50 ஃபண்டுகளில் முதலீடு... Mutual Fund-ல் டைரக்ட்-ஆக முதலீடு செய்பவர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன?

Oct 30, 2026 - 11:30
0
50 ஃபண்டுகளில் முதலீடு... Mutual Fund-ல் டைரக்ட்-ஆக முதலீடு செய்பவர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இரு வகைகளில் முதலீடு செய்யலாம். ஒன்று, ரெகுலர்; மற்றொன்று, டைரக்ட். ரெகுலர் முறை என்பது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் மூலம் முதலீடு செய்வது; டைரக்ட் என்பது மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் மூலம் அல்லாமல் முதலீட்டாளரே நேரடியாக முதலீடு செய்வது.

அதாவது, ரெகுலர் முறை என்பது ஒரு மருத்துவரை அணுகி, நோய்க்கேற்ப அவர் எழுதித் தரும் மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவது; டைரக்ட் முறை என்பது முதலீட்டாளரே மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று மருந்துகளைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது.

இந்த இரு முறைகளுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், எக்ஸ்பென்ஸ் ரேஷியோ. இரண்டு முறைகளிலும் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ கட்டணத்தைத் தந்தாக வேண்டும். டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ உதாரணமாக, 1% எனில், ரெகுலர் முறையில் இது 1.5% என்கிற மாதிரி இருக்கும்!

மருத்துவரை அணுகி, மருத்துவ ஆலோசனை பெறவேண்டும் எனில், அவருக்கு உரிய ஆலோசனைக் கட்டணத்தைத் தந்தாக வேண்டும் என்பது போல, ரெகுலர் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது 0.50% முதல் 1% வரை கூடுதலாகத் தரவேண்டி இருக்கும்!

மருத்துவ ஆலோசனை
மருத்துவ ஆலோசனை

எதற்கு இந்தக் கூடுதல் கட்டணம்? ஒரு முதலீட்டாளருக்குச் சரியான ஃபண்ட் திட்டத்தை எடுத்துச் சொல்வதுடன் பல்வேறு சேவைகளை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அளிப்பதற்காகத்தான். ஆனால், டைரக்ட் முறையில் முதலீடு செய்யும்போது, சரியான ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது உள்பட பல விஷயங்களை அந்த முதலீட்டாளரே செய்ய வேண்டும் என்பதால்தான் இந்தக் கட்டணக் குறைவு.

ரெகுலர் ஃபண்ட் திட்டங்களில் 0.50% முதல் 1% வரை கூடுதலாகக் கட்டணம் தரவேண்டி இருக்கிறதே என்று நினைத்துப் பலரும் டைரக்ட் முறையில் முதலீடு செய்கிறார்கள். இப்படி முதலீடு செய்யும்போது சரியான ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், அது தெரியாததால் முதலீட்டாளர்கள் செய்யும் தவறுகள் ஒன்று, இரண்டு அல்ல.

டைரக்ட் முறையில் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டாளர் தனது போர்ட்ஃபோலியோவில் 75 ஃபண்டுகளை வைத்திருக்கிறார். இந்த ஃபண்ட் திட்டம்தான் சிறந்தது, அந்த ஃபண்ட் திட்டம்தான் சிறந்தது என்று அவர் எங்கெல்லாம் படிக்கிறாரோ, அந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதால், வந்த பிரச்னை இது.

இந்த 75 ஃபண்ட் திட்டங்களின் மூலம் கிடைக்கும் லாப, நஷ்டத்தை எப்படிச் சரிபார்ப்பது என்று தெரியாமல் இப்போது தவித்துக்கொண்டு இருக்கிறார் அந்த முதலீட்டாளர்.

ஃபண்ட் முதலீடு

இன்னொரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட வகையான ஃபண்ட் திட்டங்களே சரி என்று நினைத்து, அதில் மட்டுமே முதலீடு செய்து வருகிறார். உதாரணமாக, சில்வர் ஃபண்ட் திட்டங்களில் மட்டுமே வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் ஆறு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்.

இந்த ஆறு திட்டங்களின் மூலம் கிடைக்கும் லாபமும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் இருக்கும் என்கிறபோது ஏன் ஆறு ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும் என்கிற கேள்விக்கு அந்த முதலீட்டாளரிடம் பதில் இல்லை.

இன்னும் சில முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை எந்த வகையிலும் டைவர்சிஃபை செய்யாமல், எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் அல்லது இன்டெக்ஸ் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு பல வகையான செக்டோரல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள்.

முதலீடு
முதலீடு

மியூச்சுவல் ஃபண்டுகளில் நேரடியாக முதலீடு செய்யும்போது இவ்வளவு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கிறது. இந்தப் பிரச்னைகளைச் சந்திக்காமல் இருக்க வேண்டும் எனில், ஒரு நிபுணரில் ஆலோசனையுடன் முதலீடு செய்ய வேண்டும். இந்த நிபுணரிடம் இருந்து ஆலோசனை பெறவேண்டும் எனில், அவருக்கு உரிய கட்டணத்தைத் தந்தாக வேண்டும்.

அவர் எத்தனை ஆயிரம் ரூபாயைக் கட்டணமாகக் கேட்பார் என்று சொல்ல முடியாது. தவிர, இது ஒரு முறை கட்டும் கட்டணம் அல்ல. ஆண்டுக்கு ஒருமுறை ஆலோசனை பெறவேண்டும் எனில், அப்போதெல்லாம் கட்டணம் கட்டித்தான் ஆகவேண்டும். பல கோடி ரூபாய்க்கு முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

ஆக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்பவர்கள் இத்தனை சிக்கல்களையும் சந்தித்தாக வேண்டி இருக்கிறது. ஆனால், இது பற்றி எல்லாம் தெரியாமல்தான் தங்களுக்குத் தெரிந்த அளவில் ஒரு முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்டில் நேரடித் திட்டம் மூலம் முதலீடு செய்து வருகிறார்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User