ராமாயணா: ``விமர்சனங்களைக் கண்டு நாம் கலங்கக் கூடாது"- விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
நமித் மல்ஹோத்ரா மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரியின் 'ராமாயணா: ரைஸ் ஆஃப் தி லெஜண்ட்' (Ramayana: Rise of a Legend) திரைப்படத்திற்கு ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவான இப்படத்தின் முதல் பாடலான 'மங்கள் ரங்' கடந்த வாரம் வெளியானது. அதைத் தொடர்ந்து, ராமாயணம் தொடர்பான ஒரு படத்திற்கு 'கவ்வாலி' பாணியிலான இசை அமைப்பு ஏன் கொடுக்கப்பட்டது?
பாடலின் இசை "சனாதன தர்மத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும், படத்தின் ராவண தாண்டவ இசை மிகவும் 'எலக்ட்ரானிக்' (electronic) முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ரங் என்ற வார்த்தை 'ஆஜ் ரங் ஹை' என்ற சுஃபி பாடலை நினைவூட்டுகிறது என ஏ.ஆர்.ரஹ்மான் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். கடந்த முப்பது ஆண்டுக்கால வாழ்க்கையில், இந்தியத் திரை இசையின் வழக்கமான எல்லைகளை உடைத்தெறிந்த ரஹ்மானுக்கு விமர்சனங்கள் புதியவை அல்ல. அவரது பல மெட்டுகள் மக்களின் மனதைச் சென்றடையச் சில ஆண்டுகள்கூட ஆகியிருக்கின்றன. ஆனால், இந்த முறை கிளம்பியுள்ள எதிர்ப்பு என்பது இந்தியாவில் மாறிவரும் தற்போதைய கலாச்சார மற்றும் சமூகச் சூழலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில், ``நானே என் இசையின் முதல் விமர்சகன். நான் உருவாக்கும் எல்லாமே எனக்கு உடனடியாகப் பிடித்துவிடும் என்று சொல்ல முடியாது. நாங்கள் ஒரு பாடலின் மெட்டை ஒரே நாளில் முடிவு செய்வதில்லை. மாதக்கணக்கில் அந்த எண்ணங்களோடு வாழ்கிறோம். சில மெட்டுகள் ஊறுகாய் போலத்தான். காலம் செல்லச் செல்லத்தான் அதன் அருமை தெரியும். ஆனால் மக்கள் உடனடியாக ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து விமர்சித்து விடுகிறார்கள்.

'எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால், நீங்கள் ஐஸ்கிரீம் விற்கத்தான் போக வேண்டும்' என்ற ஸ்டீவ் ஜாப்ஸின் கூற்றுப்படி, விமர்சனங்களைக் கண்டு நாம் கலங்கக் கூடாது. சமீபத்தில் வெளியான 'மங்கள் ரங்' பாடல் பஜனைகள் மற்றும் திருமணப் பாடல்களில் பயன்படுத்தப்படும் பிலாவல், மாண்ட், பஹாடி போன்ற பாரம்பரிய ராகங்களை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. திரைப்பட இசையில் ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்திற்கு மட்டுமே எல்லை வகுக்க முடியாது.
'ராமாயணா' திரைப்படத்திற்காக ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்தது கிழக்கு மற்றும் மேற்கத்திய இசையின் சிறந்த சங்கமமாக இது இருக்கும். அவரது வருகை சர்வதேச அளவில் புதிய பார்வையாளர்களை ஈர்க்கும். இரு வேறு பதிப்புகள், ஐந்து மொழிகள் என மிகப்பெரிய அளவில் 10 படங்களுக்கான உழைப்பு இதில் உள்ளது. இயக்குநர் இம்தியாஸ் அலி மற்றும் பாடலாசிரியர் இர்ஷாத் காமிலுடன் 'ராக்ஸ்டார்', 'ஹைவே', 'தமாஷா', 'அமர் சிங் சம்கீலா'வைத் தொடர்ந்து 'மை வாபஸ் ஆவுங்கா' திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளேன். இம்தியாஸ் அலியுடன் பணியாற்றும் போது பாடல்களை மேலும் சிறப்பாக மாற்றப் போதுமான கால அவகாசம் கிடைக்கும். அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம்.

டைட்டன் கடிகாரம், பூஸ்ட், லியோ காபி போன்ற 30 வினாடி விளம்பர இசைகளில் தொடங்கிய அந்த குறுகிய கால விளம்பர இசைகளை இணைத்து ஒரு 5 நிமிடப் பாடலை உருவாக்கும் நுட்பத்தையே எனது ஆரம்பகாலத் திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தினேன். ஆனால், '99 சாங்ஸ்' படத்தில் 7-8 நிமிடங்கள் நீளும் கதையம்சம் கொண்ட விரிவான பாடல்களை அமைத்தேன். மேடையில் தோன்றத் தயங்கிய நான், 1996-ல் போஸ்னியா போர் நிவாரணத்திற்காக மலேசியாவில் நடந்த கச்சேரியில்தான் முதன்முதலில் நேரலையில் பாடினேன்.
2015-ல் ரஞ்சித் பாரோட் எனது நேரலை நிகழ்ச்சிகளின் இசை இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகே மேடை பயம் நீங்கியது. இப்போது ஸ்டுடியோவில் தனியாக இசைப்பதை விட, ஆயிரக்கணக்கான மக்கள் என் பாடல்களை ஒன்று சேர்ந்து பாடுவதைப் பார்க்கும் போது மிகப்பெரிய நெகிழ்ச்சி ஏற்படுகிறது." என்றார்.
தற்போது ரஹ்மான் தனது சர்வதேச 'வண்டர்மென்ட் டூர்' (Wonderment Tour) நேரலை கச்சேரிகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சேகர் கபூரின் 'மாசூம்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்', மணி ரத்னத்தின் 'இஞ்சி வெள்ளம்' மற்றும் 'ராமாயணா: பார்ட் 2' ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)