஸ் உருவாக்குச்சு.

இப்போ எங்களுக்கு எல்லாரோட பிரார்த்தனையும் தேவை. என்னுடைய குடும்பம் நல்ல நிலைமைக்கு வரணும். என்னுடைய கணவருக்கு உடல்நிலை சரியாகி, மீண்டு வரணும்" என்றார் வருத்தத்துடன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0