பூடான்: `பனிப்பாறை ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு' - மேற்கு வங்கம், அசாமுக்கு எச்சரிக்கை
பூடான் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள காசா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷிந்தாபு பனிப்பாறை ஏரி. மோ சூ ஆற்றின் உற்பத்தியிடத்தில் அமைந்துள்ள ஷிந்தாபு ஏரி, பூடானின் 17 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தப் பனிப்பாறை நேற்று மாலை திடீரென உடைந்ததால், அப்பகுதியில் கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, காசா மாவட்டத்தில் மோ சூ (Mo Chhu) ஆற்றின் கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'காசா தசாச்சு' (Gasa Tshachu) இயற்கை வெந்நீர் ஊற்று மையத்தின் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டு நாசமாகியுள்ளன. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அப்பகுதி மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று மோ சூ ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கின் போதும், இந்தக் காசா தசாச்சு வெந்நீர் ஊற்று மையம் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வடக்கு பூடானில் உற்பத்தியாகும் சன்கோஷ் ஆறு, மோ சூ மற்றும் போ சூ ஆகிய முக்கிய உபநதிகளின் சேர்க்கையால் உருவாகி, பின்னர் அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது. எனவே, பூடானை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், பூடான் அரசு மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில அரசுகளுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாமின் துப்ரி, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதிகள், அலிப்பூர்துவார் மற்றும் ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்கள் இதனால் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில், சன்கோஷ் (Sankosh) ஆற்றின் கரையில் வாழும் மக்களுக்கு நிர்வாகம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய அலிப்பூர்துவார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஷா, ``பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் முழு வீச்சில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
அனைத்துத் துறைகளும் இணைந்து செயலாற்றி வருவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உரியத் தீர்வு காணப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, புனகா பகுதியில் உள்ள டொச்சுகா-ஜோம்லிங்தாங்-ரிட்சா சிவோக் கிராமங்களில் பாசனப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி நீரேற்றுப் பாசனத் திட்டம் சேதமடைந்துள்ளது. தற்போது இத்திட்டம் செயல்படுவதை நிறுத்தியுள்ளதாகவும், சேதத்தின் முழுமையான அளவு இனிமேல்தான் மதிப்பீடு செய்யப்படும் என்றும் உள்ளூர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் மற்றும் கழிவுகள் புனகா-காசா நெடுஞ்சாலையின் ஜோம்லிங்தாங் பகுதியை மூடியுள்ளன.
உருகும் பனிப்பாறைகளின் அடியில் உள்ள பள்ளத்தாக்குகளில் சேகரிக்கப்படும் பெருமளவிலான நீர், திடீரெனப் பெருகி வெளியேறுவதே 'பனிப்பாறை ஏரி உடைந்த வெள்ளப்பெருக்கு' (Glacial Lake Outburst Flood - GLOF) எனப்படுகிறது.
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் பனிப்பாறைகள் வேகமாக உருகி இத்தகைய ஏரிகள் உருவாகின்றன. இந்த ஏரிகளைத் தாங்கி நிற்கும் இயற்கை அணைகள் (மண் மற்றும் பனிச்சுவர்கள்) உடையும்போது மிக மோசமான வெள்ளம் ஏற்படுகிறது.
கடுமையான மழைப்பொழிவு, நிலச்சரிவு, பனிச்சரிவு, நிலநடுக்கம் அல்லது பனிப்பாறைகள் அதிவேகமாக உருகுவது போன்ற காரணங்களால் இத்தகைய ஏரிகள் உடைந்து பேராபத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)