"உயரத்தால் பட வாய்ப்புகளை இழந்தேன்; ஆனால் சல்மான் கான் மட்டுமே..." - 'ஆசை' பட நடிகை பூஜா பத்ரா

May 14, 2026 - 19:31
0
"உயரத்தால் பட வாய்ப்புகளை இழந்தேன்; ஆனால் சல்மான் கான் மட்டுமே..." - 'ஆசை' பட நடிகை பூஜா பத்ரா

உத்தரப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பூஜா பத்ரா, அஜித் நடித்த ஆசை படத்தில் படத்தில்தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். சரத்குமார் நடித்த ஒருவன் படத்திலும் பூஜா பத்ரா நடித்திருந்தார். கடைசியாக தமிழில் அவர் நடித்த படமென்றால் அது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம்தான்.

அதன் பின்னர், இந்தி படங்களில் மட்டுமே ஆர்வம் செலுத்தி நடித்து வந்தார். 2021ம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு படத்திலும் அவர் கமிட்டாகவோ நடிக்கவோ இல்லை. இந்த நிலையில் அவர் தனியார் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்திருந்தார்.

நடிகை பூஜா பத்ரா
நடிகை பூஜா பத்ரா

அதில், ``மாடலிங் துறையில் எனது உயரம் கொண்டாடப்பட்டாலும், சினிமாவில் அது எனக்குப் பெரும் சுமையாக மாறியது. அப்போது என்னுடன் மாடலிங் செய்த சங்கீதா பிஜ்லானி, 'நீ மிகவும் உயரமாக இருப்பதால் சினிமாவில் உனக்கு வாய்ப்பு கிடைக்காது' என்று வெளிப்படையாகவே கூறினார். அவர் சொன்னது போலவே, பல நல்ல படவாய்ப்புகளை எனது உயரத்தின் காரணமாக நான் இழக்க நேரிட்டது. இதற்கு முக்கியக் காரணமாக, அன்றைய காலகட்டத்தில் கதாநாயகர்களை விட கதாநாயகி உயரமாக இருக்கக்கூடாது என்ற எழுதப்படாத விதி இருந்தது.

திரையில் கதாநாயகன் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, பல முன்னணி நடிகர்கள் என்னுடன் நடிக்கத் தயங்கினர் அல்லது பாதுகாப்பற்ற உணர்வை வெளிப்படுத்தினர். குட்டையான கதாநாயகர்களுடன் குளோசப் காட்சிகளில் நடிக்கும்போது, சமமாகத் தெரிவதற்காக கால்களைப் பிளந்து கொண்டு குனிந்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஹீல்ஸ் போட அனுமதிக்கப்படாமல், எப்போதும் தட்டையான காலணிகளையே அணியுமாறு ஆடை வடிவமைப்பாளர்கள் அறிவுறுத்தினர்.

நடிகை பூஜா பத்ரா
நடிகை பூஜா பத்ரா

இந்தச் சூழலிலும் நடிகர் சல்மான் கான் மட்டும் விதிவிலக்காக இருந்தார். 'கஹின் பியார் நா ஹோ ஜாயே' படத்தில் நடித்தபோது, சல்மான் என் உயரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. 'நீ தாராளமாக ஹீல்ஸ் அணிந்து கொள், எனக்கு பிரச்னையில்லை' என்று அவர் கூறுவார். தற்போது தீபிகா படுகோன், க்ரீதி சனோன் போன்ற உயரமான நடிகைகள் சினிமாவில் ஜொலிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்ப வளர்ச்சியும் சினிமாஸ்கோப் திரைகளும் இப்போது உயர வேறுபாடுகளை ஒரு பொருட்டாக மாற்றவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User