தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்!

Nov 01, 2026 - 14:30
0
தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், லெவிஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவரது வீட்டில் 1,000 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்தார்.  இவர் மீது தென்பாகம் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே,  "எனது உயிருக்கு  அச்சுறுத்தல் உள்ளது" எனக் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

இந்த நிலையில், கடந்த 30-ம் தேதி தேவர் ஜெயந்திவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை முதலே மது விற்பனை மும்முரமாக நடந்து வந்துள்ளது.  ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட மதுப்பிரியர்களுக்கு மட்டும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், டென்ஷனான சில முக்கிய மதுப்பிரியர்கள், மதுவிலக்கு தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கூறியுள்ளனர்.

அந்த வீட்டில் நடத்திய சோதனையில் 740 மதுபாட்டில்கள், பீர் பாட்டில்கள் உள்ளிட்ட மொத்தம் சுமார் 900 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்ததுடன் தென்பாகம் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில், சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக அங்கு பதுக்கி வைத்தது  பார் உரிமையாளர் வெங்கடேஷ்தான் என்பது தெரியவந்தது. அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளது. இதனடிப்படையில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர் போலீஸார் பாதுகாப்பு இருக்கும் போதுதான் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்துள்ளது தெரியவந்தது.

தெற்கு காவல் நிலையம்

இதனையடுத்து அவரை கைது செய்ய தென்பாகம் போலீசார் தயங்கி வந்த நிலையில், நெல்லை மண்டல டி.ஐ.ஜி திருநாவுக்கரசர் மற்றும் எஸ்.பி., சிவபிரசாத் போன்ற உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் பார் உரிமையாளர் வெங்கடேசை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போலீஸ் வழங்கப்பட்ட நிலையில் வெங்கடேஷ், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அவருக்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரருக்கும் பணி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து மதுவிலக்கு டி.எஸ்.பி விசாரணை நடத்தி அறிக்கை தர எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு காவல் நிலையம்

”தூத்துக்குடியில் சட்டவிரோத மதுவிற்பனை, லாட்டரி சீட்டுகள், ஒரு, இரு, மூன்று நம்பர்கள் லாட்டரி விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது. இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொறுப்பில் உள்ள உளவுத்துறை போலீஸார், தனிப்பிரிவு போலீஸார், டி.எஸ்.பி அலுவலக பணியில் உள்ள போலீஸார் அனைவருமே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் நெருக்கமாக உள்ளனர். இது குறித்து உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்கள், ஜி-பே, போன்-பே உள்ளிட்டவற்றை நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் பலரும் சிக்குவார்கள். இதனால் மட்டுமே இது போன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User