"முதலமைச்சரே உருவக்கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்" - பெ.சண்முகம் கண்டனம்

Sep 08, 2026 - 08:00
0
"முதலமைச்சரே உருவக்கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்" - பெ.சண்முகம் கண்டனம்

சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.

சட்டமன்றம்
முதல்வர் விஜய்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த ‘பதிலுரையில்’ எந்த பதிலும் இடம் பெறவில்லை.

மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.

முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டதை உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது, அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.

சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும்.

பெ.சண்முகம் - முதல்வர் விஜய்

கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால் ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User